கருணா – பிள்ளையான் : சமரசப் பேச்சுவார்த்தை

பிரித்தானியாவினால் நடுகடத்தப்பட்ட கருணாவுக்கு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் வழங்கப்பட வேண்டிய இடம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக அரசாங்கத்தின் அனுசரனையில் முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருண, மற்றும் பிள்ளையான் ஆகியோருடன் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினர் கலந்து கொள்ளும் இந்த முக்கிய கூட்டம் எதிர்வரும் சில தினங்களில் நடைபெறவுள்ளது என ரீ.எம்.வி.பியின் செயலாளர் தைலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தின் போது பிள்ளையான் வகிக்கும் முதலமைச்சர் பதவியை கருணாவுக்கு வழங்குவது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

முதலமைச்சர் பதவியை கருணாவுக்கு வழங்க தாம் தயாராக இருப்பதாக கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது, பிள்ளையான் தெரிவித்திருந்தார். பிள்ளையான் இந்த விடயம் தொடர்பில் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ரி.எம்.வி.பியின் அரசியல் பிரிவின் உறுப்பினர்களான பாரதி சின்னத்தம்பி, மங்களம் மாஸ்டர், பிரதீப் மாஸ்டர், மார்க்கன், ஜெயம், ஆசாத் மௌலானாவுடன் தானும் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ளதாக தைலேஸ்வரராஜா குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையான் ரிஎம்.வி.பியின் அதிகாரத்தை உறுதிப்படுத்திய நிலையில் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து கருணா வெளிநாட்டுக்கு சென்றார்.

போலி கடவூச்சீட்டில் பிரித்தானியா சென்ற கருணா கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் திகதி அந்த நாட்டுக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

இந்த நிலையில் கருணா அண்மையில் நாடு திரும்பியதுடன் பிள்ளையான் அவருடன் தொலைப்பேசியில் கலந்துரையாடியாக தைலேஸ்வரராஜா கூறியுள்ளார்.பாதுகாப்பு தரப்பினரின் சிறப்பு பாதுகாப்பில் கருணா கொழும்பில் ரகசியமான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்