24.10.2008.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இடையில் பிளவு ஆழமடைந்துவருவதாகத் தெரிகிறது.
புதிதாக நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள கருணா வழங்கிய ஒரு பேட்டியில், மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்கள் தேவையில்லை என்று தெரிவித்த கருத்து முறுகல் நிலையை தீவிரப்படுத்தியுள்ளது.
கட்சியின் தலைவர் தான் என கருணாவும், பிள்ளையான் ஆதரவாளரான ரகு எனப்படும் குமாரசாமி நந்தகோபனும் கோரிவருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்சிக் கொள்கைகளுக்கு எதிராக அறிக்கைகள் விடுவதை கருணா நிறுத்திக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் கட்சியிலிருந்து அவர் நீக்கப்படுவார் என்று டி.எம்.வி.பி. கட்சி சார்பில் ‘இறுதி எச்சரிக்கை’ ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது.