2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் பிணைய விடுதலை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதையடுத்து அவரும், கலைஞர் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குனர் சரத் குமாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
டெல்லியில் மத்திய புலனாய்வுக் கழக சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழியும், சரத் குமாரும் தாக்கல் செய்த பிணைய விடுதலை மனுக்கள் மீதான தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஓ.பி.சைனி, “பிணைய விடுதலை மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்யலாம்” என்று அறிவித்தார்.
2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைது செய்யப்படும் இவர்கள் இருவரையும் நாளை காலை வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் நிறுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவிற்குப் பின் உடனடியாக கைது செய்யப்பட்ட கனிமொழியும், சரத் குமாரும் திஹார் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
பிணைய விடுதலைக்குத் தகுதியில்லை
கனிமொழியின் பிணைய விடுதலை மனுவை நிராகரித்து 144 பக்கங்கள் கொண்ட உத்தரவை படித்த நீதிபதி ஓ.பி.சைனி, “இந்த வழக்கில் குற்றத்தின் அளவையும், பல சாட்சிகள் கலைஞர் தொலைக்காட்சியின் ஊழியர்கள் என்பதாலும், இவர்களை பிணையில் விடுவித்தால் சாட்சிகளை மாற்றுவார்கள் என்ற ஐயம் உள்ளது” என்று கூறியுள்ளார்.
“2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றத்தின் அளவும், தன்மையும், அதன் தாக்கமும், பதிவு செய்யப்பட்ட சாட்சிகளின் தன்மையும், இவர்கள் இருவருக்கும் பிணைய விடுதலை அளிப்பதற்கான வாய்ப்பை அளிக்கவில்லை. எனவே இந்த பிணைய விடுதலைக்கான தகுதி இல்லாததால் அவைகளை நிராகரிக்கிறேன்” என்று தனது தீர்ப்பிற்கான காரணத்தை நீதிபதி விளக்கியுள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஏப்ரல் 25ஆம் தேதி தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிக்கையில் கனிமொழியை கூட்டுச் சதி செய்ததாக சேர்த்தது மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ). 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய அளிக்கப்பட்ட லஞ்சமே கலைஞர் தொலைக்காட்சி கணக்குக்கு மாற்றப்பட்ட ரூ.200 கோடி என்றும் ம.பு.க. கூறியுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற – செல்பேசி சேவையில் முன் அனுபவம் அற்ற ஸ்வான் டெலகாம் நிறுவனத்தின் பங்குதாரரான டி.பி.ரியால்டி நிறுவனத்தின் உரிமையாளர் ஷாஹித் உஸ்மான் பல்வா, தனது சகோதரரின் நிறுவனங்களின் மூலமான இந்த ரூ.200 கோடியை பல கணக்கு மாற்றங்கள் செய்து கலைஞர் தொலைக்காட்சிக்கு அனுப்பியுள்ளார் என்பது ம.பு.க.வின் குற்றச்சாற்றாகும்.