இந்தியாவின் பல்வேறு வகையான அழுத்தங்கலுக்கு இலங்கை அரசு அடிபணிந்துள்ளதாக ஜேவிபி குற்றம் சாட்டியுள்ளது.
இன்று தேசிய கேட்போர் கூட கட்டிடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை அறிவிக்காது, கனரக ஆயுதங்கள் மற்றும் விமானத் தாக்குதல்களை மோதல் களங்களில் பயன்படுத்த வேண்டாமென இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படின் பொதுமக்களுக்கு உயிர்ச்சேதங்கள் அதிகளவில் ஏற்படும் என்பதால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு நேற்று தெரிவித்திருந்தது. இவ்வாறான ஒரு அறிக்கையை அறிவித்தது ஏன் என எமக்கு புரியவில்லை.
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் வர இருந்தமை பற்றியும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் சேர். ஜோன் ஹோம்ஸ் வருகை பற்றியும் அரசு எவ்விதமான செய்திகளையும் வெளியிடவில்லை.
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் இலங்கைக்கு வந்து பலவிதமான அழுத்தங்களை அரசுக்குக் கொடுத்துள்ளனர்.
இந்தியாவில் தேர்தல்கள் நடைபெறும் காலப்பகுதியில், இந்திய – இலங்கை தொடர்பில் அதிக அக்கறை செலுத்தப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் காலம் நெருங்கி வரும் சந்தர்ப்பத்தில் இந்தியா தேவையற்ற தலையீட்டினை மேற்கொள்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்றவே இந்தியா மும்முரமாக முயன்று வருகிறது” என்றார்