கட்டுநாயக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடும் : ஐரோப்பிய நீதிமன்றம்

நாடுகடத்தப்படும் ஈழத்தமிழர்கள், கட்டுநாயக்காவில் விசாரணைக்கு
உட்படுத்தப்படக்கூடும் என்று, ஐரோப்பிய நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கொழும்புக்கு நாடுகடத்தப்படும் பட்சத்தில், சிறீலங்கா படைகளாலும்,
தமிழீழ விடுதலைப் புலிகளாலும் தான் துன்புறுத்தப்படக்கூடும் என
அச்சம் வெளியிட்டு,

கடந்த 1999ஆம் ஆண்டு பிரித்தானியாவில்
அகதித் தஞ்சம் கோரிய ஈழத்தமிழர் ஒருவரால், சென்ற ஜுன் மாதம்
25ஆம் நாளன்று, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில்
மேன்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கான தீர்ப்பை இன்று வெளியிட்டிருக்கும் ஐரோப்பிய மனித
உரிமைகள் நீதிமன்றம், அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில்
கொழும்புக்கு நாடுகடத்தப்படும் ஈழத்தமிழர்கள்,

கட்டுநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்தில் வைத்து, விசாரணைகளுக்கு
உட்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவோர் முன்னரும் கைது
செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அது தொடர்பான பதிவுகள் சிறீலங்கா
அரசாங்கத்தின் வசம் இருக்கக்கூடும் என்றும்,

அவ்வாறானோரின் உடலில் காயங்கள் எவையும் இருந்தால், அது அவர்கள் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படும் நிலைக்கு இடமளிக்கும் என்றும்
ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

இவ்வாறான அபாயத்தை எதிர்நோக்கக்கூடிய விண்ணப்பதாரிகளை
கொழும்புக்கு நாடுகடத்துவது, மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய
சாசனத்தின் மூன்றாவது சரத்தை மீறும் செயலாக அமையும் என்றும்
ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்டோர் கொழும்பு நகரில் கைது
செய்யப்படுவதற்கான வாய்ப்புக்களை விட, கட்டுநாயக்கா பன்னாட்டு
விமான நிலையத்தில் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள்
அதிகமாக இருப்பதாகவும்,

எனினும் எந்தவொரு அகதித் தஞ்ச விண்ணப்பமும் பொதுப்படையாக அல்லாது, தனிப்பட்ட சூழ்நிலைகளின் அடிப்படையிலேயே ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த வகையில், கொழும்புக்கு நாடுகடத்தப்படும் அனைத்துத்
தமிழர்களும், அபாயத்தை எதிர்நோக்ககூடும் எனக் கூற முடியாது
என்றும், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், துரோகிகளாகவும், எதிரிகளாகவும் இனம்காணப்படுவோர்
தவிர்ந்த ஏனைய சாதாரண பொதுமக்களுக்கு, கொழும்பில் தமிழீழ
விடுதலைப் புலிகளால் எவ்வித ஆபத்தும் ஏற்படப் போவதில்லை
என்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.