விவாத நோக்கில் இக்கட்டுரை பதிவிடப்படுகிறது:
ஒரு வழியாக பரபரப்பான தேர்தல் சூழல் ஓய்ந்திருக்கிற இத்தருணத்தில், ‘யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள்’ என்று ஆர்வமிகுதியுடன் உங்கள் நண்பர்களோடு கதைக்க ஆரம்பித்திருப்பீர்கள். அப்படியான தருணங்களில் உங்களுக்குக் கிடைக்கும் பதில் என்னவாக இருக்கிறது?
ஒரு கட்சி அடையாளம். அல்லது கட்சிச்சின்னங்களின் அடையாளம். சற்றே அறிவுசீவிகள் என்றால் ‘ நோட்டா’ .
ஆனால், தனது தொகுதி மேம்பாட்டிற்காக உழைக்கப் போகின்ற ‘ வேட்பாளர்’ குறித்த பிரக்ஞை எவரிடமும் கிடையாது.(புகழ்மிக்க வேட்பாளர் பற்றி இங்கு நான் பேசவில்லை) அப்படியானால், ‘ஜனநாயக பூர்வமான’ என்று சொல்லப்படும் இந்தத் தேர்தல் முறை, ஒரு தலைப் பட்சமாக, வேட்பாளர் பற்றிய பிம்பத்தை அலட்சியப்படுத்தி, கட்சிகள், சின்னங்கள் பற்றிய பிம்பங்களையே ஊதிப் பெருக்கவைத்திருக்கிறது.
எனில், வாக்காளர்களின் மனதில் இப்படியான எண்ணங்களில் மட்டுமே சிந்தை செலுத்தும் போக்கு உருவானவிதம் எவ்வாறு என்று பார்க்க வேண்டியிருக்கிறது. மேலும், தேர்தல் – தேர்தலின் கட்டமைப்பு – அதன் பின்னாலுள்ள நுண்ணரசியல் போன்ற அம்சங்களை விமர்சனாபூர்வமான விவாதங்களுக்கு உட்படுத்த வேண்டிய தருணமும் இதுதான்.
உங்களது வாக்குகளைத் தவறாமல் பதிவு செய்யுங்கள் வாக்களிப்பது இந்தியக் குடிமகனின் ஜனநாயகக் கடமை என்று ஓயாமல் பல கோடி ரூபாய் விளம்பரங்களில் வானொலி, தொலைகாட்சி, பத்திரிகைகளில் கூப்பாடு போடும் தன்மை, கட்டாயமான அரசு மற்றும் தனியார் விடுமுறை, வீதிக்கு வீதி விளம்பரப் பலகைகள் என்று கூவியும் கூட 73 % தான் பதிவாகியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
எப்படியும் ஒவ்வொரு தேர்தலின்போதும் 30% ஓட்டுப் போடாமலேயே இருந்துவிடுகிறார்கள். இவர்கள் ஓட்டுப் போடாததினால், அரசியலமைப்பு மேலும் மேலும் பாதிக்கப்படுகிறது. 70% ஓட்டை ஆளுக்குக் கொஞ்சம் பிரித்து அதில் அதிகம் பெற்ற வேட்பாளர் 100% வாக்காளர்களுக்கு ஜெயித்தவர் ஆகிறார். ஓட்டு போடவே போகாதவர்கள் எண்ணிக்கையை விடக் குறைவான ஓட்டு வாங்குகிறவர் ஜெயித்தவராவது என்பது எவ்வளவு அபத்தமானது !
இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு பெரும் தலைவலி ஆகிறது. வாக்காளர்களின் இந்த அலட்சியப்போக்கு, தேர்தல்முறைமீதே நம்பிக்கையில்லை என்கிற பார்வையாக ஆகிவிடுமோ என்ற கவலையில் இதற்கான தீர்வை பலவழிகளில் முயல்கிறார்கள்.
தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றங்களினால் எளிய மனித வாழ்வியல் பயன்பெறும் பல திட்டங்கள் வரும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றமடைந்தது. ‘யார் வந்தாலும் என் வாழ்நிலையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை அதே சுரண்டலும் ஊழலும்தான்.. அவர்களுக்கு நான் ஏன் ஓட்டளிக்க வேண்டும்?’ என்ற போக்கு 1980களிலிருந்து தோன்ற ஆரம்பித்தது.
முள்ளும் மலரும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை.. என்று பாடி ஆடினார். அந்தப் பாட்டின் விட்டேத்தியான குணமும், எதிர்ப்பார்வையும் அந்தக் காலகட்ட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.இந்த உளவியல் தன்மையைத்தான் வேறுவிதமாக மாற்றினார்கள். அதாவது, ஓட்டுப் போடாமலிருப்பதற்கான காரணம், கட்சிகளின் ஊழலும் சுரண்டலும் அல்ல. எந்தக்கட்சியும் சரியில்லை, எந்த வேட்பாளரும் சரியில்லை என்பதனால்தான் கடமையை நிராகரிக்கிறார்கள் என்கிறவாதம் முன்வைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது.
சரி அவ்வளவுதானே.. கட்சியோ வேட்பாளரோ சரியில்லையெனில், இவர்கள் யாரும் சரியில்லை என்று உங்கள் எதிர்க் கருத்தைப் பதிவு செய்யுங்கள். என்று 49 ஓ என்ற எதிர்ப்பு நிலையை அறிமுகப்படுத்தியது தேர்தல் ஆணையம். அதுமட்டுமல்லாது, நீங்கள் ஓட்டுப் போடப்போகவில்லையெனில் உங்கள் ஓட்டு கள்ள ஓட்டாக மாறிவிடும் என்று எச்சரித்து ஜனநாயகக் கடமையை பூரணமாகச் செய்ய அழைத்தது.
விதி 49-ஓ இந்தியாவின் தேர்தல்களை நடத்தும் நெறிமுறைகளைக் கொண்ட தேர்தல் நடத்தை விதிகள், 1961[1] கீழ் அமைந்துள்ள ஓர் விதியாகும். ‘49 ஓ’வை ஒருவாக்காளர் பயன்படுத்தினால் தனது பெயர், முகவரி விபரங்களை வாக்குசாவடிஅதிகாரியிடம் பதிவு செய்ய வேண்டும். இந்த திறந்தவெளித் தன்மை அவருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.49 ஓ பயன்படுத்தியவர்கள் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் காவல்துறை கண்காணிப்பு இருக்கும் என்றும், அவருக்குக் கிடைக்க வேண்டிய அரசு சலுகைகள்,உரிமைகள் கிடைக்காது என்பது போன்ற அச்சம் ஊடுருவியது. அவரது பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கவும் வாய்ப்பு உண்டு என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். ‘இந்த திறந்தவெளித் தன்மைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக இப்போது நோட்டா .(நடிகர் கவுண்டமணி நாயகனாக நடிக்கும் 49 ஓ என்கிற பெயரில் வரயிருக்கும் ஒரு திரைப்படம் 49ஓ வை தேர்ந்தெடுத்தவனை அரசியல்வாதி வில்லன் கொல்லத் துடிக்கும் கதைக் களம் கொண்டது. படம் வெளிவருமுன்பே கதைக்களம் அவுட்.)
இந்த அம்சங்களைக் கணக்கில் கொண்டு மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) என்ற அரசு சாரா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடர்ந்ததன் விளைவு, இந்திய அரசியல் சாசனத்தின் 19வது பிரிவு உறுதிப்படுத்தும் கருத்துரிமையின் பாதுகாப்பு மற்றும் 1951ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 128வது பிரிவு குறிப்பிடும் ரகசிய வாக்குப்பதிவு முறையான நோட்டா: (None of the Above – NOTA;) ‘மேற்கண்ட யாருக்கும் ஆதரவு இல்லை’ என்று பொருள்.
ஆனால், நோட்டா வாக்குகளைக் கணக்கில் கொள்ளமாட்டோம் என்கிறது தேர்தல் ஆணையம். இங்குதான் நோட்டாவின் அரசியல் ஆரம்பமாகிறது. நோட்டாவுக்கு நீங்கள் போடும் வாக்கு என்பது உங்களது ஓட்டைக் கள்ள ஓட்டுக்காரர்களிடமிருந்து காப்பது. மற்றும், உங்கள் எதிர்ப்பு நிலையைக் காட்டுவது.(ஒரு பார்வையில், உங்களது அறிவுஜீவி ஈகோவை திருப்தியடைய வைப்பது.) மற்றபடி வேட்பாளர் வெற்றியை இந்த ஓட்டுக்கள் தீர்மானிப்பதில்லை. நோட்டாவை விட குறைவான ஓட்டுக்களே பெற்றிருந்தாலும்கூட, பட்டியலில் உள்ளவர்களைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தாலே போதும், அவர் வெற்றிபெற்றவராவார். இத்தனை பலவீனமான, எந்த நேரடிப் பயனும் இல்லாத ஒரு விஷயத்துக்காக நான் ஏன் என் ஓட்டை வீண் செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கேள்வியாக இருக்கிறது.இதற்கு அரசியல் சட்டமோ, தேர்தல் ஆணையமோ பதில் சொல்லவில்லை. உச்ச நீதிமன்றமும் வழிகாட்டவில்லை.அரசியல் கட்சிகளோ, இந்த நோட்டாவை அசௌகரியமாகக் கருதுகின்றன. ஆனால், நோட்டாவின் தொடர்ச்சியான வளர்ச்சித் திட்டத்தின் பிற்காலகட்டங்களில் அதன் தன்மை படிப்படியாக முன்னேற்றம் அடையும், அல்லது அதை நோக்கி உந்தித் தள்ளவேண்டும். முனையிலேயே அதன்மீது விமர்சனம் வைத்து அந்தக் கதவை மூடிவிடக் கூடாது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இந்த விமர்சனத் தன்மை கொண்டவிஷயம், தற்காலங்களில் கவனக் குவிப்புக்குப் பெரிதும் பயன்படுகிறது. கடந்த(2009) நாடாளுமன்றத் தேர்தலின்போது புதுக்கோட்டை: நாடாளுமன்ற தொகுதிகள் பட்டியலிலிருந்து புதுக்கோட்டை தொகுதி நீக்கப்பட்டதால் கடும் எதிர்ப்பு தெரிவித்து, 49ஓ வுக்கு ஆதரவாக வாக்களித்தனர் அப்பகுதி மக்கள். அந்த தேர்தலில் 13,680 ஓட்டுகள் 49 ஓவில் பதிவானது. இது, இந்திய தேர்தல் வரலாற்றில் 49 ஓவுக்கு ஆதரவான அதிகபட்ச ஓட்டுப்பதிவாகும். ஆனால், இதன் தொடர்ச்சியாக வந்த நோட்டா குறித்த வேறுவிதமான விமர்சனங்களும் மேலெழுகின்றன.
”நோட்டா” எனப்படும் வாக்குமுறை அரசியல் வர்க்கத்தினர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தவா? அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தம் சாதி அரசியலைத் திணிக்கவா? என்கிறது ‘தி ஹிந்து’ நாளிதழ் .2013 டிசம்பரில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பழங்குடியினருக்கு என ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒருவித சாதியம் சார்ந்த தேர்தல் அடக்குமுறைக் கையாளப்பட்டதாக டில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடத்திய தேர்தல் தரவு ஆய்வறிக்கையை முன் வைக்கிறது.கூட்டுப் புரிந்துணர்வு என்னவென்றால் அப்பகுதிகளில் இருக்கும் மேல்சாதி மக்கள் தலித்துகளுக்கோ அல்லது பழங்குடியினருக்கோ வாக்களிப்பதை விட நோட்டாவைத் தேர்வுசெய்வதற்கே முன்னுரிமை அளிக்கின்றனர் என்பதே.
இந்தப் பார்வைகள், விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் தேர்தல் முறையின் கட்டமைப்பு குறித்து நுட்பமாகப் பார்க்கவேண்டும்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற இந்தியாவில் அவர்கள் விட்டுப்போன ஜனநாயக அரசியலமைப்பின் அதிகாரத்தை நடைமுறைப் படுத்தும் தேர்தல்முறையின் நீட்சி. இந்த மேற்கத்திய ஜனநாயகமுறை இந்திய சமூகத்தில் நுழைந்தபோது இங்குள்ள வாழ்வியல் சூழல், பண்பாடு போன்ற தன்மைகளை கணக்கில் கொண்டு பல வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்தன.சொத்துடையவர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று ராஜாஜி போன்றோர் வாதிட, அம்பேத்கர் மற்றும் தலித்திய தலைவர்கள் எதிர்வாதங்கள் செய்து சாமான்யமக்களும் பங்கு கொள்ளும் சீர்திருத்தங்கள் செய்தனர். இந்த அம்சத்தை தாங்கள் அதிகாரம் செலுத்துவதற்கான ஆட்சியதிகாரமாக மாற்றினர் அரசியல்வாதிகள். .
கி.பி. 10 ஆம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் உருவாகியிருந்த ‘குடவோலைமுறை’ என்னும் தேர்தல் முறையை இங்கு ஒப்பு நோக்கலாம். பிற்காலச் சோழர் ஆட்சி முறையில் அது தோன்றியதாக உத்திரமேரூர்க் கல்வெட்டில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
‘‘தீண்டத்தகாதோர், பஞ்சமா பாதகங்களில் முதல் நான்கு பாவம் புரிந்தோர், இவர்களது சுற்றத்தார், கொண்டது விடாத கொடியோர், கையூட்டு பெற்றோர், களவுபுரிந்தோர், குற்றம் காரணமாகக் கழுதை மேல் ஏற்றப்பட்டோர், கள்ளக் கையெழுத்து இட்டோர் ஆகிய இவர்கள் யாவரும் தேர்தலில் வேட்பாளராக நிற்கத் தகுதி பெற்றவர்கள் அல்லர். என்கிறது உ.மே.கல்வெட்டு.
‘‘ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவர்கள் பிறகு தேர்தலில் போட்டியிடவே கூடாது. ஒவ்வொரு தேர்வின்போதும் புதியவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்’ என்று செங்கல்பட்டு மாவட்டம் பிள்ளைப் பாக்கம் கல்வெட்டு கூறுவதையும் நோக்கலாம்.
இப்படி குடவோலை முறையிலிருந்து தற்கால ஜனநாயக தேர்தல்முறை வரை தேர்தல் கட்டமைப்பு படிப்படியாக சீர்திருத்தங்கள் செய்துகொண்டு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வரும் தேர்தல் ஆணையம், தற்போது மீண்டும் ஒரு முக்கியமான சீர்திருத்தம் செய்ய வேண்டிய தருணத்தில் இருக்கிறது.
அதாவது, தேர்தலில் மிகமுக்கியமான அடிப்படை அம்சமாக இயங்கும் ஒரு படிமத்தை, யாரும் கவனத்திலேயே எடுத்துக் கொள்வதில்லை. அவைதான் கட்சி சின்னங்கள்.
தேர்தல் முதன்முதலில் அறிமுகமான 1937 காலகட்டங்களில் கட்சிகளுக்கு சின்னங்களைப் பயன்படுத்தும் நடைமுறை வரவில்லை. அன்றைய சூழலில் எழுத்தறிவற்ற மக்களால் வேட்பாளர்களின் பெயர்களையோ, சின்னங்களையோ புரிந்துகொள்ள முடியாது என்பதால், அதற்குப் பதிலாக ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் மஞ்சள் பெட்டி, பச்சைப் பெட்டி என்று பலவண்ணங்கள் கொண்ட வாக்குப்பெட்டிகள்தான் ஒதுக்கப்பட்டிருந்தன. வாக்காளர் வாக்குச் சீட்டை எந்த வண்ணப் பெட்டியில் போடுகிறாரோ அதுவே அவர் வாக்களித்த கட்சியாகக் கருதப்படும்.
மஞ்சள் நிறப் பெட்டி ஒதுக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில், அன்றைய நாடகப் பிரபலங்களாக இருந்த கே.பி. சுந்தராம்பாள், அவ்வை சண்முகம் போன்றோர் மஞ்சளின் மருத்துவ குணங்களையும் அதன் மங்களகரமான அம்சங்களையும் கவர்ச்சிகரமாக பாடல்வடிவங்களில் எடுத்துக் கூறுவர். வாக்காளர்களின் மனதில் மஞ்சள் என்கிற பிம்பம் வாழ்வின் சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடிய மங்களகரமான உருவகமாகப் படிந்துபோய்விடும்
இப்படி ஆரம்பித்த சின்னம் என்கிற குறியீடு தற்காலத்தில், அசுரத்தனமாக வளர்ந்திருப்பதோடு மட்டுமல்லாமல், வாக்காளர்களை தனது இரும்புப் பிடியில் இறுக்கி வைத்திருக்கிறது.
பெரும்பாலும் தேர்தல் என்றாலே கட்சி சின்னங்கள்தான் அடிப்படை. இந்த அடிப்படை அம்சம், வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் உளவியல் பூர்வமாகப் பதிவாகியிருக்கிறது.
கட்சிகள், கொள்கை கோட்பாடுகள், சீர்திருத்தங்கள், முற்போக்குப் பார்வைகள் என, எல்லாவற்றையும் தண்டி சட்டென கண்ணுக்கு முன்னால் வந்து நிற்பவை சின்னங்கள்தான்.
இந்தப் பார்வை பெரும்பாலான வாக்காளர்களுக்கு மட்டுமல்லாது, கல்வி மேம்பாடற்ற கிராமப்புற மக்களுக்கும் முழுக்க முழுக்கப் பொருந்தும்.
கட்சி சின்னங்கள், தேர்தல் முறை தோன்றிய காலத்திலிருந்தே உருவாகி, ஒவ்வொரு தேர்தலிலும் ஓயாது பேசிப்பேசி கட்டமைக்கப்பட்டு, மக்கள் மனதிலே உருவேற்றி கொண்டவை.
கட்சிகளின் அரசியல் நிலைப்பாட்டை பரிசீலனை செய்யும் பார்வைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, ஜனரஞ்சகமாக, எளிதில் சென்றடையும் உருவகமாக (பிராண்ட்) இருப்பவை.
கட்சியின் சின்னம் என்பது, தேர்தல் காலங்களில் மட்டும் உயிர் பெறுவது அல்ல. காலம் முழுக்க ஒவ்வொரு நிகழ்விலும், ஒவ்வொரு கணத்திலும், தொடர்ந்து தன்னை அடையாளம் காட்டிக் கொண்டேயிருப்பது. இது ஒருவிதமான நுண்ணரசியல். இந்த சின்னங்களின் அரசியலை நுட்பமாக அவதானிக்க வேண்டும்.
ஒரு கட்சியானது, தனது சின்னத்தை எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் சதா முன்னிறுத்தி, முன்னிறுத்தி, அதை ஒரு சாகாவரம் பெற்ற மாபெரும் சக்தியாக மாற்றுகிறது.
இப்படி மாற்றுவதன் மூலம் கட்சியோ, கட்சியின் கொள்கைகளோ முக்கியத்துவம் பெறாமல், சின்னம் மட்டும் முன்னணியில் நிற்கும்.
அதுதான் அரசியல்வாதிகள் விரும்புவது. கட்சியின் கொள்கைகள் யாருக்கு வேண்டும்? அல்லது கொள்கைகள் என்றாலே, தொந்தரவுதானே.
அதுவும் தமிழ் சமூகம் போன்ற, பல்வேறு நம்பிக்கைகளில் மூழ்கி எளிதில் உணர்ச்சி வசப்படுகின்ற தன்மையில் வாழ்ந்து வருகிற மக்கள் மத்தியில், சின்னம் பற்றிய பார்வைகளும், நம்பிக்கைகளும் அடிமனதில் ஆழமாகப் பதிவாகி விடுகின்றன. ‘அது எப்போதுமே வெற்றி சின்னம்தான்…எங்க தாத்தா, பாட்டி காலத்திலிருந்தே நாங்க அதே சின்னம்தான்…’ என்பது போல.
இப்படி காலங்காலமாய் உருவாக்கி வைத்திருக்கும் சின்னம்தான், அரசியல்வாதிகளின் மிகப் பெரிய முதலீடு.
அதனால்தான், ஒரு கட்சியை ஒழிக்க விரும்பினால், அதன் சின்னத்தை முடக்குவதில் கை வைப்பார்கள்.
இப்படியான பார்வைகளின் நீட்சியில் வேட்பாளர் பற்றிய தரமதிப்பீடுகள், பெரியளவில் கணக்கில் கொள்வதில்லை.
கிரிமினல்களின் ஆதிக்கம் அரசியலில் ஓங்குவதற்கு இதுவும் ஒரு காரணம்.
வாக்காளர் என்பவருக்கு, சின்னம்தான் முதன்மையாகிறதே தவிர, வேட்பாளர் அல்ல. இதனால்தான் வேட்பாளரும், தொகுதி நலனை கணக்கில் கொள்வதில்லை. இதனாலேயே வேட்பாளருக்கும் வாக்காளருக்குமான இடைவெளி விழுந்து விடுகிறது.
கட்சிகளை, மக்கள் கணக்கில் கொள்வதே இல்லை என்றும், வெறும் சின்னத்தை மட்டும்தான் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதல்ல நான் சொல்ல வருவது…ஜனநாயகம் என்கிற பெயரில் அதன் பின்னால் ஒருதலைப்பட்சமான ஆதிக்கத் தன்மை செயல்படுகிறது என்பதைத்தான் இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.
வேட்பாளர் சின்னத்தை தேர்வு செய்யும்போது, இணையாக கட்சியும் சேர்ந்து விடுகிறது என்பது அதன் புரிதல். அதன் பிறகுதான் கட்சிகள் சொல்லும் கொள்கை கோட்பாடுகள், புடலங்காய்கள் எல்லாம்…
இப்போது இந்த விஷயத்தை இப்படிப் பார்க்கலாம்…
ஒரு செயலூக்கம் கொண்ட நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல நினைக்கும் புதிய சிந்தனைகள் கொண்ட ஒருவர், சுயேச்சையாக தேர்தலில் நின்றால் (இவரை எந்தக் கட்சியினரும் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்!) நிலை எப்படி இருக்கும்?
அவரது சின்னம் 15 நாளுக்கு முன்புதான் ஒதுக்கப்படும். இன்றுள்ள நேர்மையான கெடுபிடிகள் நிறைந்த தேர்தல் ஆணையத்தின் ஷரத்துகளின்படி, தொகுதி மக்களுக்கு அறிமுகப்படுத்தினால், பெரும்பான்மை மக்களுக்குப் போயே சேராது.
ஆனால்,கடந்த 40, 50 ஆண்டுகளாக, மக்களிடம் போய் சேர்ந்திருக்கும் கட்சியின் சின்னம், மிக எளிதில் மக்களிடையே பதிவாகும்.
இப்படி ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு கொண்டிருப்பதற்கு பெயர்தான் ஜனநாயக பூர்வமான தேர்தல் முறையா? இந்த பார்வையே அபத்தமாக இல்லையா?
ஆக, நான் முன்வைக்கும் கருத்து இதுதான். எவ்வளவோ சீர்திருத்தங்கள் செய்துள்ள தேர்தல்ஆணையம், ஏன் சின்னங்களை ஒழிக்க கூடாது?
காலங்காலமாக கட்சிகளுக்கென ஒதுக்கி உள்ள சின்னங்களை ஒழித்துவிட்டு, ஒவ்வொரு தேர்தலிலும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சமமாக, புதிது புதிதாக சின்னங்களை உருவாக்க வேண்டும்.
ஜனநாயக பூர்வமான தேர்தல்முறை என்பது அதுதானே! ஜனநாயக நாட்டின் எல்லா வேட்பாளர்களும் ஒரே சமமான தராசு தட்டில்தானே வைக்கப்பட வேண்டும்?
அது மட்டுமல்லாது, ஒரு கட்சிக்கு எல்லா தொகுதிகளிலும் ஒரே சின்னத்தை ஒதுக்காமல், ஒவ்வொரு தொகுதியில் நிற்கும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒவ்வொரு புதிய சின்னம் ஒதுக்க வேண்டும்.
இது மடத்தனமாக இருப்பதாக, அரசியல்வாதிகள் ஆவேசத்தில் கொந்தளிக்கலாம். ஆனால், நுட்பமாக யோசித்து பாருங்கள்.
வாக்காளருக்கு தங்கள் தொகுதியில் நிற்பவர் யார் என்கிற விவரத்தை விடவும், சின்னம் பற்றிய அறிமுகமே போதும் என்ற நிலை. அதனால் சிறந்த வேட்பாளரின் சேவை கிட்டுவதில்லை.
வெற்றியாளர், தொகுதி மேம்பாட்டைக் கவனிக்காமல், தனது மேம்பாட்டை கவனிக்க ஆரம்பிக்கிறார். சின்னத்தை மட்டுமே முன்னிறுத்துவதால் ஏற்படும் பெரும் சரிவுதான் இது. வாக்காளருக்கும், வேட்பாளருக்குமான இடைவெளி இதன்மூலம் பெரும் பள்ளமாகி விடுகிறது.
மாறாக, பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்களது தொகுதியில் பல ஆண்டுகளாக, நல்லது கெட்டது, சீர்திருத்தங்கள், முற்போக்கு செயல்பாடுகளோடு இயங்கும் ஒருவர் வேட்பாளராக நின்றால், அவரது குறுகியகால சின்னத்தின் அறிமுகத்தை விடவும், அவரது நீண்டகால செயல்பாடுகளில் அறிமுகமான காரியங்கள், எளிதில் மக்களிடையே ஞாபகம் வரும்.
அதனால் அவரது வெற்றியை நோக்கிய சின்னத்தில் வாக்களிக்க மக்களும் விரும்புவர்.
பதினைந்து நாட்களுக்கு முன்னால் அறிமுகமாகும் சின்னம் பற்றி மக்கள் தெரிந்துகொண்டு, அதன்பிறகு அந்த சின்னத்தில் வாக்களித்து வேட்பாளரை தேர்வு செய்வதென்பது பெரும் சோதனை.
ஆகவே இப்படியான பார்வைகளும் சிந்தனைகளும் மேலெழும்பி வரும் பட்சத்தில் வேட்பாளராக நிற்க விரும்புபவர்கள், தொடர்ந்து தங்களது பகுதிகளுக்கு பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முற்போக்கான வேலைகளை செய்து மக்கள் மனதிலே இடம் பிடிக்க ஆசைப்படுவர்.
மக்களும் இந்த புதுமையான தேர்தலை எதிர்கொள்ள ஆர்வமாய் முன்வருவர்.
மற்றபடி, ‘நோட்டா, 49 ஓ’ என்பதெல்லாம் மக்களை திசைதிருப்பும் வேலை தானே தவிர, ஜனநாயக தேர்தல் முறைக்கான சீர்திருத்தம் அல்ல.
சொல்வதற்கும் கேட்பதற்கும் இனிமையாகவும் எளிமையாகவும் தான் தோன்றுகிறது.
ஆனால், அதை செயல்படுத்துவது என்பது, நமது நாட்டில் எவ்வளவு கடினம் என்பதை சொல்ல தேவையில்லை. அரசியல்வாதிகள், ஆதிக்க சக்திகள், அதிகாரவர்க்கங்கள்… இப்படி ஏராளமான எதிர்ப்புகள், விமர்சனங்கள், வாதப்பிரதிவாதங்கள் எழத்தான் செய்யும்.
இது ஒன்றும் புதுசும் இல்லை. ஏற்கனவே பஞ்சாயத்து தேர்தல்களில் நடைமுறைப் படுத்தியதுதான். இது கொஞ்சம் அதனுடைய செழுமைப்படுத்தப்பட்ட வடிவம். அவ்வளவே.
வேறு எந்த நாடும் இதுபோல செய்ததில்லையே…இதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் இடமிருக்கிறதா? ஏனெனில் நாம் பிறநாடுகளை பார்த்து தானே சிந்திக்கிறோம்! சுயமாக சிந்திப்பதில்லையே… என்றெல்லாம் புலம்ப வேண்டியதில்லை. ஏன் முதல் அடியை நாம் எடுத்து வைக்க கூடாது? உலக அரசியலுக்கு நாம் முன்னோடியாக இருப்போமே…!
இது சாத்தியமா என்றால் பின்நவீனத்துவ சிந்தனைகள் கட்டமைந்திருக்கிற இந்த காலகட்டத்தில் சாத்தியம். அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு வாதப்பிரதிவாதங்களை முன்வைக்கலாம்.
இக் கட்டுரையின் பின்குறிப்பாக இனியொருவில் ஏற்கனவே பதிவிடப்பட்ட கீழ் வரும் கட்டுரையை தருகிறோம் – இனியொரு…:
தேர்தலால் ஜனனாயகத்தைத் தோற்றுவிக்க முடியுமா : நிவேதா நேசன்
இன்றய உலகில் தேர்தலும் அதனால் தோற்றுவிக்கப்பட்டுள்ள ஜனனாயகமுமே சிறந்தது என்ற கருத்து உலகில் ஒவ்வொரு மனிதன் மத்தியிலும் விதைக்கப்பட்டுள்ளது. தேர்தல் என்ற அமைப்பு முறை உலகில் தோன்றுவதற்கு முன்பதாக உலகில் மன்னர்களது பரம்பரைகளே ஆட்சி செய்தன. மன்னர்களின் அழிவில் தான் தேர்தல் மற்றும் பாராளுமன்ற ஜனனாயகம் என்வை தோன்றின. அது தோன்றிய காலத்தில் முன்வைக்கப்பட்ட ஜனனாயக அமைப்பு என்பது மன்னர்களின் சர்வாதிகாரத்தை விட பல மடங்கு மேலானதாகவும் மக்கள் தமது நிர்வாகிகளைத் தெரிவுசெய்யும் குறைந்த பட்ச சுதந்த்திரத்தை உடையவர்களாகவும் காணப்பட்டனர். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் தேர்தலில் பங்குபற்றின. அவற்றுள் அதிகபடியான வாக்குகளைப் பெற்றுக்கொள்பவர்கள் வெற்றிபெற்றனர். அவர்கள் பாராளுமன்றத்தில் மக்களை நிர்வகிப்பதற்கான சட்டங்களை இயற்றும் அதிகாரத்தையும் பெற்றிருந்தனர். இவ்வாறான பாரளுமன்றம் என்ற நிர்வாக சபையில் தேர்தலின் பின்னணியில் இருந்தது என்ன. அதன் அடிப்படைகள்
இன்று அது மக்களுக்கு உகந்ததா என்பது காலத்திற்குக் காலம் வந்த்துபோகும் விவாதங்கள்.
உலகில் நாங்கள் வாழுகின்ற சமூகம் முழுமையும் இந்தத் தேர்தல் முறையை ஜனனாயகம் என்று ஏற்றுக்கொள்வதான தோற்றப்பாடு ஒன்றைக் காணலாம். இதன் அடிப்படை என்ன என்பதைப் புரிந்த்துகொள்வதன் வழியாகவே தேர்தல் தரும் ஜனனாயக உரிமையையும் அறிந்த்துகொள்ளலாம்.
நாம் வாழும் சமூகம் ஒரு வைகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. சில பணம்படைத்தவர்கள் சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தும் அதிகாரம் படைத்தவர்களாகவும் அதன் கீழ் அவர்களுக்குச் சேவையாற்றும் நிர்வாகிகளும், சேவைத் துறை வேலையாட்களும், பின்னர் உற்பத்தி திறனுடைய மத்தியதர வர்க்கமும், இதைவிட சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள உற்பத்தியில் நேரடியாக ஈடுபடும் தொழிலாளர் விவசாயிகளும் என்று சமூகம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் பணம்படைத்தவர்களே ஆதிக்கத்தின் உச்சத்தில் காண்படுகின்றனர். கடந்த்த முப்பது வருடங்களில் பணம்படைத்த இந்த்த அதிகார வர்க்கம் கூட மாற்றமடைந்த்துள்ளது.
இன்றைய காலத்தில் அமரிக்கவிலும் ஐரோப்பாவிலும் உள்ள விரல் விட்டெண்ணக் கூடிய சில செல்வந்தர்கள் அந்த்த நாடுகளில் நிலை கொண்டுள்ள நிறுவனங்களில் பங்குச் சந்த்தை ஊடாக தமது பணத்தை முதலீடு செய்கிறார்கள். இந்த்த முதலீடுகள் இல்லாமல் எந்தப் பெரிய வியாபார நிறுவனங்களையும் நடத்த முடியாது. இந்த்த நிறுவனங்கள் உலகம் முழுவதும் தமது தமது கிளைகளைப் பரப்பி வருகின்றன. மிகச் சிறிய வியாபாரத்தைக் கூட இந்த்த நிறுவனங்களே ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அமரிக்காவிலிருக்கும் வால் மார்கோட் என்ற சில்லரை வியாபார நிறுவனம், கோஸ்டா என்ற கோப்பி விற்கும் கடை, மக்டொனால்ட் மற்றும் கே.எப்.சி சண்விச் விற்கும் கடை போன்ற சிறிய அன்றாட வாழ்வோடு தொடர்புடைய நிறுவனங்கள் கூட தமது கிளைகளை உலகம் முழுவதிலும் உள்ள மூலைகளெல்லாம் பரப்பியுள்ளன.
வறிய நாடுகளில் மலிவான விலையில் கோப்பியைப் பெற்று அங்கேயே மலிவான கூலியில் அதனைப் பதப்படுத்தி பின்னர் அதிக விலையில் அந்த்த நாட்டு மக்கள் உட்பட உலகம் முழுவதும் விற்பனை செய்கிறார்கள். இதனால் வரும் இலாபத்தை அமரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வாழும் பங்கு சந்த்தை ஊடாக முதலிடும் செல்வந்தர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த்தியா இலங்கை ஆபிரிக்கா போன்ற நாடுகளில் வாழ்கின்ற முதலாளிகளோ அமரிக்க ஐரோப்பிய நிறுவனங்கள் முதலீடுகளை தமது நாடுகளில் நிர்வகிப்பவர்களாக மாறியுள்ளனர்.அதாவது இந்த முதலாளிகளின் உள்ளூர் தரகர்களே இவர்கள். இவ்வாறு தரகு வேலை செய்வதற்காக இவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுகிறது. இந்தச் சன்மானத்தால் உள்ளூர் முதலாளிகள் பணக்காரர்களாக மாறும் அதே வேளை மேலும் மேலும் தமது நாடுகளைச் சுரண்டி அதிக பணம் சம்பாதிப்பது எப்படி என்ற வழி முறைகளையும் அன்னியர்களுக்கு சொல்லித் தருகிறார்கள். ஆக, உள்ளூர் தரகு முதலாளிகளும் அன்னிய முதலாளிகளும் இணைந்து தமது நாடுளிலிருந்த்து பெரும் செல்வத்தை அன்ன்ய நாட்டு முதலாளிகளிடம் ஒப்படைக்கிறார்கள்.
இப்படி உலகம் முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பை ஏற்றுக்கொண்டு அந்த அமைப்பைக்கு எதிராக மக்களிடமிருந்த்து எதிர்ப்ப் எதுவும் ஏற்படாமல், மக்களின் சிந்தனையை இதற்கு ஆதரவாக மாற்றி ஆட்சி நடத்த பல கட்சிகள் போட்டி போடுகின்றன. அல கஇந்தக் கட்சிகளின் நோக்கம் இருக்கின்ற சுரண்டல் அமைப்பை மாற்றியமைப்பதல்ல அவற்றை நிர்வகிப்பதே. இந்த்தியாவில் காங்க்ரஸ் கட்சி, பாரதீய ஜனதா கட்சி போன்ற கட்சிகள் மட்டுமல்ல கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரிலுள்ள கட்சிகளும் இந்த சுரண்டல் அமைப்பை ஏற்றுக்கொண்டு அதனை தம்மால் மேலும் சிறந்த்த வகையில் நிர்வகிக்க முடியும் என்று கூறிப் போட்டி போடுகின்றன.
இந்தச் சுரண்டல் அமைப்பு முறையை மாற்றி மக்கள் நேரடியாக ஆட்சியில் பங்குபற்றும் ஜனனாயக அமைப்பை தோற்றுவிக்க வேண்டும் என்றால் இருக்கின்ற அமைப்பை நிர்வகிப்பதற்கு வாய்ப்புக் கேட்டு அதாவது மக்களைச் சுரண்டுவதற்காக வாய்ப்பை மக்களிடமே கேட்டுப் பெற்றுக்கொள்ளும் தேர்தல் ஜனனாயகமும் பல கட்சி அமைப்பு முறையும் அழிக்கப்பட்டு புதிய அமைப்பு முறை ஒன்று தோன்ற வேண்டும்.
அப்படி மக்கள் ஆட்சியில் நேரடியாகப் பங்குபற்ற வேண்டுமானால் சுரண்டல் அமைப்பு முறையான இந்த சமூகம் மாற வேண்டும். அவ்வாறு மாற்றப்பட்ட சமூகத்தை மக்கள் நிர்வகிக்க வேண்டும். அதற்கான அமைப்பு ஒன்று தேவை.
இவ்வாறான மக்கள் தேர்தலும் மக்கள் ஆட்சியும் சோவியத் ரஷ்யாவில் காணப்பட்டது. அது அமரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் காணப்படும் எண்ணக் கூடிய பன முதலைகளை அச்சுறுத்தியது. அவர்கள் தமது அரசுகளூடாக மிக நீண்டகாலப் யுத்தம் நடத்தி அந்த அமைப்பை அழித்துவிட்டார்கள். ஆனால் அதே ரஷ்யாவிலும் இன்னும் பல நாடுகளிலும் தவறை உணர்ந்த்துகொண்ட்வர்கள் மக்கள் ஜனனாயகத்தை மீட்கப் போராடுகிறார்கள்.
அந்த மக்கள் ஜனனாயகம் எப்படி ஆட்சி நடத்தியது என்பது சுவாரசியமானது.
முதலாளித்துவ நாடுகளில் பணம்படைத்த சில முதலாளிகளும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களும் என்று சமூகத்தைப் பிளவுபடுத்தி அதனுள் உயிர்வாழ்ந்தவர்கள் முதலாளிகள். அவர்களை அதிகாரவர்க்கம் என்று கூறுகிறோம்.இந்த அதிகார வர்க்கம் மக்களால் தெரிவுசெய்யப்படவில்லை. அவர்கள் மக்களைச் சுரண்டிக் கொழுத்தவர்கள்.
சோசலிச நாடுகளில் மக்களால் தெரிவுசெய்யப்படாத அதிகார வர்க்கத்தை நீக்கி புதிய மக்களுக்கான அமைப்பை உருவாக்கியது அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சி. அவர்கள் மீண்டும் அந்த்த அதிகாரவர்க்கம் முளைவிடாமல் பாதுகாத்துக்கொள்ள மக்கள் ஆட்சி நடத்தினர்.
முதலாளித்துவ நாடுகளில் இருக்கின்ற அமைப்பை நிர்வகிப்பதற்காக கட்சிகள் போட்டிபோட்டனவே அதே போன்று சோசலிச நாடுகளில் இருக்கின்ற சுரண்டலற்ற அமைப்பை நிர்வகிப்பதற்காக மக்கள் போட்டிபோட்டனர்.
மக்கள் தம்மை நிர்வகிக்கும் நிவாகிகளைத் தேர்தல் ஊடாகத் தாமே தெரிவு செய்தனர். ஒவ்வொரு சிறிய ஊர்களிலும் கம்யூன்கள் என்ற அமைப்புக்களை உருவாக்கியிருந்தனர். அந்தக் கம்யூன்களில் தெரிவுசெய்யப்படுபவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவர்களாக இருக்கவேண்டிய தேவை இல்லை. அவர்கள் மக்களால் தெரிவுசெய்யப்பட்டனர். இவ்வாறு மக்களால் பல கிராமங்களிலும் நகரங்களிலும் தெரிவு செய்யப்பட்டவர்கள் இணைந்த்து பிரமிட் போன்ற ஒரு அமைப்பை உருவாக்கினர். இவர்களே தமது சுரண்டலற்ற அமைப்பிற்கு உட்பட்டு சட்டம் இயற்றி நிர்வகிக்கும் வேலையைச் செய்டனர்.
முதலாளித்துவ அமைப்பில் பிரச்சாரம் செய்வதற்குப் பணம் வைத்திருப்பவர்கள் அல்லது அன்னிய நாடுகளின் பணத்தில் பிரச்சாரம் செய்பவர்கள் ஆட்சிக்கு வந்தனர். சோசலிச நாடுகளிலோ மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களே ஆட்சிக்கு வந்தனர்.
முதலாளித்துவ நாடுகளில் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் ஒருவர் தவறு செய்தால் ஆட்சியிலிருந்த்து நீக்கப்பட்ட ஐந்த்து வருடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும். சோசலிச நாடுகளில் ஒருவர் தவறிழைத்தால் உடனடியாகவே மக்கள் ஒன்றுகூடி புதிய பிரதினிதியைத் தெரிவுசெய்தனர். இவ்வாறு பாராளுமன்றத் தேர்தல் ஊடாக ஜனனாயகம் என்ற பெயரில் போலியாக மக்கள் மத்தியில் திணிக்கப்பட்ட நிர்வாக அமைப்பு முறைக்கு எதிராக மக்களின் ஜனனாயகம் ஒன்றை தோற்றுவிப்பதே சோசலிச ஆட்சி. இதனைச் சர்வாதிகாரம் என்றும் ஜனனாயக மறுப்பு என்றும் பொய்ப் பிரச்சரம் செய்தவர்கள் ஜனனாயகத்தை விரும்பாத மக்களைச் சுரண்டும் மக்களின் விரோதிகளே.
இலங்கயில் ஜனனாயகத்தின் அழிவுகள் இன்னும் ஆழமானவை.
ராஜபக்சவின் கிரிமினல் அரசு இருக்கின்ற சுரண்டல் அமைப்பு முறையைத் தானே நிர்வகிக்க வேண்டும் என்றும் அதனை நிவகிப்பதற்குக் கூட தேசிய இனங்களை ஒடுக்குவதே ஒரே வழி என்றும் கூறுகிறது.
பிரித்தானிய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற காலம் முழுவதும் இலங்கையின் சுரண்டல் அமைப்பை நிர்வகிப்பதற்கு தேசிய இனங்களை ஒடுக்க வேண்டிய தேவை ஆட்சிக்கு வந்த்த ஆளும் வர்க்கங்களுக்கு இருந்தது. இதனால் சிறுபான்மைத் தேசிய இனங்களைக் காரணம்காட்டி சிங்கள மக்கள் மத்தியிலிருந்த்து தோன்றிய போராட்டங்களை ஒடுக்கிவந்தனர். இன்று இது இன்னும் சிக்கலான நிலையை அடைந்த்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரச இராணுவத்தோடு ஆயுதப் போராட்டம் நடத்திய காலத்தில் இலங்கை அரசு பெர்ந்த்தொகையான இராணுவத்தை உருவாக்கியது. இதனால் கிரமப்புறங்களில் வேலைவாய்ப்புக்கள் அதிகரித்தன. உற்பத்தியும் வருமானமும் இல்லாத இந்த வேலைவாய்ப்பிற்கு ஊதியம் வழங்க இலங்கை அரசிற்கு அதிக பணம் தேவைப்பட்டது. இதற்குரிய பணத்தை இலங்கை அரசாங்கம் உலக வங்கியிடமிருந்த்தும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்த்தும் அமரிக்க ஐரோப்பிய நாடுகளிடமிருந்த்தும் இந்த்திய சீன அரசுகளிடமிருந்த்தும் பெற்றுக்கொண்டது.
இதனால் இலங்கை வரலாற்றில் இல்லாத அளவிற்கு அந்த நாடு கடனாளி நாடாக உள்ளது.
இந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையிலுள்ள இலங்கையின் வளங்களைச் சுரண்டுவதற்காக இந்த நாடுகளும் உலக வங்கியும் நிபந்தனைகளை விதிக்கின்றன. இலங்கையில் முதலிடுவதற்கும் வளபங்களைச் சுரண்டுவதற்கும் இன்னும் அதிக வாய்ப்பளிக்குமாறு கோருகின்றன. கடல்வளம், நிலவளம், எண்ணை வளம், கூலி உழைப்பு போன்ற அனைத்தையுமே அபகரித்துக்கொள்ள நிபந்த்தனைகளை விதிக்கின்றன. இனச் சுத்திகரிப்பு நடத்தியோ அன்றி வேறு வழிகளிலோ தேசிய இனப் பிரச்சனையை இல்லாமல் செய்யக் கோருகின்றனர். இதனால் தமது நிறுவனங்கள் சமாதான சூழலுல் வியாபாரம் செய்யும் நிலையை ஏற்படுத்தக் கோருகின்றனர். இதற்கு அப்பால் இனப்படுகொலை பொன்ற நிகழ்வுகளைத் தவிர தெற்காசியாவில் இலங்கை மக்களே அதிக வாழ்வுக்காலத்தையும் கல்வியறிவைய்ம் கொண்டவர்களாக உள்ளனர். சிறந்த இலவச மருத்துவமும் இலவசக் கல்வியுமே இதற்கான அடிப்படைக் காரணங்கள். உலக வங்கியும் சர்வர்தேச நாணய நிதியமும் கல்வியையும் மருத்த்வு சேவையையும் தனியார்மயப்படுத்தக் கோருகின்றன. ஏற்கனவே இதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகள், அமரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் ஆசியோடு இனச் சுத்திகரிப்பும் தடையின்றி நடைபெறுகிறது.
இவ்வாறு இலங்கை அரசாங்கம் தனது சுரண்டல் அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்தச் சுரண்டல் அமைப்பை நிர்வகிப்பதற்காக உப தேர்தல்களை நடத்துகிறது. இப்போது வடக்கில் மாகாண சபைத் தேர்தலையும் நடத்துகிறது. இந்த மாகாண சபைத் தேர்தலில் இலங்கை அரசின் சுரண்டலையும் இனச்சுத்திகரிப்பிற்கான நிகழ்ச்சி நிரலையும் திறமையுடன் செய்துமுடிப்போம் என்று கட்சிகள் போட்டிபோடுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு புறத்திலும் மறுபுறத்தில் அரச ஆதரவு துணைக் குழுக்களும் போட்டி போடுகின்றன. இவர்களின் நோக்கம் ராஜபக்ச அரசின் இனச் சுத்திகரிப்பையும் சுரண்டல் அமைப்பையும் மாற்றுவதல்ல அவற்றைத் மக்கள் மத்தியிலிருந்த்து போராட்டங்கள் எழாமல் செவ்வனே நிர்வகிப்பதே. இதற்காகவே போட்டி நடக்கிறது. மக்களின் நோக்கமோ இந்த அமைப்பை மாற்றுவதே.
கட்சிகளை அரசியலிலிருந்த்து அழிப்பதும் மாற்றத்துக்கான அரசியலை முன்னெடுபதுமே இனிமேல் உருவாகும் புதிய அரசியல் சக்திகளின் நோக்கமாக அமைய முடியும்.
—————————————————————
தேர்தல் குறித்து ரஸல்ஸ் பிராண்ட்
பிரித்தானியாவின் ஆளும் கூட்டரசாங்கத்தின் பிரதான கட்சியான பழமைவாதக் கட்சியின் ஸ்டார்போட்ஷேர் என்ற தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் கெட்டவார்த்தைகளால் பிரித்தானியாவின் பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவரை பிபிசி வானொலி நிகழ்ச்சி ஒன்றில் தூற்றினார் என்பது இன்றைய செய்தி. ரஸல் பிராண் என்ற அந்த நகைச்ச்சுவை நடிகர் செய்த தவறு என்ன? பிபிசியின் பிரபல ஊடகவியலாளர் ஜெரமி பக்ஸ்மன் உடனான நேர்காணல் குறித்து பிரித்தான அரசியல் வாதிகள் ஆத்திரமடைந்தது ஏன். யூரியூப்பில் ரஸல் பிரண்டின் நேர்காணல் 20 மில்லியன் பார்வையாளர்களை மூன்றே நாட்களில் கவர்ந்தத்து ஏன்?
இதுவரைகாலமும் ரஸல் பிராண் குறித்து பிளே போய் போன்ற விம்பத்தையே பிரித்தானிய மக்கள் கொண்டிருந்தனர். ரஸல் பிரான்ட், புரட்சி தவிர்க்கமுடியாதது என்று தனது நேர்காணலை முடித்த வேளையில் பதில் சொல்வதற்கு ஜெரமி பக்ஸ்மனுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. அரசியலில் முன்னர் ஈடுபாடுகள் எதுவுமற்ற சாமனிய நகைச்சுவை நடிகரிடமிருந்து சமூகத்தின் இன்றையை பிரச்சனைகளுக்கான மூல காரணம் சாதாரண மொழியில் கூறப்பட்ட போது மக்கள் அதனை இலகுவாக உள்வாங்கிக் கொண்டார்கள். புதிய அலை ஒன்றை இந்த நேர்காணல் பிரித்தானியா முழுவதும் ஆரம்பித்துள்ளது.
‘நான் இதுவரைக்கும் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கவில்லை. அது அக்கறையின்மையால் அல்ல. அரசியல் அதிகாரவர்க்கத்தின் அலட்சியம், துரோகம், மோசடி, பொய் ஆகியவற்றால் களைப்பும் சோர்வும் அலட்சிய மனோபாவத்தையும் அடைந்தமையாலேயே நான் வாக்களிக்கவில்லை. ஏனையவர்களையும் வாக்களிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட வர்க்கம் அரசியல் அதிகாரவர்க்கத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை.
அரசியல் வர்க்கம் பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு சேவைசெய்வதிலேயே அக்கறை கொண்டது. உலகம் நிர்மூலமாக்கப்படுகின்றது, நாங்கள் ஒடுக்கப்பட்ட வர்க்கம் ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம், உலகம் முழுவதும் வறுமையடைந்தவர்களைச் சுரண்டுகிறோம். நான் புரட்சியையே தீர்வாக முன்வைக்கிறேன். நேர்மையான மாற்றத்தைக் கோருகின்றேன். இப்போதுள்ள அமைப்புக்குள் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது. கோப்ரட் மற்றும் அரசியல்ல் உயர் வர்க்கத்திற்கு சேவை செய்வதற்காக மட்டுமே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.’
ரஸல் பிராண்டின் இந்தக் கருத்துக்கள் சமூகத்தின் புதிய சிந்தனை மாற்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இதுவரைக்கும் ஏழைகளின் உணவைத் தட்டிப்பறித்து உண்ட அதிகாரவர்க்கம் இச் சாமானியனின் கருத்துக்களால் ஆத்திரமடைந்திருப்பது வியப்புக்குரியதல்ல.