கடும்குளிரும் அடை மழையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை தொடரலாம். எனவே, முதியோர்களும் குழந்தைகளும் மிகவும் அவதானத்துடனிருக்க வேண்டும். அத்தோடு மத்திய மாகாணத்தில் வெப்பநிலை மேலும் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜி.பி. சமரசிங்க தெரிவித்தார்.
இதுதொடர்பாக நேற்று வியாழக்கிழமை இடர்முகாமைத்துவ அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தொடர்ந்தும் தெளிவுபடுத்தலில் பணிப்பாளர் நாயகம் ஜி.பி.சமரசிங்க கூறுகையில், பொதுவாக மட்டக்களப்பில் வருடத்திற்கு 1650.9 மில்லி லீற்றர் மழை வீழ்ச்சியே காணப்படும். ஆனால், கடந்த 40 நாட்களுக்குள் 1859 மில்லி லீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதேபோன்றுதான் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் கடும் குளிரான காலநிலை நிலவுகின்றது.
1950 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆகக்குறைந்த வெப்பநிலையாக 18.8 பாகை செல்சியஸ் கொழும்பில் இன்று (நேற்று) பதிவாகியுள்ளது. அதேபோன்றுதான் நுவரெலியாவிலும் 1929 ஆம் ஆண்டிற்கு பிறகு 7.9 பாகை வெப்பநிலை நேற்று பதிவாகியுள்ளது. 1929 ஆம் ஆண்டில் நுவரெலியாவில் 2.6 பாகையான மோசமான வெப்பநிலையே பதிவாகியிருந்தது.
எவ்வாறாயினும் காலநிலை என்பது கடல், நிலம் மற்றும் வாயுக்கோளம் போன்றவற்றை உள்வாங்கப்பட்ட ஒரு விடயமாகும். பொதுவாக டிசெம்பர், ஜனவரி மாதங்கள் சாதாரண குளிர் நிலை காணப்படும். ஆனால், வழமைக்கு மாறாக தற்போது காணப்படும் சீரற்ற காலநிலைக்கு லாநினா என்ற காலநிலையை குறிப்பிடலாம்.
பருமனான முகில் மற்றும் பருவப்பெயர்ச்சிகளினால் சூரியக்கதிர் வீச்சு பூமியை வந்தடைய ஏற்படும் இடைவெளி செயற்பாடுகளினாலேயே லாநினா போன்ற காலநிலை ஏற்படுகிறது. பொதுவாக மேற்படி காலநிலையின் தாக்கம் இம்முறை இலங்கைக்கு சற்று அதிகமாகவே உள்ளது. இந்நிலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை தொடரலாம் என கூறினார்.







