கொரோனா வைரஸ் தொற்றின் சமீபத்திய திரிபுக்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது உலக அளவில் ஏற்படுத்த இருக்கும் பாதிப்பு மிக அதிக அளவில் இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உருமாற்றம் அடைந்துள்ள ஓமிக்ரான் திரிபு அதிக இடர்பாடுகளை ஏற்படுத்தலாம்.அதிக எண்ணிக்கையில் தொற்று பரவும் என்பதை எதிர்பார்த்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும். ஐநாவின் 194 உறுப்புநாடுகளை அது கோரியுள்ளது.
“முன்னர் வேறு திரிபுகள் எதிலும் இல்லாத அளவில் ஒமிக்ரான் திரிபில் முள்முடி பிறழ்வுகள் அதிகம் உள்ளன. இவற்றில் சில பிறழ்வுகள்
பெருந்தொற்று உலக அளவில் எப்படிச் செல்லும் என்ற பாதையை பாதிக்கும் வகையில் உள்ளன. இந்த திரிபின் ஒட்டுமொத்த உலக அளவிலான இடர்ப்பாடு அதிகமாக உள்ளது,இதுவரை ஓமிக்ரான் தொற்றால் மரணம் பதிவாகவில்லை. ஆனால், முன்னர் ஏற்பட்ட தொற்றினாலும், தடுப்பூசியினாலும் உடலில் ஏற்பட்ட நோய்த் தடுப்பு ஆற்றலை ஏமாற்றிவிட்டு உடலில் தொற்றினை ஏற்படுத்தும் ஆற்றல் ஒமிக்ரான் திரிபுக்கு எந்த அளவு உள்ளது என்பது குறித்து மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன என்கிறது ராய்டர்ஸ் செய்தி முகமை.
ஓமிக்ரான் திரிபு தொடர்பாக முதன் முதலாக தென்னாப்பிரிக்காவில் இருந்து உலக சுகாதார நிறுவனத்துக்கு நவம்பர் 24ம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு இந்த திரிபு உலகம் முழுவதும் பரவி வருகிறது. நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் பல நாடுகள் பயணத் தடைகளை விதித்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள முயல்கின்றன. தங்கள் எல்லைகளை வெளிநாட்டினர் நுழைய முடியாதபடி மூடுவதாக ஜப்பான் திங்கள் கிழமை அறிவித்துள்ளது. முன்னதாக இஸ்ரேல் இது போன்ற கடும் நடவடிக்கையை எடுத்துள்ளது.