ஒரு நேட்டோ நீதிமன்றத்திடம் நீதியான விசாரணையை எதிர்நோக்க முடியாது:முன்னாள் போஸ்னிய சேர்பிய தலைவர் ரடோவன் கராடிஜ்.

29.08.2008.
த ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றத்தில், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்குகின்ற முன்னாள் போஸ்னிய சேர்பிய தலைவர் ரடோவன் கராடிஜ் அவர்கள், அங்கு நீதிமன்றத்துக்குப் பதிலளிக்க மறுத்துள்ளார்.

அந்த நீதிமன்றத்தை ஒரு நேட்டோ நீதிமன்றம் என்று வர்ணிக்கின்ற அவர், அங்கு தான் ஒரு நீதியான வழக்கு விசாரணையை எதிர்நோக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

அவர் தான் குற்றவாளியா அல்லது குற்றமற்றவரா என்று கூற மறுத்த நிலையில், அவர் தன்னை குற்றமற்றவர் என்று கூறுவதாக நீதிபதி எடுத்துக்கொண்டார்.

வழக்கு விசாரணையின் போது, அவர் மீது குற்றச்சாட்டுக்களை மறு ஆய்வு செய்ய நீதிமன்ற வழக்குரைஞர்களுக்கு ஏன் அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது என்று கேள்வியெழுப்பிய நீதிபதி, செப்டம்பர் 17 ஆம் திகதி விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாகும்போது, கரடிஜ் அவர்கள் தனது தரப்பு வாதத்தை முன்வைப்பார் என்று கூறினார்.

கரடிஜ் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் 1990 ஆம் ஆண்டின் பொஸ்னிய மோதல்களுடன் தொடர்புபட்டவையாகும்.