எங்களின் நேட்டோ எதிர்ப்பு தாக்குதலை முறியடிக்க திரணியில்லாமல் தான் என் தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. ஆனாலும் நாங்கள் குகைக்குள் ஓடி ஒளியமாட்டோம். நேட்டோப்படை மற்றும் அமெரிக்காவி்ன் வான்தாக்குதலுக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என ஹபீஸ்சையத் கூறினார்.நேற்று முன்தினம் அமெரி்க்கா ,லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ்சையத்தின் தலைக்கு 10 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவித்தது.
இந்தியாவின் தூண்டுதலால் தான் அமெரிக்கா இவ்வாறு அறிவித்துள்ளது என்றும், ஒருவரின் தலைக்கு விலை வைப்பது என்பதும் கூட ஒரு வகையில் தீவிரவாத செயல்தான் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து, இந்தியாவிற்காகவே இந்த காரியத்தை அமெரிக்கா செய்கிறது என்றும், இதனால், அமெரிக்கா பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதொடு, மிகவும் வருந்த வேண்டியிருக்கும் என்றும் கூறி, இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான்மாலிக் கூறுகையில், அமெரிக்க அறிவித்துள்ள பரிசுத்தொகை குறித்து இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. எனினும் அவர் வீட்டுக்காவலில் இருந்திருக்க வேண்டும். ஆனால் சுப்ரீம் கோர்ட் மூலம் ஜாமினில் உள்ளார் என்றார்.