உலகத்தால் பெரிதும் அறியப்படாத தமிழ்நாடு, இந்திய வரலாற்றின் மையப்புள்ளியாக வரலாறு முழுவதும் திகழ்ந்திருக்கிறது. இந்தியா முழுவதும் சமஸ்கிருதமும், இந்துத்துவக் கோட்பாடும் பரவிய போதெல்லாம், தமிழ்நாடு நெஞ்சை நிமிர்த்தி, சமரசங்களுக்கும் விட்டுக்கொடுப்புகளுக்கும் அப்பால் போராடிக்கொண்டே வந்திருக்கிறது. இன்றும் உலகத்தின் அத்தனை நாடுகளும் பொருளாதாரச் சரிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும்போது, ஐரோப்பிய, அமெரிக்கப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியையும் மீறி, தமிழ்நாடு எங்கும் இல்லாதவாறு 11.2 சதவீதத் தனிநபர் வருமான வளர்ச்சியைக் (2025-26 இல்) எட்டியிருப்பது பல பொருளாதார அறிஞர்களைத் திகைக்க வைத்திருக்கிறது.
இது எப்படிச் சாத்தியமானது? இதற்கு இரண்டு முக்கிய காரணங்களைக் கோடிட்டுக் காட்டுகிறார்கள்:
- நிலையான அரசின் கொள்கை: தொடர்ச்சியான சமூக நலத் திட்டங்கள், மதச்சார்பின்மை, கல்வி, சுகாதாரம் மற்றும் தொழிற்கல்வி போன்றவற்றில் அரசின் முதலீடுகள்.
- உற்பத்தித் துறையின் வளர்ச்சி: 2025-26 இல் உற்பத்தித் துறை 14.74 சதவீத வளர்ச்சி கண்டிருப்பது உலகில் வேறெங்கும் நடைபெறாத ஒன்றாகும்.
இந்த வளர்ச்சி என்பது ஆர்.எஸ்.எஸ் மதவாத கும்பல்களை மட்டுமல்ல, இந்துத்துவக் கோட்பாடுகளை இன்னமும் நம்பியிருக்கும் காங்கிரஸின் ஒரு பகுதியையும் அச்சம்கொள்ள வைத்திருக்கிறது. இதனால், பி.ஜே.பி-யின் தமிழ்நாட்டின் மீதான தாக்குதல் முன்னெப்போதும் இல்லாதவாறு தீவிரமடைய ஆரம்பித்தது. இந்தச் சூழலில் தான், இந்த வளர்ச்சியை அழிப்பதற்குப் பலர் களத்தில் இறக்கப்படுகிறார்கள். இவ்வாறு அரசியலுக்கு வந்து சேர்ந்தவர் தான் நடிகர் விஜய்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குக் காரணமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளைத் தாக்கி அழிக்கவும், தி.மு.க-வை அதிகாரத்திலிருந்து அகற்றவும் விஜய்யை முன்வைத்து ஒரு கூட்டம் பணத்திற்காகச் செயல்பட்டிருக்கிறது. இவர்கள் தேர்தல் வாக்குகளைக் கவர்ந்தாலும் இல்லாவிட்டாலும், இந்தக்கும்பல் தமிழ்நாட்டின் இரண்டாயிரம் வருட வரலாற்றை அவமதித்திருக்கிறது. இத்தனைக்கும் பின்னாலும் விஜய்யின் பின்னால் ஓடிய ஊடகங்களின் வரலாறு தமிழ்நாட்டிற்குப் புதியது.
சமூக விரோதச் செயல்பாடுகள்:
கரூரில் பலர் கொல்லப்பட்டு, பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முடக்கப்பட்டதற்குச் சமமான சம்பவங்கள் விஜய் சென்ற அனைத்து இடங்களிலும் காணப்பட்டன. இந்தச் சமூகவிரோதச் செயல்பாடுகளைத் துணிந்து அரங்கேற்றுவதற்கு நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த இளைஞர்கள் முன்வரமாட்டார்கள் என்பது வெளிப்படை. அவர்களுக்கு மரங்களின் மேலே ஏறி ஆபத்துகளைச் சந்திக்கவோ, மின்சாரக் கம்பங்களின் மேலே ஏறி உயிரைப் பணயம் வைக்கவோ துணிச்சலில்லை. ஆகவே, இச்செயல்பாடுகளை உழைக்கும் மக்கள் மத்தியிலிருந்து வந்த இளைய பகுதியினரே முன்னெடுத்திருக்க வேண்டும்.
சமூகத்தாலும் அரசியல் கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்ட இவர்களின் ஒரே வடிகாலாகச் சினிமா மட்டுமே திகழ்ந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, சினிமா சாகசங்களைத் தமது வாழ்க்கையின் எதிர்காலமாகக் கருதியதன் விளைவுதான் விஜய் மீதான பற்றாக மாறியிருக்கிறது; அதுவே சமூக விரோதச் செயல்பாடுகளின் மையப்புள்ளியாகவும் இருந்திருக்கிறது.
ஆனால், இந்தச் சமூக விரோதச் செயல்பாடுகளைத் தனது நலனுக்காக விஜய் கும்பல் பயன்படுத்திக்கொண்டது. அதுமட்டுமல்ல, இச்செயல்பாடுகளை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுத்தது. கரூரில் காவல்துறையின் கவனத்தைத் திசைதிருப்பி, திரளான கூட்டத்தின் நடுவே பிரச்சார வாகனத்தைச் செலுத்தி மக்களைக் காயப்படுத்திய பின்னரும், இச்சம்பவங்களுக்குப் பொறுப்பேற்க மறுத்து, இளைஞர்களின் சமூக விரோதச் செயல்பாடுகளை நிறுவனமயப்படுத்தியது இந்தக் கும்பல்.
தனது பிரச்சாரத்தின் இறுதி நாள் வரை விஜய்யின் ஒரே நோக்கம் சமூக விரோதச் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தி வளர்ப்பதாகவே இருந்தது. எனவே, விஜய் குழு என்பது ஒரு கட்சியல்ல, அது ஒரு சமூகவிரோதக் கும்பல்.
அப்பாவி உழைக்கும் மக்களின் சமூகத்தின் மீதான வெறுப்புக்குத் தீர்வு காண மறுத்தது தி.மு.க அரசு; பி.ஜே.பி அதனை மௌனமாக வளர்த்தது; இடதுசாரிச் செயல்பாட்டாளர்கள் இவற்றைக் கண்டுகொள்ளவில்லை. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்ட விஜய், ஒரு நிறுவனமயப்பட்ட சமூகவிரோதக் குழுவைக் கட்டமைத்துள்ளார். இது தமிழ்நாட்டின் அவமானம், இந்தியா முழுமைக்குமே ஆபத்தானது.
சமூக வலைத்தளங்களும் கருத்துக்கணிப்புகளும்:
உலகம் முழுவதும் உள்ள பெரும் வியாபார நிறுவனங்கள் சமூக வலைத்தளங்களையே நம்பியிருக்கின்றன. அதற்கேற்றபடியே அவற்றின் படிமுறை (Algorithm) கட்டமைக்கப்பட்டுள்ளது. இச்சமூக வலைத்தளங்கள் ஊடாக ஒரு ‘உச்ச வளர்ச்சிப் புள்ளியை’ (Tipping Point) ஏற்படுத்துவதன் மூலம் வியாபாரப் பெருக்கம் தொடங்குகிறது.
ஆனால் அது மக்கள் அனைவரையும் சார்ந்தது அல்ல; இளைஞர்கள் மத்தியில் மட்டுமே அது ஆரம்பத்தில் செயல்படுகிறது. உதாரணமாக, ஐரோப்பாவில் யோகா என்பது இப்போது நடுத்தர வர்க்க இளைஞர்கள் மத்தியில் பிரபலமானதற்குச் சமூக வலைத்தளங்களின் பங்கே முதன்மையானது. அதன் பலனை ஒரு நிறுவனம் மட்டுமல்ல, ஏறத்தாழ 30 பெருநிறுவனங்கள் வியாபாரத்தை விருத்தியாக்கப் பயன்படுத்திக்கொண்டன.
விஜய் தெருமுனைப் பிரச்சாரங்களை மட்டும் நம்பியிருக்கவில்லை. கடந்த ஒரு வருடமாகப் பல்வேறு சமூக வலைத்தள மேலாண்மை நிறுவனங்கள் ஊடாகத் தமது பொய்களை நியாயப்படுத்தவும், சமூக விரோதச் செயல்பாடுகளை நிறுவனமயப்படுத்தவும் ஒரு குழுவை உருவாக்கியிருந்தது. இன்ஸ்டாகிராம் எப்படிச் செயல்படுகிறது என்பதை அந்த நிறுவனங்கள் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளன:
- Step 1: சோதனை (ஆரம்பகட்ட விநியோகம்): நீங்கள் ஒரு பதிவை இடும்போது, இன்ஸ்டாகிராம் அதை ஒரு சிறிய குழுவினருக்குக் காட்டுகிறது (உங்கள் பின்தொடர்பவர்கள் + பின்தொடராத சிலர்). இது தொடக்கக்கால சமிக்ஞைகளை (விருப்பங்கள், கருத்துகள், பகிர்வுகள், பார்க்கும் நேரம்) கவனிக்கிறது. இது ஒரு சோதனை கட்டத்தைப் போன்றது.
- Step 2: மதிப்பீடு (செயல்திறன் சரிபார்ப்பு): மக்கள் விரைவாக ஈடுபடுகிறார்களா, இறுதிவரை பார்க்கிறார்களா, பகிர்கிறார்களா என்று இன்ஸ்டாகிராம் சோதிக்கிறது.
- Step 3: ஈடுபாட்டு விகிதம்: மேற்சொன்ன காரணிகளைப் பயன்படுத்தி தரத்தைக் கணக்கிடுகிறது.
இதனைப் பயன்படுத்தி விஜய்க்காக வேலை பார்க்கும் நிறுவனங்கள் 5,000 பகிர்வுகளை மேற்கொண்டால், அது 2.5 கோடி மக்களின் பார்வைக்கு உட்பட்டதாகிவிடுகிறது. வெளியே இருக்கும் அரசியல் விமர்சகர்கள், பார்வையாளர்கள், கருத்துக் கணிப்பாளர்கள் இது மக்களின் பொதுவான கருத்து என ஏமாற்றப்பட்டுவிடுவார்கள். இதன் அடிப்படையிலேயே கருத்துக்கணிப்புகள் வெளியாகின்றன.
மறுபடி மறுபடி மக்களின் பார்வைக்கு உட்படும் விஜய் குழுவின் இந்த நடவடிக்கைக்கு மக்களின் உண்மையான ஆதரவு தேவையற்றது; வெறும் பணம் மட்டுமே போதுமானது. ஆனால், அரசியலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அது பொதுவான சமூகத்தின் கருத்தாகக் காண்பிக்கப்படுகிறது.
விஜய் குழுவைப் பொறுத்தவரை, அரசியல் கட்சிகளாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்ட, அல்லது தொடப்படாத நகர்ப்புற உழைக்கும் மக்கள் சார்ந்த சினிமாவிற்கு அடிமையான இளைஞர்களே வாக்காளர்கள். தவிர, இரு பெரும் கட்சிகளுக்கும் வாக்களிக்க மறுக்கும் ஒரு பகுதியினரும், சினிமாவிற்கு அடிமையான மத்தியதர வர்க்கத்தின் கீழ்த்தட்டு இளைஞர்களும் வாக்காளர்கள் ஆகலாம்.
இவ்வாறான ஒரு சமூக விரோதக் கும்பலுக்குச, சிறு பகுதியானாலும் ஆதரவு கிடைப்பதற்கு, தமிழ்நாட்டைத் தலைமையேற்று நடத்தும் கட்சிகளும், சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இடதுசாரிச் செயல்பாட்டாளர்களின் மௌனமுமே காரணம்.
-SN







