போதிய எடையின்றிக் காணப்படும் குழந்தைகளில் முஸ்லிம் குழந்தைகள்தான் அதிகம் என்றும், போதிய உணவு கிடைக்காத குழந்தைகளில் பழங்குடியினக் குழந்தைகள்தான் அதிகம் என்று சிறுவர் உரிமைகளுக்கான எச்.ஏ.கியூ மையம் தயாரித்துள்ள இந்தியச்சிறுவர்களின் நிலை-2008 என்ற அறிக்கை கூறுகிறது. 43 சதவீதமான முஸ்லிம் குழந்தைகள் எடைக்குறைவுள்ளதாக இருக்கின்றன என்று கூறும் அந்த அறிக்கை, அரசு அறிவிக்கும் பல்வேறு உணவுத்திட்டங்கள் சிறுபான்மை மற்றும் தலித், பழங்குடிக்குழந்தைகளுக்கு போய்ச் சேருவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ராஜேந்திர சச்சார் குழுவும் இந்த அம்சத்தை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உணவு மற்றும் வேறு சில பலன்களை அளிக்க உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் வெறும் எட்டு சதவீத முஸ்லிம் குழந்தைகளுக்கே சென்றடைகிறது. பொது விநியோகத்திட்டத்தின் பலன்களும் இவர்களுக்கு முறையாகப் போய்ச் சேருவதில்லை என்று இந்த அறிக்கை கூறுகிறது.
தலித் மற்றும் பழங்குடியினக் குழந்தைகள் மத்தியிலும் மோசமான நிலைதான் நிலவுகிறது. இவர்களில் பத்து சதவீதம் பேருக்குத்தான் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் பலன்கள் கிடைக்கின்றன. கிட்டத்தட்ட 15 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் ஏற்படும் பிரச்சனைகளைச் சந்தித்து வரும் வேளையில், பட்டினியால் இறக்கும் குழந்தைகளில் தலித் மற்றும் பழங்குடியினக் குடும்பங்களிலிருந்துதான் அதிகமான குழந்தைகள் பலியாகின்றனர்.
தங்கள் ஆய்வு குறித்து கருத்து தெரிவிக்கும் எச்.ஏ.கியூ. மையத்தின் இனாக்சி கங்குலி, குழந்தைகளுக்கான தேசிய வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்தால் மட்டும் போதாது. இந்தத் திட்டங் களிலிருந்து சிறுபான்மையி னர், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் விடுபட்டுப் போகிறார்கள். இந்த அம்சம் அங்கீகரிக்கப்பட்டு, சரிசெய்யப்பட வேண்டும் என்கிறார். பிறக்கும்போதே இறந்து விடுவது அல்லது ஐந்து வயதுக்கு முன்பே உயிரிழப்பது போன்ற அவலங்களும் தலித் மற்றும் பழங்குடியினக் குடும்பங்களில்தான் அதிகமாக நிகழ்கின்றன.
சுகாதார நலத்திட்டமோ அல்லது மருத்துவ வசதிகளோ கிடைப்பதில் இவர்கள் பெரும் சிரமப்படுவதால் நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் இந்தக் குழந்தைகளுக்கு அதிகமான உள்ளன. நாட்டின் மக்கள் தொகையில் 7.8 சதவீதம் பேர் பழங்குடி களாவர். ஆனால் மலேரியா நோயால் பாதிக்கப்படுபவர் களில் 30 சதவீதம் பேர் இவர்கள்தான். அதிலும் மலேரியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப் பவர்களில் 75 சதவீதம் பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களாவர். சுகாதாரம், கல்வி குறித்து குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்களை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.