யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் சம்பந்தமான முறைப்பாடுகளுக்கு தான் முகம் கொடுக்கத் தயாரெனவும் தனக்குக் கீழ் கடமை புரிந்த இராணுவத்தினருக்காக எல்லா பொறுப்புக்களையும் தான் ஏற்கத் தயார் எனவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளோடு தான் ஒத்துப் போவதாகவும் இலங்கை இராணுவத்திற்காக அதற்கு முகம் கொடுக்கத் தான் தயார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இலங்கையில் ஜனநாயகம் உடைக்கப்படுதலும் மனித உரிமைகள் மீறப்படுவதும் சர்வசாதாரணமானது எனவும் இதற்கு முன்பும் இது சம்பந்தமாக ஐ.நா. அறிவித்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒசாமா பின்லாடனின் மரணம் சம்பந்தமாக அவர் கருத்து தெரிவிக்கையில் அதனை தைரியமானதும் உறுதியானதுமான தாக்குதலாக தான் கருதவில்லை என்றும் எவ்வாறாயினும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அந் நாட்டு இராணுவத் தளபதியை சிறைச்சாலைக்கு அனுப்பும் செயலிலோ அந் நாட்டில் கட் அவுட் வைக்கும் நடவடிக்கைகளிலோ ஈடுபடாமல் இருப்பார் எனத் தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







