அறுபது வருடங்கள் சிறீ லங்கா அரச பேரினவாதம் சிறுகச் சிறுக நிகழ்த்திய இனப்படுகொலை வன்னி நிலப்பரப்பில் இறுதி யுத்தம் என்ற தலையங்கத்தில் ஐம்பதாயிரம் மக்களை அழித்துச் சிதைத்திருக்கிறது. திட்டமிடப்படாத போராட்டம் அப்பாவிகளைப் பலிகொண்டு தன்னையும் அழித்துக்கொண்டது. பெருந்தேசிய ஒடுக்கு முறையின் கோரத்திற்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் நியாயமானதும் தன்னுரிமைக்கான தேசிய விடுதலைப் போராட்டம் தேவையானதுமாகும் என்பதில் எந்தவகையான ஐயத்திற்கும் இடமில்லை.
தமிழ்ப் பேசும் மக்களின் எதிர்ப்பு யுத்தமும் எழுச்சியும் ஆரம்பத்திலிருந்தே வல்லரசுகளின் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு அதன் ஒவ்வொரு முற்போக்குக் கூறுகளும் சிறுகச் சிறுகச் சிதைக்கப்பட்டு நந்திக கடலில் இரத்தமும் சதையுமாகக் கரைந்து போய்விட்டது.
வன்னி இனப்படுகொலை நிகழ்ந்து இரண்டு வருட மௌனத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையின் ஒரு பகுதி ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இலங்கை அரசினதும் புலிகளினதும் போர்க்குற்றங்களைச் சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை தெற்காசிய அரசியலில் மீண்டும் புதிய அசைவுகளைத் தோற்றுவித்திருக்கின்றது.
அமரிக்க ஐரோப்பிய வல்லரசுகள் ஈராக்கிலும், ஆப்கானிலும், வியட்னாமிலும், நிகாரகுவாலும், கிரனடாவிலும் புரிந்த போர்க்குற்ரங்களுக்குச் சற்றும் குறைவின்றி சாட்சியின்றி நடத்தப்பட்ட மகிந்த அரசின் இனப்படுகொலையும் போர்க்குற்றங்களும் நவீன பாசிசத்தின் முன் மாதிரியாகத் திகழுமோ என ஜனநாயக வாதிகளும் முற்போக்காளர்களும் அச்சம் கொள்ளும் சூழலில் ஐக்கிய நாடுகளின் அறிக்கை நம்பிக்கை தருவது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தம்மைத் தகவமைத்துச் செயலாற்றும் உலக வல்லரசுகளின் அடியாள் போன்று தொழிற்படுகின்ற ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கை இரு பெரும் முகாம்களை உருவாக்கியுள்ளது.
ஒரு புறத்தில் அறிக்கை வெளியான மறுகணமே, பௌத்த சிங்கள
மேலாதிக்க வெறியை, அரசியல் உள்முரண்பாடுகளைக் கடந்து மேலும் உத்வேகமடையச் செய்துள்ளது. மகிந்த ராஜபக்ச குடும்ப அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, ஏனைய பெருந்தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் முரண்பட்ட அணிகளும், மக்கள் விடுதலை முன்னணி போன்ற அனைத்துக் கட்சிகளும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கைக்கு எதிராகப் பெருந்தேசிய பௌத்த சிங்கள வெறியை முன்வைத்து ஓரணியில் திரண்டுள்ளன.
பண்பாட்டு அழிப்பு, கலாச்சர ஆக்கிரமிப்ப்பு, பௌத்த மயமாக்கல், சிங்களக் குடியேற்றங்கள் இராணுவ ஆக்கிரமிப்பு போன்ற அனைத்துத் தளத்திலும் தேசிய இன ஒடுக்குமுறை இடைவெளியின்றித் தொடர்கிறது. சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கப்பட்ட பெருந் தேசிய நச்சு விதைக்கு ஐக்கிய நாடுகளுக்கும் மேற்கிற்கும் எதிரான போராட்டம் என்ற முழக்கத்தின் கீழ் உரமிடப்படுகின்றது.
இதற்கெல்லாம் ஒரு படி மேல் சென்று, சிங்கள பௌத்த அடிப்படைவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமைய அமரிக்க எதிர்ப்பு முழக்கத்தை நேரடியாகவே முன்வைக்கின்றது. ரஜீவ் காந்தி, ரணதுங்க பிரமதாச போன்றோரைக் கொலைசெய்வதற்கு அமரிக்காவும் பிரித்தானியாவும் விடுதலைப் புலிகளைப் பயன்படுத்திக்கொண்டன என்கிறது. இனப்படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான கோதாபய ராஜபக்ச இறையாண்மையைப் பற்றிப் பேசுகிறார். பேரினவாதமும் மேற்கு எதிர்ப்பும் இணைந்த நச்சுக்கலவையின் கீழ் அனைத்துப் பேரினவாதக் கட்சிகளும் ஒரு நேர் கோட்டில் இணைந்துள்ளன.
இதன் மறு புறத்தில் தமிழ் இனவாதமும், தேசிய வெறியும்
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தையும் அமரிக்க அதிகாரத்தையும் தமது ரட்சகர்களாகக் கருதி புதிய கனவுகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். ராஜபக்ச அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிராக, அமரிக்க ஐரோப்பிய அரசுகளும் ஐக்கிய நாடுகள் நிறுவனமும் செயற்படுவதாக அடித்துக் கூறுகிறார்கள். உலகின் ஒவ்வொரு சந்துகளிலும் மனித இரத்தத்தைப் பதித்த வரலாற்றுப் பெருமை கொண்ட மேற்கின் அரசுகளெல்லாம் ஒடுக்கப்பட்ட தமிழர்களின் நண்பர்கள் எனப் பிரகடனப்படுத்துகிறார்கள்.
அப்பாவித்தனமான அறியாமை இருளின் விழிம்பில் வாழ்கின்ற தமிழர்களும் அவர்களின் சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளும் இணைந்து கொண்ட கோமாளித்தனமான நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.
இவை அனைத்திற்கும் மேலாக இலங்கையில் பேரின வாதக் கட்சிகள் விரும்பும் சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத் தீயிற்கு எண்ணை வார்க்கும் “கைங்கரியத்தை” இவர்கள் தம்மை அறியாமல் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் கூறுவது, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கையை எதிர்ப்பதற்காவல்ல மாறாக எவ்வாறு பேரினவாதிகளின் நோக்கத்தைப் புரிந்து கொள்கிறோமோ அவ்வாறே ஐக்கிய நாடுகளின் பின்னணியையும் நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே.
80 களில் இந்திய அரசின் நோக்கத்தையும் அதன் அரசியல் பிபுலத்தையும் புரிந்து கொண்டிருந்தால், முள்ளிவாய்க்கால் வரை நாம் சென்று நந்திக்கடலில் வீரம் செறிந்த ஒரு சந்ததியின் போராட்டத்தைக் கரைத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
இப்போது வரலாற்றின் மறு சுற்று ஆரம்பமாகிறது, மேற்கின் நலன்களைப் பேணுகின்ற ஐக்கிய நாடுகள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக நமது போராட்டம் இன்னொரு அழிவை நோக்கி நகர்த்தப்படுமா என அச்சம் தோன்றுகிறது.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நோக்கங்கள்:
1. ஆப்கானிஸ்தானில் கொத்தணிக் குண்டுகளை அறிமுகம் செய்த அமரிக்க நலன்களை தெற்காசியாவில் உறுதிப்படுத்தல்.
2. புதிதாக எழுச்சிகொள்ளும் சூழலில் காணப்படுகின்ற தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தை நம்பிக்கைகளை வழங்குவதனூடாகத் தற்காலிகமாக பின்னடைவிற்கு உள்ளாக்குதல்.
3. தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு செழுமை பெற்ற வழிமுறைகளூடாகப் போராட்டம் தொடர்பான கருத்தியல் உருவாகும் சூழலை சிதைவடையச் செய்தல்.
4. சந்தைக்கான சூழலை இலங்கையிலும் அதனைச் சார்ந்து தெற்காசியாவிலும் உருவாக்குதல்.
நிபுணர் குழுவின் அறிக்கைகளைப் பயன்படுத்திக் கொள்வதும் அதனை முன்வைத்து புதிய, ஜநாயக – முற்போக்கு அரசியலை வளர்ப்பதும் சமூக அக்கறைகொண்ட ஒவ்வொரு மனிதனதும் கடமையாகும்.
1. உலகில் தமிழ்ப் பேசும் மக்களைப் போன்ற ஒடுக்கப்பட்ட மக்கள் அணிகளையும் போராட்டக் குழுக்களையும் இணைத்துக்கொள்வதற்கு அறிக்கையின் தகவல்கள் பயன்படுஆன த்தப்பப்டலாம்.
2. புலம் பெயர் நாடுகளின் மனிதப் படுகொலைகளுக்கு எதிரான உலக மக்கள் அபிப்ப்ராயத்தை ஏற்படுத்த அறிக்கை பெரிதும் துணை செய்ய்யும்.
3.உலக மக்களினதும் மனிதாபிமானிகளதும் கவனத்தை இலங்கையை நோக்கி ஈர்பதற்கும் மக்கள் போராட்டத்திற்கான ஜனநாயக இடைவெளியை உருவாக்கவும் ஐ.நா அறிக்கை பயன்படும்.
4. இனவாதமின்றிய மக்கள் பற்றுடனான செயற்பாடுகள் இனப்படுகொலை குறித்த விழிப்புணர்வை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கப் பயன்படும்.
இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் பின்பலத்தில் செயற்படும் ராஜபக்ச குடும்ப ஆட்சி தண்டிக்க்கப்பட போவதில்லை. ஐக்கிய நாடுகளதும் அமரிக்க அய்ரோப்பிய அரசுகளதும் நோக்கமும் தண்டிப்பதல்ல. இவ்வரசுகள் தமது நலனை தெற்காசியாவில் உறுதிப்படுத்திக்கொள்வதே இறுதி நோக்கம். அதற்கான அழுத்தம் அறிக்கையின் ஊடாக வழங்கப்படுகின்றது.
அழிக்கப்படுவதற்கான அரசியலை – தமது வியாபார அரசியல் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட – எந்த அரசு முன்வைத்தாலும் அதற்கு எதிராக மனிதாபிமானிகளும், ஜனநாயகவாதிகளும் முற்போக்கு சக்திகளும் போராடுவார்கள் என்பதை உணர்த்துவது எமது கடமை. நீண்ட அழிவுகள் நிறைந்த போராட்டத்திலிருந்து குறைந்தபட்சம் இதையாவது கற்றுக்கொண்டால் இன்னொரு மூலையில் மக்கள் முடக்கப்பட்டு அழிக்கப்படுவதை தடுப்பதற்கான முன் முயற்சியாக அமையும்.








அன்னதானம் என்கின்ற இலவச உணவு இன்று இந்துக் கோவில்களில் மட்டுமே வழங்கப்படுகிறது என்றே எண்ணுகிறேன், வேறு எங்குமே இலவசம் என்ற சொல்லுக்கு அா்த்தம் கிடையாது.எதை எடுத்தாலும் ஒரு நாணயம் செலவிடப்படுமானால் இரண்டை எதிர்பார்த்தே செலவிடப்படுகிறது இந்த வியாபார உலகில் நமக்கு இலவசமாக நன்மை செய்ய ஓடிவருகிறார்கள் என்று நம்பினால் அதுதான் மடத்தனம்.
இந்து சமுத்திர பிராந்தியத்தில் இவா்கள் எப்படிப்பட்ட நலனை எதிர்பார்த்து அமரத்துடிக்கின்றார்கள், இதனால் நமக்கு இலாபமா, நட்டமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும், சில வேளை இவா்கள் கொடுக்கின்ற அழுத்தத்திற்கு ராஐபக்ஸ இணங்கிவிட்டால்(( அதாவது மேற்குலகிற்கே சுரண்டுவதற்கு முதலிடம்)) நாளையோ அல்லது மறுதினமோ இந்த ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை மாயமாக மறைந்துவிடலாம்.
இருந்தாலும் சில வேளை அவா்கள் நினைப்பது நடக்காத போது ஏற்படுகின்ற குழப்பத்தில் தற்செயலாக சில நன்மைகள் கிட்டலாம் அது நம்மையோ,நமது நியாயமான உரிமைக்கான போராட்டத்தை கெளரவித்தோ அல்ல.
திட்டமிட்ட போராட்டம் திட்டமிடா போராட்டம், சரியாகத் திட்டமிட்டதால் போராட்டம் வெற்றி, பிழையாகத் திட்டமிட்டதால் போராட்டம் தோல்வி என்ற அத்தியாயம் உலகச் சரித்திரத்தில் இன்னும் எழுதிமுடிக்காது வெறுமையாகவே இருக்கிறது.
போராட்டங்கள் திட்டமிட்டபடி வெற்றிகரமாக எப்போது தம் இலக்கை அடைந்துள்ளன? போராட்டங்கள் தோல்வியில் முடிந்தால் அது சரியாகத் திட்டமிடாததால்தான் வெற்றிபெறவில்லை என்ற முடிவுக்கு வரலாமா?
இரண்டாம் பந்தி முதல் பந்தியில் சொல்லப்படுவதற்கு முரணாக உள்ளதே!
மேற்குலகின் அணுகுமுறையில் புதிதாக ஒன்றும் கிடையாது,தமது சுய நலனிற்கு அப்பாற்பட்டு இவா்கள் மனித இனத்திற்கென்று எதையும் செய்துவிடப்போவதில்லை.
ராஐபக்ஸ இவா்களை முதன்மை சுரண்டல் போ்வளிகளாக ஏற்றுக்கொண்டால் போதும் இந்த பான் கீ மூனின் அறிக்கை மாயமாக மறைந்துவிடும், அப்படி இல்லையேல் சில வேளை இவா்கள் குட்டையை குழப்புகின்றபோது தற்செயலாக நமக்கு சில நன்மைகள் ஏற்படக்கூடும்,ஒருபோதும் அது எமது உரிமைபோராட்டத்தை அங்கீகரித்து நிகழ்வதாக இருக்காது.
எல்லாமே கறீவேப்பிலைக் கதைதான்.இவர்கள் நடிக்கிறார்கள் என்பதை நிஜமாக்கியதே லிபியா பிரச்சனைதான்.தமது மக்களயும் தமது இராணூவத்தையும் கூட அநியாயமாய் பலியிட்டும் தமது எதிர்கால நலனை பாதுகாப்பார்கள் என்பது மட்டுமல்ல இவர்கள் நம்பத் தகுந்தோரில்லை.நேற்றூ கடாபியின் காலைத் தடவியதும் இவர்களே இன்றூ லிபிய மக்கள் நலன் என கூக்குரலிடுவதும் இவர்களே.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு எதிராக ஒரு மில்லியன் கையொப்பங்களை பெறும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு முன்னெடுத்துவருகின்றது.
ஆனால் சிறீலங்கா அரசின் இந்த முயற்சிகளை முறியடித்து அறிக்கைக்கு ஆதரவாக ஒரு மில்லியன் கையொப்பங்களை திரட்டும் முயற்சிகளில் புலம்பெயர் தமிழ் மக்களும், அமைப்புக்களும் ஈடுபடவுள்ளதாக தமிழ் சமூகத்தின் பிரதிநிதி ஒருவர் எமது செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை அதிகாரமற்றது என தெரிவித்துவரும் சிறீலங்கா அரசு அதற்கு எதிரான செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளதும், அதற்கு எதிராக கையெழுத்துக்களை பெற்றுவருவதும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நாவின் அறிக்கையின் முக்கியத்துவத்தையும், அதனால் ஏற்படப்போகும் பாதிப்புக்களையும் தற்போதைய ஆட்சியாளர்களும், போர்க்குற்றவாளிகளும் நன்கு உணர்ந்துள்ளதாக வன்னியை சேர்ந்த தமிழ் பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட தமிழ் மக்களிடம் இருந்தும் ஐ.நாவுக்கு எதிராக கையெழுத்துக்களை பலவந்தமாக பெறும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் மகன் நமால் ராஜபக்சா முடுக்கிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்களுக்கு என்ற போர்வையில் சிறீலங்கா படையினருக்கான வீடுகளை கையளிக்கும் நிகழ்வு ஒன்னிற்காக அவர் நேற்று (22) கிளிநொச்சிக்கு வந்தபோதே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தயாரிப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளை முறியடித்து ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை வலுப்படுத்தி, அதில் காணப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சிறீலங்காவில் ஒரு இனஅழிப்பு நடைபெற்றுவருவதை உலகிற்கு உணர்த்த முடியும் என புலம்பெயர் நாட்டை தளமாகக் கொண்;ட தமிழ் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் இன அழிப்பு நடைபெற்றுவருவதை அனைத்துலக மட்டத்தில் உறுதிப்படுத்துவோமாக இருந்தால், அனைத்துலக சமூகத்தின் உதவியுடன் அழிக்கப்படும் இனத்தின் அரசியல் உரிமைகளை நிலைநாட்ட முடியும். எனவே ஐ.நாவின் அறிக்கை என்பது சிறீலங்காவில் இனஅழிப்பு நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்வரும் நாட்கள் என்பது தமிழ் மக்கள் தமது இராஜதந்திர முயற்சிகளில் உச்சத்தை தொடவேண்டிய காலம். நாம் அவசரமாக பின்வரும் நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்.
• இராஜதந்திர சந்திப்புக்களை மேற்கொள்ளுதல்
• ஐ.நாவின் அறிக்கையில் காணப்படும் பரிந்துரைகளை நிறைவேற்றக்கோரி பத்து இலட்சம் கையெழுத்துக்களை திரட்டுதல்.
• புலம்பெயர் தமிழ் மக்கள் தாம் வாழும் நாடுகளில் உள்ள அரச துர்துவர்களை சந்தித்து அவர்களின் ஆதரவுகளை திரட்டுதல்.
• அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்களுடன் உறவுகளை வலுப்படுத்தி, அவர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ளுதல்.
• அனைத்துலக ஊடகங்களின் ஆதரவுகளை அறிக்கைக்கு ஆதரவாக திரட்டுதல்.
• அறிக்கைக்கு ஆதரவாக பேரணிகளை நடத்துதல்.
• புரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்தக்கோரி ஐ.நாவுக்கு அழுத்தம் கொடுத்தல்.
http://www.eelamenews.com/archives/100304#more-100304
அறிக்கை பூரணமாக வெளிவரமுன் அவசரப்படவேண்டாம்…
முதலில் அறிக்கை வெளிவரட்டும் , அதன் பின் என்ன நடவடிக்கை எ டுக்கலாம் என்று தீர்மானிப்போம் .