27 – July – 2008
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற பிரதிநிதிகள் அடங்கிய தூதுக்குழுவினர் மூன்று தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து தற்போதைய நாட்டின் அரசியல் நிலைவரங்கள் மற்றும் தொடரும் யுத்த நடவடிக்கைகள் என்பன தொடர்பாக விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
கொழும்பு யூனியன் பிளேஸிலுள்ள ஜெய்ஹில்டனில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்)த்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா பிரிவு)யைச் சேர்ந்த எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் யுத்த நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் மிகப்பெரும் மனித அவலத்தை எதிர்கொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் மரநிழல்களுக்கு கீழே தஞ்சமடைந்து அகதிகளாக்கப்பட்டு வறுமையின் எல்லைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் “யுத்தம்’ என்ற கடும் போக்கை கைவிட்டு அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வொன்றைக் காண்பதற்கு ஐரோப்பிய ஒன்றியமும் ஏனைய சர்வதேச சமூகமும் தமது கடுமையான அழுத்தத்தை பிரயோகிக்கவேண்டும்.
ஆட்கடத்தல், கைது, காணாமல்போதல் போன்ற நடவடிக்கைகள் நாடு பூராவும் பரவலாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அதேபோல் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும் ஆயுதபாணிகளால் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதையும் மறுக்க முடியாது.
எனவே, தென்னிலங்கையில் மட்டுமன்றி வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும் ஜனநாயகம், பன்முகத்தன்மை மிகவும் அவசியமானதொன்றாகும். இல்லையேல் மனிதப் பேரழிவுகளை தடுப்பதென்பது மிகவும் கடினமானதொரு விடயமாகும்.
யுத்தத்தின் மூலம் எவரும் நிரந்தர சமாதானத்தையும் நேர்மையான தீர்வொன்றையும் காணமுடியாது.
எனவே, அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வொன்றைக் காண்பதற்கு ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச சமூகமும் முன்வர வேண்டுமென்றும் மூன்று தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதேநேரம், இன்றைய யுத்த நிலைமைகள், அதனால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு முயற்சிகள் தொடர்பான ஆலோசனைகள் என்பன தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற பிரதிநிதிகள் மிகவும் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டதாகவும் மூன்று தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் மேலும் தெரிவித்தனர்.