மோதல் பிரதேசத்திற்கு மனிதாபிமான பணியாளர்கள் செல்வதற்கான ஒப்புதலை அரசிடம் இருந்து பெறுவதற்கு தம்மால் இயலவில்லை என்று இலங்கையில் பயணம் செய்துவரும் ஐ.நா. மன்றத்தின் தூதரான ஜான் ஹோம்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் விஜயமாக இலங்கை வந்துள்ள ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி சர் ஜோன் ஹோம்ஸ் கொழும்பில் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அகதி முகாம் பார்வையிடல்
இதற்கிடையில், வவுனியாவில் உள்ள அகதி முகாம்கள், நலன்புரி நிலையங்கள் போன்றவற்றிற்கு ஜோன் ஹோம்ஸ் விஜயம்செய்து, அங்கு தங்கியுள்ள மக்களிடமும் அதிகாரிகளிடமும் முகாம் நிலவரம் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.
வவுனியாவில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ஜோன் ஹோம்ஸ், “மக்களுக்குத் தேவையான கூடாரங்களை அமைப்பது, குடிநீர், சுகாதார வசதிகளை ஏற்படுத்துவது. உணவு வழங்குவது போன்றவற்றில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதைத் தெளிவாகக் காணமுடிகின்றது. அரசாங்கம், ஐநா அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளுர் அதிகாரிகள் அனைவரும் இணைந்து ஒரு குழுவாக இந்த பாரிய பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் செயற்பட்டு வருகின்றார்கள். இருந்தாலும் இந்தப் பணிகளில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கின்றது” எனக் குறிப்பிட்டார்.
இதனிடையே பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மைக் பொஸ்டர் அவர்களும் வவுனியா முகாம்களுக்கு விஜயம் செய்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
BBC