ஐ.நா ஊடாக விடுதலைப் புலிகள் போர்நிறுத்தத்திற்கு முயற்சி; அரசாங்கம் நிராகரித்துவிட்டது என்கிறார் கெஹலிய

09.08.2008.

ஐக்கிய நாடுகள் சபையூடாக விடுதலைப் புலிகள் உடனடி போர்நிறுத்தத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்கத்தின் பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 7ஆம் திகதி விடுதலைப் புலிகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்த வேண்டுகோளை அனுப்பிவைத்துள்ளதாகவும், இதுதொடர்பாக ஐ.நா இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க ஆயுதப் படைகள் கிளிநொச்சியிலுள்ள தமிழ் மக்கள் மீது இரு முனைகளில் தாக்குதல்களை தொடுத்துள்ளதாக விடுதலைப் புலிகள் தமக்கு அறிவித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹனவிடம் தெரிவித்துள்ளதாகவும் கெஹலிய ரம்புக்கெல தெரிவித்துள்ளார்.

ஆனால், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கவேண்டும் எனும் கோரிக்கை தொடர்பில் மௌனமாக இருந்துவருவதாகவும், அரசாங்கம் விடுதலைப் புலிகளின் இந்த வேண்டுகோளை நிராகரித்துவிட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியில் விடுதலைப் புலிகள் பாரிய இராணுவ ரீதியான அழுத்தங்களை எதிர்நோக்கியிருப்பதன் காரணமாகவே போர்நிறுத்தத்திற்கு முயற்சிப்பதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் பிடியிலுள்ள மக்களை மீட்டெடுப்பதற்கு தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கையைத் தவிர வேறுவழி இல்லையென்றும் அவர் கூறியுள்ளார்.

thanks:inllanka.com .