சனி, 5 ஜூலை 2008( 17:04 IST )
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கும் விடயத்தில் சமாஜ்வாடிக் கட்சிக்கும், அக்கட்சி அங்கம் வகிக்கும் ஐ.தே.மு. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், “தேச நலனிற்காக எதையும் தியாகம் செய்யத் தயார்” என்று சமாஜ்வாடி கட்சி கூறியுள்ளது.
இதனால் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி உடைவது உறுதியாகி விட்டது.
புது டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலர் அமர்சிங்கிடம், அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்கும் விடயத்தில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கின் நிலைப்பாட்டிற்கு இந்திய தேச லோக் தள் கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் செளதாலா கண்டனம் தெரிவித்துள்ளது பற்றிக் கேட்டதற்கு, “நாட்டின் நலனிற்காக நாங்கள் எதையும் தியாகம் செய்யத் தயார்” என்று கூறினார்.
“இந்த ஒப்பந்தத்தை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமே அங்கீகரித்த பிறகு, இந்த விடயத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கோ அல்லது சோனியா காந்திக்கோ நாங்கள் ஆதரவு அளிப்பதில் கேள்வி இல்லை. ஏனெனில் அது நாட்டின் நலன் சார்ந்தது” என்றார் அவர்.
அமரிக்கா திணிக்கும் இந்த அடிமை ஒப்பந்த்தம் நிறைவேறு பட்சத்தில் இந்தியாவின் தேசிய நலன் பாதுகாப்பு என்பன கேள்விக்குரியதாகிவிடும் என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டனர்.