மகிந்த ராஜபக்ச அரசு தன்னை நாட்டுப் பற்றுக்கொண்டதாகவும், சிங்கள பௌத்த வெறிகொண்டவர்களாவும், சிங்கள பெருந்தேசிய வாதிகளாகவும் ஏகாதிபத்திய எதிர்பாளர்களாவும் வெளியே காட்டிக்கொண்டு, உலக நாணய நிதியத்தினதும், உலக வங்கியினதும் கைக்கூலிகள் போன்று செயற்படுகின்றது.
இலங்கையில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் போன்றவற்றை அழித்து நாட்டை தனியாரருக்கும் பல்தேசிய நிறுவனங்களுக்கும் விற்பனை செய்து வருகிறது. பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு எதிராக தமது வாழ்வாதரத்திற்காகப் போராடும் மக்களைக் கோரமாக அடக்கியொடுக்கிவிட்டு அவரகளுக்குத் துரோகப்பட்டம் சூட்டுகிறது. தெற்காசிய நாடுகளில் மருத்துவம் மற்றும் இலவசக் கல்விச் சேவைகள் போன்றே இலங்கையில் ஒய்வூதியத்திட்டம் பலனுள்ளதாக அமைந்திருந்தது.
ஓய்வூதியப் பணிக் கொடுப்பனவை வங்கிக் கடனாக மாற்ற மகிந்த ராஜபக்ச அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக இலங்கையின் ஓய்வூதியத் திட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என ஐ.எம்.எப் ஆலோசனை வழங்கியிருந்தது.
வாழ் நாள் முழுவதும் உழைத்து தமது ஒய்வூதியப் பணத்தைச் செலுத்தி ஓய்வு பெற்ற பின்னரும் உழைத்தவர்களைக் கடனாளிகளாக்கும் மகிந்த அரசின் திட்டத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் போரடப் போவதாக அறிவித்துள்ளன.
இலங்கையில் உழைக்கும் மக்களின் மாற்றுத் தலைமை தமிழ்த் தேசியத்தின் பேராலும், சிங்கள பெருந்தேசிய ஒடுக்குமுறையாலும் அழிக்கப்பட்டுள்ள நிலையில் தொழிற்சங்கங்களின் போராட்டம் தற்காலிக அழுத்தங்களை மட்டுமே வழங்க வல்லன. பின் தங்கிய நிலப்பிரபுத்துவ மற்றும் ஏகாதிபத்திய சார்பு தேசியத்தையும், பெருந்தேசியத்தையும் அழித்து மக்களின் போராட்டம் சுய நிர்ணைய உரிமைக்காகவும் உழைக்கம் மக்களின் விடுதலைக்காகவும் முன்னெடுக்கப்பட வேண்டும்.