ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகு 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட எழுவரையும் விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உண்டு என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதியுள்ள விவகாரம் தாமதமாக தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் சட்டரீதியாக பல போராட்டங்களை நடத்திய பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் காரணமாக ஆளுநர் தன் முடிவை அறிவிக்க வேண்டும் என ஏழு நாள் கெடு விதித்திருந்தது. தமிழக அரசு எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் எழுதி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இந்த கெடு கடந்த வாரம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 26-ஆம் தேதி குடியரசு தின விழாவின் போதும், 30-ஆம் தேதி நேரடியாகவும் தமிழக முதல்வர் ஆளுநரைச் சந்தித்தார். ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என 30-ஆம் தேதி ஆளுநருடனான் சந்திப்பின் பின்னர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஆனால் குடியரசு தினத்திற்கு முன்பே எழுவரின் விடுதலை தொடர்பான கோரிக்கையை நிராகரித்த ஆளுநர் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி விட்டார். இந்த கடிதம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
இன்று உச்சநீதிமன்றத்தில் ஆளுநரின் பதிலை மத்திய அரசு மனுவாக தாக்கல் செய்ய இந்த விவகாரம் வெளியில் வந்துள்ளது. ஆளுநர் எழுதியுள்ள கடிதத்தில் ஆபத்தான பல விஷயங்கள் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 2011-ஆம் ஆண்டு முதல் இந்த விவகாரத்தை வைத்து அதிமுக அரசு நாடகங்களை அரங்கேற்றி வருகிறது.