எழுத்து மூல உத்தரவாதம் கேட்கிறது ஜோர்ஜியா !

13.08.2008.

ஜோர்ஜியாவில் இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருமாறு தான் உத்தரவிட்டிருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வெதேவ் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கும் அதேவேளை, மொஸ்கோ படை நடவடிக்கைகளை நிறுத்தியது தொடர்பாக அதிகளவிலான ஆதாரங்கள் தேவையென ஜோர்ஜியா கூறியுள்ளதுடன் சமாதான ஏற்பாடுகளில் ரஷ்யா கையெழுத்திடும் வரை “சகல வற்றுக்கும் ஆயத்தமாக’ இருப்பதாகக் கூறியுள்ளது.

மொஸ்கோவில் நேற்று பிரேஞ்சு ஜனாதிபதி சார்கோஸியை சந்திப்பதற்கு முன்னராக ஜோர்ஜியாவில் படை நடவடிக்கைகளை நிறுத்த தான் உத்தரவிட்டிருப்பதாக திமித்ரி மெத்வெதேவ் கூறியிருக்கிறார்.

உங்களுடைய அறிக்கையின் அடிப்படையில் ஜோர்ஜிய அதிகாரிகளை சமாதானத்திற்கு நிர்ப்பந்திப்பதற்காக இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருமாறு பணித்துள்ளேன் என்று ஜனாதிபதி திமித்ரி மெத்வெதேவ் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அனற்ரோலி சேர்டியுக்கோவுக்கு தெரிவித்ததாக கிரம்லின் பேச்சாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜோர்ஜியப் பிரதமர் லாடோ குர்ஜனிடிஸி ராய்ட்டருக்கு தெரிவிக்கையில்;

எமக்கு மேலும் ஆதாரங்கள் தேவை இச்சூழ்நிலையில் சகலருமே உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டும். அது இடம்பெறும் வரை நாம் ஆட்களைத் திரட்டுவோம். நாம் எதற்கும் ஆயத்தமாகவுள்ளோம் நான் அதனை மெத்வதேவ்வின் அறிவிப்பை பாராட்டுகின்றேன். ஆனால், இன்று உள்சார் கட்டமைப்புக்கு அதிக சேதம் ஏற்பட்டிருப்பதுடன், பொதுமக்களுக்கும் அதிக இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று ஜோர்ஜியப் பிரதமர் கூறியுள்ளார்.