எம்மை புலிகள் என கூறும் அளவுக்கு அரசு நன்றிகெட்ட தனமாக செயற்படுகிறது – சோமவன்ச

வீரகேசரி நாளேடு 7/17/2008 9:49:18 PM – அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் யுத்தத்திற்கு அன்றிலிருந்து இன்றுவரை நாம் ஆதரவு வழங்கி வருகின்றோம். எனினும், எம்மையே புலிகள் எனக் கூறும் அளவுக்கு அரசாங்கம் நன்றி கெட்ட தனமாக செயற்படுகின்றது. வேலை நிறுத்தம் செய்தமையினால் லால்காந்த எம்.பி. இன்று புலியாகி விட்டார் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

மக்களின் ஆதரவை உரசிப் பார்க்கவே இரு மாகாண சபைத் தேர்தல்களை அரசாங்கம் நடத்துகின்றது என்றும் அவர் மேலும் கூறினார். அநுராதபுரத்தில் கடபனஹவில் நேற்று மாலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அரசு முன்னெடுக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு அன்றிலிருந்து இன்று வரை நாங்களே ஆதரவு வழங்கி வருகின்றோம்.

எனினும், எம்மையே புலிகள் என சொல்லும் அளவுக்கு அரசாங்கம் நன்றி கெட்டதாகச் செயற்படுகின்றது. வேலை நிறுத்தம் செய்தமையால் லால்காந்த தற்போது புலியாகி விட்டார். இன்னும் யார் யாரை எல்லாம் புலியாக்கப் போகிறார்களோ தெரியவில்லை.

மத்திய மாகாண சபை, கிழக்கு மாகாண சபை தவிர்ந்த எந்த ஒரு மாகாண சபையிலும், அரசுக்கு பெரும்பான்மையில்லை. மாகாண சபைகளை இரண்டிரண்டாக கலைத்து வாக்குக் கொள்ளையில் ஈடுபடவே தற்போது இவ்விரு மாகாண சபைகளும் கலைக்கப்பட்டுள்ளன. நிச்சயம் 24ஆம் திகதியாகும் போது பேர்டி தலைமையிலான மோசடிக் கோஷ்டியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு எமது குழுவிடம் மாகாண சபையை ஒப்படையுங்கள். முன்பு 10 வருடங்கள் ஐ.தே.க.வும் 9 வருடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் இம்மாகாணத்தை ஆட்சி செய்துள்ளன. ஐந்து வருடங்களுக்கு எமக்குத் தந்து பாருங்கள் மாற்றம் ஏற்படும். நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றார்.

ரில்வின் சில்வா உரை

ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சில்வா தனது உரையில், சகல விதங்களிலும் முன்மாதிரியான மோசடிகளில் என்றும் தொடர்பு பெறாத 24 பேர் கொண்ட குழுவொன்றை இம்முறை தேர்தலில் இறக்கியுள்ளோம். பேர்டி போன்ற மோசடிக்காரர்கள் எமது குழுவில் இல்லை. மேஜர்மார்களை வெளிநாடுகளிலிருந்து அழைத்து வந்து வேட்பாளர்களாக்கவில்லை. எல்லோரும் இம்மண்ணின் மைந்தர்கள். அரசாங்கத்தின் வீழ்ச்சி இம்மாகாண சபையின் தோல்வியிலிருந்து ஆரம்பிக்கின்றது. அதற்காக இம்மாகாண மக்கள் ஒன்றுபட வேண்டும். ஒன்றுபட்டு புதிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவோம் என்றார்