10.08.2008.
சர்வதேச அளவில் அணு சக்தி தொழில்நுட்பத்தை பெறவும், விற்கவும் இந்தியாவிற்கு அனுமதி அளிக்க அமெரிக்கா தயாரித்துள்ள ‘இந்தியாவிற்கு விலக்கு அளிக்கும்’ வரைவு அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு (Nuclear Suppliers Group – NSG) நாடுகளின் பார்வைக்கு அமெரிக்க அனுப்பியுள்ளது.
இந்தியாவுடன் விவாதித்து அமெரிக்கா உருவாக்கியுள்ள இந்த வரைவு, அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவின் தலைவராக உள்ள ஜெர்மனி நாட்டிற்கு முதலில் வழங்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதம் கொண்ட நாடாக இருக்கும் இந்தியா, அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் (Nuclear Non-Proliferation Treaty – NPT) கையெழுத்திடாத நாடாக இருக்கும் நிலையில், அதற்கு அந்த நிபந்தனையில் இருந்து விலக்கு அளித்து அதனை அணு சக்தி தொழில்நுட்ப வணிகத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி தயாரிக்கப்பட்டுள்ள இந்த வரைவு வரும் 21, 22ஆம் தேதிகளில் நடைபெறும் என்எஸ்ஜி-யின் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
என்எஸ்ஜி-யில் இந்தியாவிற்கு ஒப்புதல் பெற்றுதரும் உறுதியை வழங்கியுள்ள அமெரிக்கா, ஏற்கனவே தயாரித்த வரைவில், ‘இந்தியா முழுமையான கண்காணிப்பிற்கு தயாராக உள்ளது’ என்ற வாசகத்தை சேர்த்து தயாரித்திருந்ததால், அதனை இந்தியா நிராகரித்துவிட்டது. அதன்பிறகு இந்த புதிய வரைவு இந்திய தரப்புடன் நடத்திய பேச்சின் அடிப்படையில் அமெரிக்கா தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் அணு சக்தி வணிகத்திற்கு இந்தியாவை அணுமதிக்க வேண்டுமென்றால் அது அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடுவதை ஒரு நிபந்தனையாக்க வேண்டும் என்று ஜப்பான் கோரிவருகிறது. ஆனால் அப்படிப்பட்ட நிபந்தனை ஏதுமின்றி இந்தியாவிற்கு விலக்களித்து அதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று ஜப்பான அமெரிக்க வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவிற்கு விலக்கு அளிக்க பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய வல்லரசுகள் முன்வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.