கொழும்பிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் எனது கடவுச்சீட்டைப் பார்த்தவுடன் இலங்கை குடிவரவு அதிகாரியின் கண்கள் சுருங்கின. “இந்த வழியால் வாருங்கள்’ என்று அவர் கூறினார். பக்கத்து அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். கணினியில் என்னைப்பற்றிய விபரத்தை அவரின் சகா ரைப் செய்தார்.
அவரின் திரையில் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டாம் என்று வந்தது. எனது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தடுப்பு அறைக்கு காவலுடன் அழைத்துச் செல்லப்பட்டேன். இரவு முழுதும் பூட்டி வைத்துவிட்டு மறுநாள் திருப்பி அனுப்பப்பட்டேன். நான் வியப்படைந்தேன் என்று என்னால் கூற முடியாது. சீனா, முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் தெற்காசியாவில் 12 வருட செய்தி நிருபராக பணியில் ஈடுபட்ட நான் முதலாவதாக திருப்பி அனுப்பப்பட்ட போதும் நான் ஆச்சரியமடைந்தேன் என்றும் கூறமுடியாது என்று லண்டன் ரைம்ஸ் பத்திரிகையின் தெற்காசியாவுக்கான நிருபர் ஜெரமி பேஜ் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக “தமிழ்புலி மோதல் தொடர்பாக செய்தி சேகரிப்பதிலிருந்தும் எவ்வாறு நான் தடுக்கப்பட்டேன்’ என்ற தலைப்பில் “லண்டன் ரைம்ஸ்’ பத்திரிகை நேற்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
பல்வேறு பட்ட விண்ணப்பங்களின் மத்தியிலும் ஆகஸ்டின் பின்னர் இலங்கைக்கான பத்திரிகையாளர் விசா எனக்கு மறுக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட இரு வருடங்களாக சுயாதீனமான பத்திரிகையாளர்கள் தமிழ்புலிகளுக்கு எதிரான இராணுவநடவடிக்கைகள் தொடர்பான செய்தி சேகரிப்பதை இலங்கை அரசாங்கம் தடுத்திருந்தது. அதனால் உல்லாச பயணியாக செல்ல முயற்சித்தேன். மோதல் சூன்யப் பகுதியில் ஐ.நா. புள்ளி விபரத்தின் பிரகாரம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் அகப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பாக எழுத முயற்சித்தேன். வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் உல்லாசப் பயணிகளாக செல்லும் ஏனைய நாடுகள் சிம்பாப்வே, துர்க்மெனிஸ்தான், வடகொரியா என்று நான் நினைக்கிறேன். பிரிட்டிஷ் பத்திரிகைகள் புலிகளுக்கு ஆதரவானவை எனவும் ஏனென்றால் அங்கு அதிகளவில் தமிழ் சமூகம் இருப்பதாகவும் அரசாங்கம் நினைப்பதால் நான் சந்தேகப்படுவோர் பட்டியலில் இருந்தேன். அது அபத்தம். இந்த 26 வருட உள்நாட்டுப் போரில் எந்தத் தரப்புடனும் நான் தனிப்பட்ட தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. புலிகள் அமைப்பானது ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் பயங்கரவாத குழுவென தடைசெய்யப்பட்ட இயக்கம் என்று “த ரைம்ஸ்’ திரும்பத் திரும்ப அறிக்கையிட்டு வந்துள்ளது. அத்துடன் அரசின் தந்திரோபாயம் மற்றும் தமிழர், சிங்களவர்களின் உபாயங்கள் தொடர்பாகவும் விமர்சன ரீதியான செய்திகளை “த ரைம்ஸ்’ வெளியிட்டுள்ளது.
இது ஜனநாயகத்தில் பத்திரிகையாளர்கள் செய்யும் விடயமாகும். ஆப்கானிஸ்தானில் தலிபான் உறுப்பினர்களை நான் கிரமமாக பேட்டி கண்டுள்ளேன். ரஷ்யாவில் செச்னிய மோதல் தொடர்பாக இரு தரப்பிலிருந்தும் செய்திகளை வெளியிட்டுள்ளேன். சீனாவில் மாற்றுக் கருத்துடையவர்களையும் திபெத் சுதந்திரத்திற்கான பணியாளர்களையும் நான் பேட்டி கண்டுள்ளேன். இதே விடயத்தை இலங்கையில் செய்வது தடுக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி மிகவும் அபாயகரமானதாகவும் உள்ளது.
கடந்த தடவை நான் இலங்கைக்கு சென்றது லசந்த விக்கிரமதுங்க பற்றி எழுதுவதற்கு. பத்திரிகை ஆசிரியரான அவர் கடந்த ஜனவரியில் கொலை செய்யப்பட்டார்.
மற்றொரு செய்தியானது மோதல் பகுதிகளிருந்து வெளியேறும் மக்களை அரசாங்கம் முகாம்களில் வைத்திருக்க திட்டமிடுகின்றது என்பது பற்றியே செய்தியாகும். முட்கம்பி வேலியடைத்த முகாம்களுக்குள் மூன்று வருடங்களுக்கு அவர்களை வைத்திருக்க போகும் திட்டம் பற்றியதாகும். செய்தியாளர் மாநாட்டில் என்னை அரசு கண்டித்திருந்தது. அதேசமயம் அரசா ங்க சமாதான செயலகத் தலைவரிடமிருந்து கடிதமொன்று வந்தது. முகாம்களில் முட்கம்பி வேலியை பயன்படுத்துவதை நான் உணர்ச்சி வசப்பட்ட விடயமாக்கியிருந்ததாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். “துரதிர்ஷ்டவ சமாக குளிரான காலநிலைப் பகுதியிலிருந்து வந்த ஒரு மனிதரால் உபகண்டத்தில் முட்கம்பியானது சாதாரணமான பொதுவான பொருள் என்பதையும் எல்லைகளைப் பாதுகாக்கவும் மற்றும் காற்றோட்டத்திற்கும் பார்க்கவும் இது இடமளிக்கின்றது என்பதையும் உணர்ந்து கொள்ள முடியவில்லை’ என்று அவர் எழுதியுள்ளார்.