எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார்; மனோ கணேசன் .

10.09.2008.

நீதியாகவும் நேர்மையாகவும் செயற்படும் அரசியல்வாதியான தனது குரலை எவராலும் பலவந்தமாக அடக்கிவிட முடியாதென மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்ததுடன் எந்தவொரு விசாரணைக்கும் முகம்கொடுக்க தயாராகவுள்ளதாகவும் சவால் விடுத்தார்.

சமாதான காலத்தில் கிளிநொச்சியில் புலித் தலைவர்களுடன் தான் மட்டுமல்லாமல் அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தன்னை மட்டும் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தும் நோக்கில் விசாரணைக்குட்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது;

என்னை விசாரணை செய்ய வேண்டுமென பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கடந்த மாதம் எனக்கு கடிதம் அனுப்பினர். இதற்கு முகம்கொடுக்கும் முகமாக கடந்த 26 ஆம் திகதி விசாரணைக்கு சென்றேன். இதன்போது பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் 2002 முதல் 2005 வரையான காலப்பகுதியில் கிளிநொச்சிக்கு சென்று புலிகளது செயலகத்தில் அவர்களது அரசியல் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து விசாரித்தனர்.

குறிப்பாக, எனக்கும் புலிகளுக்கும் ஏதேனும் விசேட தொடர்பு உள்ளதா என்பதையே முதன்மைப்படுத்தி விசாரணை செய்தனர். எனது விஜயங்கள் குறித்த விபரங்களை நான் இதன்போது தெரிவித்தேன். இந்த சமாதான காலத்தில் நான் மட்டுமல்லாமல் இன்று அரசில் அங்கம் வகிக்கின்றவர்களும் அமைச்சர்களான ஆறுமுகன் தொண்டமான், சந்திரசேகரன், ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் தனித்தனியாகவும் குழுவாகவும் கிளிநொச்சி சென்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

ஒரு நாடு என்பதன் கீழ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழவேண்டுமென்ற நோக்கிலேயே கிளிநொச்சிக்கான பயணத்தை மேற்கொண்டேன். சமாதான காலப்பகுதியில் எனது பயணங்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெளிவுபடுத்தியுள்ளேன்.

ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாத சமயம் அப்போது உபதலைவரான கரு ஜயசூரியவிடமும் தெரிவித்துள்ளேன். கருணா விடுதலைப்புலிகளிடமிருந்து பிளவுபட்டு கொழும்பு வந்த சமயம் ஜனாதிபதியாக விருந்த சந்திரிகா குமாரதுங்கவின் பணிப்பின் பேரில் 2005 இல் கிளிநொச்சிக்கு சென்று பிரபாகரனுடன் கதைத்தேன். அப்போது சந்திரிகா வெளிநாடு சென்ற நிலைமையில் லண்டனிலிருந்து என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு கதைத்தார். எனது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதனால் அவர் நாடு திரும்பியவுடன் விஜயம் தொடர்பில் எடுத்துரைத்தேன்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலின்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக கிளிநொச்சிக்கு செல்லுமாறு ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் என்னைக் கோரினர். அதாவது, வடக்கு கிழக்கில் தமது வெற்றிக்காக செயற்படுமாறு கோருமாறு என்னிடம் கேட்கப்பட்டது.

இதனை நான் மறுத்தேன். ஏனெனில், அம்மக்களின் தீர்ப்பை மாற்றுவது ஜனநாயக விரோத செயலென்பதால் இதனை நான் மறுத்தேன். தற்போது நான் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றுகின்றேன். இந்நிலையில் புலிகளுடன் தொடர்புபடுத்தி என்னைக் கைது செய்வதற்கான நடவடிக்கையே இந்த விசாரணையென நான் கருதுகின்றேன்.

இந்த விடயம் குறித்து அரச ஊடகங்கள் திரிவுபடுத்தி விமர்சனங்களை எனக்கெதிராக வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு செயலாளர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிலர் என்னை பாதாள உலகமென கூறுகின்றனர். என்னை இல்லாமல் செய்வதற்கே அவர்கள் முற்படுகின்றனர். இது தவறான செயற்பாடாகும்.

நீதியாகவும், நேர்மையாகவும் செயற்படும் அரசியல் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினரென்ற வகையில் என்னை அடக்கிவிட முடியாது. எந்த விசாரணைக்கும் நான் முகம் கொடுக்க தயாராகவுள்ளேன். தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும் சிங்களம் தெரிந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினரென்ற வகையிலேயே என்மீது பிரச்சினை ஏற்படுத்தப்படுகின்றது. இதற்கு முகம்கொடுக்க நான் தயாராகவுள்ளேன் என்றார்.

இன்று, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு என்பவற்றை இணைத்து கூட்டமைப்பை ஏற்படுத்தி முன்கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் தெரிவித்தார்.