நக்ஸலைட்டுகளுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மக்கான் கூறினார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியது:
எந்தவொரு கம்யூனிஸ்ட் சார்ந்த இயக்கத்துடனும் மத்திய அரசு நேரடியாக பேச்சு நடத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை எத்தகைய பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.
மாநில அரசுகள் சமயத்துக்குத் தகுந்தபடி தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தீவிரவாத இயக்கங்களுடன் பேச்சு நடத்த முடிவு செய்கின்றன. ஆனால் இதுபோன்ற சூழலில் அவை எடுக்கும் முடிவுகள் மாநில அரசுகளைத்தான் கட்டுப்படுத்தும்.
நக்ஸலைட் இயக்கத்துடன் மாநில அரசு பேச்சு நடத்துகிறதா என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இருப்பினும் மாவோயிஸ்ட் நக்ஸலைட்டுகள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும். அத்துடன் ஆயுதங்களையும் ஒப்படைக்க வேண்டும் என்றார் மக்கான்.
தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், போக்குவரத்து வாகனங்களை கடத்தி பணம் பறிப்பதை மாவோயிஸ்டுகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஆந்திரா, ஒரிசா, பிகார், மேற்கு வங்க மாநிலங்கள் மாவோயிஸ்ட் இயக்கத்தினரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற தீவிரவாத இயக்கத்தினரைக் கட்டுப்படுத்துவதில் அரசு ஒருங்கிணைந்த உறுதியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.