எதிர்வரும் நாட்களில் புலிகளின் இதயப் பகுதிகளில் பாரிய தாக்குதல்கள்:இக்பால் அத்தாஸ் .

03.08.2008.

தமிழீழ விடுதலைப் புலிகள் “சார்க்” மாநாட்டை முன்னிட்டு அறிவித்திருந்த ஒருதலைப்பட்சப் போர் நிறுத்தம் நாளையுடன் நிறைவுக்கு வருகிறது. இந்தநிலையில் இலங்கைப் படையினர் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் பிரவேசித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சுத் தெரிவித்துள்ளது.
எனினும் இதனைச் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ள “சண்டே டைம்ஸின்” பாதுகாப்பு ஆய்வாளர் “இக்பால் அத்தாஸ்”தமிழீழ விடுதலைப் புலிகளின் இதயப் பகுதிகளில் வரும் நாட்களில் பாரிய மோதல்கள் இடம்பெறுவதைத் தடுக்கமுடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். படையினர் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திடசங்கற்பம் கொண்டுள்ளமை இதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

“சார்க்” மாநாட்டின் போது “ட்ரான்ஸ் ஏசியா” ஹோட்டலில் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல,வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்க முற்பட்டார். அவருக்கு உதவியாக இராணுவ விமானப்படை மற்றும் கடற்படை அதிகாரிகள் விளக்கங்களை வழங்கினர். எனினும் இந்த நிகழ்வுக்கு சுமார் 200 ஊடகவியலாளர்களை எதிர்ப்பார்த்தபோதும் 30 பேரே வருகைதந்தனர்.

இதேவேளை துருப்பினர் மல்லாவியைக் கைப்பற்ற முனைந்த போதும் துணுக்காயைக் கைப்பற்றியபோதும் பாரிய எதிர்த் தாக்குதல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. எனினும் அதனைப்பற்றி மேலதிகமாகத் தெரிவிக்க முடியாத சூழ்நிலை உள்ளதாக இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

”சார்க்” மாநாட்டுக்காக இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமரின் விமானத்தின் பயணங்களை இந்திய மைசூரில் உள்ள கண்காணிப்பகம் முழுமையாகக் கண்காணித்து வந்தது. அதேபோல, மன்மோகன் சிங் கட்டுநாயக்கவில் இருந்து கொழும்புக்கு வரும் போதும் இந்தக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் தங்கியுள்ள இந்தியப் பிரதமரின் பாதுகாப்புக்காக இரண்டு இந்தியப் போர்க் கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்புக்கு வந்துள்ளன. 6700 தொன் நிiறையை கொண்ட கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை பொருத்திய கப்பலும்; கடலுக்கு அடியில் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தக்கூடிய மற்றும் நீண்டதூர ஏவுகணைகளைப் பொருத்திய கப்பல்களுமே இலங்கைக் கடற்பரப்பில் தரித்து நிற்கின்றன. இவற்றில் 35 அதிகாரிகளும் 320 படைவீரர்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாகக் கல்கிஸையில் உள்ள ஹோட்டலில் விருந்தினர்களைத் தங்கவைக்க முயற்சிகள் இடம்பெற்ற போதும், ஏற்கனவே அந்தப் பிரதேசத்தில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

கொழும்பில் மாத்திரம், 12 ஆயிரம் இலங்கைக் காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் சுமார் 7 ஆயிரம் துருப்பினரும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.