மோன்டாஜ் சஞ்சிகையின் ஆசிரியயை பெட்ரிகா ஜேன்சுக்கு 4 வது முறையாகவும் மரண அச்சுறுத்தல்; விடுக்கப்பட்டுள்ளது. அவரது கையடக்க தொலைபேசிக்கு நேற்று முற்பகல் 11.30 அளவில் பெயரை வெளியிடாத நபர் ஒருவர் அழைப்பை மேற்கொண்டு இந்த மரண அச்சுறுத்தலை விடுத்துள்ளார். ‘ நீ தொடர்ந்தும் தேவையற்ற விடயங்களை மேற்கொள்கின்றாய், அவற்றை உடனடியாக நிறுத்த வில்லை என்றால், உனக்கு மிக குறுகிய காலத்தில் என்ன நடக்கும் என்பதை பார்த்துக்கொள்’ என அந்த பெயர் குறிப்படாத நபர் தொலைபேசியில் அச்சுறுத்தியுள்ளார். பேசுவது யார் என ஊடகவியலாளர் கேட்ட போது, நீ முதலில் நான் சொல்வதை கேள் என அந்த நபர் கூறியுள்ளர். தாம் மேற்கொள்ளும் தேவையற்ற விடயங்கள் என்ன ஊடகவியலாளர் கேட்ட போது, அதை நீ நன்கு அறிவாய் எனவும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அண்மையில் வெளிப்படுத்திய 27 ஊடகவியலாளர்கள் பட்டியலில் பெட்ரிக்கா ஜேன்சின் பெயரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அவருக்கு ஏற்பட்டு வரும் மரண அச்சுறுத்தல் காரணமாக த நேசன் பத்திரிகைக்கு அவர் எழுதி வரும் வாராந்த கட்டுரை கடந்த இரண்டு வாரங்களாக வெளியாகவில்லை. இதற்கு முன்னர் அவரது அலுவலகத்திற்கு முன்னால் கோழி ஒன்று கொல்லப்பட்டு போடப்பட்டிருந்ததுடன், அவரை வெள்ளை வான் ஒன்று பின்தொடர்ந்துள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இறுதியாக அவரது வீட்டிற்கு முன்னால் ஜீப் வண்டி ஒன்று பல மணிநேரம் தரி;த்து நின்றுள்ளது. இது தொடர்பில் காவல்துறையினருக்கு முறையிட்டபோது, காவல்துறையினர் 4 மணித்தியாலங்களுக்கு பின்னரே அந்த இடத்திற்கு சென்றிருந்தனர். அப்போது அந்த ஜீப் வண்டி அங்கிருந்து சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.