தேர்தலில் அதிமுக தொடர்ந்த பாஜக அதிமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது. சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளை அதிமுக கூட்டணியில் பெற்று நான்கு இடங்களில் வென்ற பாஜக 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 20 சதவிகித இடங்களை அதிமுகவை மிரட்டியே பெற்றுள்ளது.பாஜக கூட்டணியால்தான் சட்டமன்ற தேர்தலில் தோற்றோம் என்ற எண்ணம் அதிமுக தொண்டர்களிடம் உள்ள நிலையில் அதிமுக வெற்றி பெற சாத்தியம் உள்ள பல இடங்களில் பாஜக இம்முறை போட்டியிடுவது அதிமுக தொண்டர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் வருகிற அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. வேலூர். விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி என 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கி கூட்டணி பங்கீடுகளை முடித்துக் கொண்டது. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக போன்ற கட்சிகள் அதே கூட்டணியில் தொடரும் நிலையில்
அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. ஆனால் பாஜக அதிமுக கூட்டணியிலேயே தொடர்கிறது. ஏற்கனவே பாஜக-அதிமுக கூட்டணியை அதிமுக தொண்டர்கள் ஏற்காத நிலையில் ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் மத்திய அரசின் பாதுகாப்பு தங்களுக்கு வேண்டும் என்பதால் இந்த கூட்டணியை தொடர்கிறார்கள்.
அ.தி.மு.க தரப்பில் இடப்பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, செங்கோட்டையன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். இந்தக் குழுவினர் அமர்ந்து பேசி கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை முடிவு செய்தனர்.
இதில், பா.ஜ.க சார்பில் பேச்சுவார்த்தைக் குழுவில் கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன், ஜி.கே.எஸ்.செல்வகுமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு 22 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டாலும் அ.தி.மு.க, பா.ஜ.க தரப்பில் இடங்களை முடிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த ஒன்பது மாவட்டங்களிலும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு பத்து இடங்களைக் கேட்ட பாஜவுக்கு 7 இடங்களை அதிமுக ஒதுக்கியுள்ளது இதுவே பாஜகவுக்கு அதிகம்.
ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 65 இடங்களை அ.தி.மு.க ஒதுக்கியுள்ளது. அ.தி.மு.கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அவர்களுக்கு வெற்றிவாய்ப்புள்ள பல இடங்களை ஒதுக்குவதற்குத் தயக்கம் காட்டினர்.” ஒனப்து மாவட்டங்களிலும் சுமார் 20 சதவிகித இடங்களை பாஜக பெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை மட்டும் அதிமுக பாஜகவுக்கு கொடுக்கவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில் பாஜகவுக்கு இடம் கொடுத்தால் அதிமுக மிக மோசமாக தோற்கும் என்பதால் அந்த மாவட்டத்தில் மட்டும் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது.
அதாவது ஒரு மாவட்டத்தில் சீட் கொடுக்கா விட்டால் அந்த மாவட்டத்தில் பாஜக போட்டியிடும் என்பது கூட்டணி தர்மமாம். ஆனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்படாத இடங்களில் தனித்துப் போட்டியிட வில்லை.