21.09.2008.
இலங்கையில் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட சட்ட விரோத போலி வைத்தியர்கள் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இவ்வைத்தியர்களினாலே அநேகமான கருக்கலைப்பு நிலையங்கள் நடத்தப்படுவதாகவும் கூறுகின்றது.
உலகில் போலி மருத்துவர்கள் அதிகமாகவுள்ள நாடாக இலங்கை காணபப்டுவது துரதிர்ஷ்டவசமானது என கவலை வெளியிட்டுள்ள
அச்சங்கத்தின் செயலாளரான டாக்டர் உபுல் குணசேகரா, போலி மருத்துவம், மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பொலிஸ், சுகாதார அமைச்சு உட்பட உரிய தரப்புகளுடன் பல பேச்சுக்கள் நடத்திய போதிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாக இல்லை என்றும் குறிப்பிடுகின்றார்.
நாளொன்றிற்கு 750 முதல் 1000 வரைய கருக்கலைப்புகள் இடம் பெறுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர் அரசாங்க மருத்துவ சபைகளில் பதிவு செய்யப்படாதவர்களே இவர்கள் என்றும் தெரிவிக்கின்றார்.
கருக்கலைப்பகளை பொறுத்த வரை சட்ட விரோத மருத்துவர்களாலேயே பெரும்பாலானவை நடத்தப்படுவதாக பெண்கள் அமைப்புகளும் குற்றம் சுமத்துகின்றன.
சட்ட விரோத மருத்துவர்கள் இருந்தாலும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்து போல் இந்த எண்ணிக்கையில் இல்லை என கூறும் சுகாதார சேவைகள் பிரதி அமைச்சர் சுரேஸ் வடிவேல் இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இல்லை என்றும் குறிப்பிடுகின்றார்.