12.12.2008.
இணையமூடாக ஊடகச் சேவையாற்றுவோரே உலகளாவிய ரீதியில் அதிகளவில் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக நியூ யோர்க்கை தளமாக இயங்கும் ஊடகவியலாளர் பாதுகாப்புச் சங்கத்தின் (CPJ) அண்மைய ஆய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
வேறு எந்தத்துறையையும் விட இணையத்தள ஊடகவியலாளர்கள், இணையத்தள ஆசிரியர்கள், செய்தியாளர்கள் அதிகம் தாக்குதல்களுக்கு இலக்காவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கங்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்களே இவ்வாறு அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவ் ஆய்வு அறிகைகளில் இருந்து தெரியவருகிறது.
சீனா, பர்மா, எரித்திரியா, கியூபா, உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் அதிக ஊடகவியலாலளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறைந்தபட்சம் 56 இணைய ஊடகவியலாளர்கள் உலகம் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதல் தடவையாக அச்சு ஊடகங்களில் பணியாற்றுவோரைவிட அதிகளவில் இணைய ஊடகவியலாளர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாக சீ.பி.ஜே. நிறுவனம் தனது ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த கைதுகள் இணையதள ஊடகத்தின் வளர்ச்சியை பறைசாற்றும் அதேவேளை, இணைய ஊடகவியலாளர்களுக்கு நிலவும் அச்சுறுத்தல்களையும் மறுபுறம் விதந்துரைக்கின்றது.
அச்சு மற்றும் ஏனைய துறைசார் ஊடகவியலாளர்களுக்கு காணப்படும் போதியளவு சட்டப் பாதுகாப்பு இணைய ஊடகவியலாலளர்களுக்கு கிடைக்கப் பெறுவதில்லை என சி.பி.ஜே. சுட்டிக்காட்டியுள்ளது.