வவுனியா தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகி லண்டன் சென்ற தமிழ்வாணி ஞானகுமார் லண்டன் கார்டியன் பத்திரிகைக்கு நேர்காணல் வழங்கியிருந்தார். இதன்மூலம் இந்த உண்மைத் தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியதால் இலங்கை அரசாங்கம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தது.
இந்நிலை தொடர்வதைத் தடுக்கும் நோக்கில் தமிழ்வாணி ஞானகுமாருக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய வீட்டார் அனைவரையும் பாதுகாப்புத் தரப்பினர் கைதுசெய்துள்ளதாக இணையத்தளத்திற்கு தெரியவந்துள்ளது.
இதன்காரணமாக தமிழ்வாணி ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதை உடனடியாக நிறுத்தியுள்ளார். தனக்கு ஏற்பட்டுள்ள அதிகமான மன அழுத்தம் காரணமாக ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளதாக தமிழ்வாணி தெரிவித்துள்ள போதிலும் இந்த மௌனத்தின் பின்னணியில் இந்தக் கைதுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ்வாணி ஞானகுமாரன் சர்வதேச சமுகத்தைத் தெளிவுபடுத்துவதற்காவும், பல்வேறு ஊடக அமைப்புக்களுக்குச் செய்திகளை வழங்குவதாகவும் வழங்கியிருந்த உறுதிமொழிகள் தற்போது கைவிடப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
தமக்கு பாதுகாப்பு வழங்கிய உறவினர்களின் பாதுகாப்பு நலன்கருதியே தமிழ்வாணி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை நிராகரித்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கனடா மற்றும் அவுஸ்திரேலியப் பிரஜைகளான தமிழர்களை விடுவிப்பதிலும் இலங்கை அரசாங்கம் வேண்டுமென்றே காலம் தாழ்த்திவருவதாகக் கூறப்படுகிறது.
குறித்த நாட்டவர்களும் விடுவிக்கப்பட்டு அவர்கள் சர்வதேச ஊடகங்களுக்கு உண்மைத் தகவல்களை வழங்கினால் சர்வதேச சமுகத்தின் மத்தியில் இலங்கை அரசாங்கம் மேலும் அசௌகரியங்களை எதிர்கொள்ளக் கூடும் என்பதால் இவர்களை விடுவிப்பதில் காலம் தாழ்த்திவருவதாக தெரியவருகிறது.