உத்தியோகப்பற்றற்ற பாதுகாப்புக்குழு: இலங்கையும் இந்தியாவும்

புதுடில்லி: பாதுகாப்பு நிலைவரம் மற்றும் இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக இலங்கையுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் பொறிமுறையொன்றை இந்தியா ஏற்படுத்தியிருக்கிறது.
இருநாடுகளும் உத்தியோகப்பற்றற்ற முறையில் இந்தப் பொறி முறையை ஏற்படுத்தியுள்ளன. இலங்கையின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக கிரமமான முறையில் தொடர்புகளை கொண்டிருப்பதற்காகவும் ஏனைய இருதரப்பு விவகாரங்களுக்காகவும் இந்தப் பொறிமுறை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாக யூ.பி.ஐ.செய்திச்சேவை தெரிவித்தது.
இந்தப் பொறிமுறையின் கீழ் உருவாக்கப்பட்ட குழுவில் இந்தியத்தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலாளர் வி.ஜே.சிங் ஆகியோர் இடம் பெறுகின்றனர். இலங்கைக்குழுவில் ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர், ஜனாதிபதியின் அரசியல் செயலாளர் ஆகியோர் இடம் பெறுகின்றனர்.
இதேவேளை, இன நெருக்கடிக்கு தீர்வுகாண புதுடில்லி உதவவேண்டுமென மீண்டும் மீண்டும் கொழும்பிடமிருந்து கோரிக்கைகள் விடுக்கப்படுகின்ற போதும் உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக இந்தியா தலையிடுவதை நிராகரித்து விட்டதாக யூ.பி.ஐ.தெரிவித்தது.