உதயன் பத்திரிகையின் அலுவலகத்தினுள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் உள் நுழைந்த ஆயுத தாரிகள் அச்சியந்திரப் பகுதிக்குள் நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அங்கு கடமையில் இருந்தவர்களை விரட்டியடித்ததுடன் அச்சியந்திரத்தின் மீதும், பிரதான மின்பிறப்பாக்கி மீதும் துப்பாக்கியால் சுட்டு சேதப்படுத்திய பின்னர் பெற்றோல் ஊற்றி கொழுத்தியுள்ளனர். மேலும் அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெருமளவு பத்திரிகை அச்சிடும் தாள்களையும் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். காட்டுமிராண்டித்தனமானதும், மிலேச்சத்தனமானதுமான இத்தாக்குதல் சம்பவத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
இராணுவ பிரசன்னமும், இராணுவ கண்காணிப்பு நடவடிக்கைகளும் அதிகமாக உள்ள யாழ் நகரப் பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினரது ஆசீர்வாதம் இல்லாது இவ்வாறான தாக்குதல் ஒருபோதும் நடைபெற்றிருக்க முடியாது. அந்த வகையில் இந்த தாக்குதலுக்குப் பின்னால் இராணுவத்தினரே இருந்திருப்பார்கள் என்ற முடிவைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வரமுடியாதுள்ளது.
சிறீலங்கா அரசினால் தமிழ்த் தேசத்தின் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் இன அழிப்பை அம்பலப்படுத்துவதில் முன்னின்று செயற்படும் ஊடகங்கள், சிவில் சமூகத்தவர்கள், அரசியல் கட்சிகள், மதத் தலைவர்கள், துறைசார் வல்லுனர்கள், கல்வியாளர்கள், பொது அமைப்புக்களைச் சார்ந்தவர்கள், பொது மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் மௌனிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தொடர்ச்சியாக இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்படும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நில ஆக்கிரமிப்பு, சிங்கள பௌத்த மயமாக்கல், இராணுவ மயமாக்கல், தமிழ்த் தேசத்தினது கடல்சார் பொருளதாரம், விவசாய பொருளாதாரம், வர்த்தக பொருளதாரம் என்பன சிங்கள மயமாக்கப்படுதல் போன்ற கட்டமைப்புசார் இன அழிப்புச் செயற்பாடுகளை பத்திரிகைகள் எமது மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதினால் அப்பத்திரிகைகளை முடக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இத்தகைய தாக்குதல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாகவே உதயன் பத்திரிகையின் மீதான இன்றைய தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க மிகப் பலவீனமான nஐனீவா தீர்மானத்தை புறத்தொதுக்கி சர்வதேச சமூகமானது சிறீலங்கா அரசு மீது காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் யுத்தம் மிக மோசமாக இடம்பெற்ற காலப்பகுதியில் சர்வதேச சட்டக் கோட்பாடான பாதுகாப்பதற்கான பொறுப்பில் (சுநளிழளெiடிடைவைல வழ Pசழவநஉவ) இருந்து விலகி தமிழ் மக்களை காக்கத் தவறியது போன்று, தற்போதும் இடம்பெறும் இத்தகைய இன அழிப்புச் செயற்பாடுகளை தடுக்கத் தவறின் தமிழ் மக்களின் அழிவுக்கு துணைபோனதான வரலாற்றுப் பழியை சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு சர்வதேச சமூகம் ஆளாக நேரிடும்.
எனவே இத்தகைய வரலாற்றுப் பழியினை தவிர்த்துக்கொள்ள சர்வதேச சமூகம் தமிழர் தாயகப் பகுதியில் உடனடியாக ஓர் இடைக்கால நிர்வாகத்தினை சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோருகின்றோம்.