மோடி ஆட்சிக்கு வந்து ஏழு ஆண்டுகளைக் கடந்து விட்டார். பல மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அதை பாஜகவிடம் பறி கொடுத்து நிற்கிறது. கர்நாடகம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைத்துக் கொண்டது. ஆனால், இன்னும் காங்கிரஸ் கட்சியால் கோஷ்டி மோதலில் இருந்து மீண்டெழ முடியவில்லை.
கடந்த ஓராண்டாக கோஷடி மோதல்கள் ஓய்ந்திருந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கோஷ்டி மோதல் வெடித்ததால் காங்கிரஸ் முதல்வர் ராஜிநாமா செய்துள்ளார். அங்கு காங்கிரஸ் தன் ஆட்சியை பறி கொடுக்கும் சூழல் உருவாகி உள்ளது.
ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கும் நிலையில் அதில் பஞ்சாப் மாநிலமும் ஒன்று. அங்கு காங்கிரஸ் முதல்வராக அமரீந்தர் சிங் இருந்து வருகிறார். இவருக்கு போட்டியாக இருக்கும் தலைவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து. இவரை சமாளிக்க அவருக்கு பஞ்சாப் மாநில தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால், முதல்வர் அமரீந்தர் சிங்கை மாற்ற வேண்டும் என பல எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் காங்கிரஸ் கட்சி மேலிடப் பார்வையாளர்களை பஞ்சாப் மாநிலத்திற்கு அனுப்பியது ஆனாலும், வேறு வழியில்லாமல் முதல்வர் ராஜிநாமா செய்துள்ளார். இன்று புதிய ஆளுநராக பதவியேற்ற பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து அவர் ராஜிநாமா செய்தார்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் புதிய முதல்வரை தெரிவு செய்வார்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
நடைபெற இருக்கும் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களும் மிக முக்கியமானவை. பாஜக அதிகாரபலம், ஆளுநர்கள், பலத்தைக் கொண்டு மாநிலங்களை சிதைத்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் நடக்கும் கோஷ்டி மோதல்களால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் இழந்துள்ளனர்.