பிரித்தானிய அரசால் பயிற்றுவிக்கப்பட்ட சிறப்புப் பணிக்கான படைப்பிரிவு (SFT) யாழ்.குடாநாட்டில் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. போலிஸ் நிர்வாகம் மற்றும் இராணுவம் ஆகியவற்றிற்கு உட்படாது இயங்கும் இப் படைப்பிரிவு, தனியான குழுக்ககளாகவும் தனி நபர்களாகவும் செயற்படுகின்றது. அண்மையில் அச்சுவேலிப் பகுதியில் நான்கு இளைஞர்களைச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்த எஸ்.ரி.எப் அவர்களைப் பல நாட்கள் தடுத்து வைத்திருந்தது. வடக்கில் இராணுவ மற்றும் போலிஸ் நடமாட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டு கொலைவெறிகொண்ட எஸ்.ரி.எப் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் குடாநாடெங்கும் விதைக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் மத்தியிலிருந்து இயல்பாகவே தோன்றும் அரச எதிர்ப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு சாட்சியின்றி அவற்றை அழிக்கும் புலனாய்வும் மற்றும் சிறப்புப் படைகள் இனச்சுத்திகரிப்பை இலகுவாக்கத் துணை செல்கின்றன.
பிரித்தானிய அரசுடனும் ஏகாதிபத்திய நாடுகளுடனும் அவற்றின் புலனாய்வுப் படைகளுடனும் இணைந்து செயற்பட்டு சுயநிர்ணைய உரிமைக்கான மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த புலம்பெயர் அமைப்புக்கள் இன்று தமது தந்திரோபாயத்தை மாற்றியுள்ளன.
ஒரு புறத்தில் புலனாய்வுப் படைகளுடன் இணைந்தும் மறுபுறத்தில் அவற்றிற்கு எதிரானவை போன்றும் நாடகமாடும் இந்த அமைப்புக்கள் எஞ்சியிருக்கும் போராட்ட சக்திகளைக் காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.
ஈழத்தில் போராட்டசக்திகளை அடையாளப்படுத்தி அழிக்கும் திட்டத்தில் பிரித்தானிய அரசால் பயிற்றுவிக்கப்பட்ட எஸ்.ரி.எப் ஈடுபடும் அதே வேளை, புலம்பெயர் நாடுகளில் பிரித்தானிய உளவுப்பிரிவின் பிடியிலிருக்கும் அமைப்புக்கள் வேறு வழிகளில் இதனை மேற்கொள்கின்றன.
தெளிவான மக்கள் சார்ந்த அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டம் மீளமைக்கப்படும் வரை புலனாய்வுப் படைகளின் அழிப்பு நடவடிக்கைகள் தவிர்க்கமுடியாதவை.