ஐ.நா.சபை, ஜூலை19-
ஈரான் அணு சக்தி திட் டம் தொடர்பாக அந்நாட்டின் பிரதிநிதிகளுடன் அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகளின் பிரதிநிதிகள் முக்கிய பேச்சுவார்த்தையை சனிக்கிழமை துவக்கினர்.
ஈரானை தாக்கப்போவதாக கூறியுள்ள அமெரிக்கா, ஈரானுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருப்பது இதுவே முதல்முறை.
இராக்கை தொடர்ந்து, மேற்காசியாவின் எண்ணெய் வளத்தை குறிவைத்து, ஈரானையும் தாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்கு, ஈரான் அணுசக்தி திட்டத்தை செயல்படுத்தி வருவதை காரணம் காட்டி, ஈரானை அமெரிக்கா மிரட்டி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, ஈரானை தாக்க தயாராக இருக்குமாறு தனது ஏவலாளியான இஸ்ரேலுக்கு புஷ் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இதை இந்தியா உட்பட பல நாடுகள் கண்டித்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்க அரசுக்கு உள்நாட்டிலும், உலக அளவிலும் ஏற்பட்டுள்ள பல்வேறு நிர்பந்தங்கள் காரணமாக, ஈரான் தொடர்பாக தனது நிலைபாட்டை புஷ் நிர்வாகம் தற்போதைக்கு மாற்றிக்கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் ஒருபகுதியாக., ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த புஷ் நிர்வாகம் திடீரென்று ஒப்புக்கொண்டது. சனிக்கிழமை நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்புநாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தூதர்கள் பங்கேற்றனர். அமெரிக்க தூதரான வில்லியன் பர்ன்சும் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார்.
பெயரளவில் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, ஈரான், தங்களது திட்டத்திற்கு உடன்படவில்லை என்று கூறி அந்நாட்டை அமெரிக்கா தாக்குவதற்கு தயாராகலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே வாஷிங்டனில் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயல்துறை அமைச்சர் கண்டோலிசா ரைஸ், எந்த நாடும் தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று மிரட்டல் தொனியில் பேசினார்.