வியாழன், 7 ஆகஸ்ட் 2008
இந்தோனேஷியாவின் கிழக்கு சும்பாவா தீவில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 5.7 ஆக பதிவாகி உள்ளது.
இன்று காலை 6.41 மணியளவில் (க்ரீன்விச் நேரம் 10.41) ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் குடியிருப்புகள் குலுங்கியதாகவும், ஒரு சில வீடுகளில் சேதம் ஏற்பட்டதாகவும், இதனால் பதறிய மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் ஜகார்த்தாவின் கிழக்கே 1,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சும்பாவா தீவின் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு தாக்கியதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்தோனேஷியாவின் வானிலை ஆராய்ச்சி, புவியியல் மையம் இந்த நிலநடுக்கம் 6.6 ஆக பதிவாகி உள்ளதாகவும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள், பள்ளிகள் மோசமான நிலையில் சேதமுற்றதாகவும், இதனால் அச்சமுற்ற மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கு ஓடி வந்ததாகவும் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
கடற்கரையை ஒட்டியுள்ள பல்வேறு வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், சும்பாவா நகருக்கு அருகில் உள்ள ஒரு கடை சேதமடைந்ததாகவும் செய்திதொடர்பாளர் தவ்ஃபிக் குனாவன் என்பவர் தெரிவித்துள்ளார்.
எனினும் காயம் குறித்து உடனடியாக எந்தவித தகவலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது