இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத் துறைக்கு பொறுப்பான அதிகாரிகள் எவரும் இன்னும் நியமிக்கப்படாமையினால் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் எவையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட முடியா நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் 18ஆவது அரசியலமைப்புச் சட்டத்தோடு இந் நிலை உருவானதாகவும் அச் சட்டத்துக்கு முன்பு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளைக் கூட செய்ய முடியாமலிருப்பதாகவும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத் துறையின் முக்கிய அதிகாரியொருவர் தெரிவிக்கிறார். இதற்குக் காரணமாக விசாரணைகளுக்குத் தேவையான அறிவுரைகளைப் பெற்றுக் கொள்ளக் கூட தகுதியான அதிகாரிகள் எவரும் இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத் துறையில் இல்லை எனக் கூறப்படுகிறது.
இலங்கையின் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத் துறை மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் தமக்கு நேரும் அநீதிகள் குறித்து முறைப்பாடுகளை முன்வைத்த போதும் அம் முறைப்பாடுகளை விசாரணை செய்வதை அரசின் உயரதிகாரிகள் தவிர்ந்து கொள்வதானது இலஞ்சத்துக்கும் ஊழலுக்கும் சமூகத்தில் எளிதாக இடம்கொடுத்துப் பார்த்திருப்பதைத்தான் உறுதிப்படுத்துகிறதென அந்த அதிகாரி மேலும் தெரிவித்திருக்கிறார்.
– எம்.ரிஷான் ஷெரீப்







