25.03.2009.
ஐ.நா.: ஐ. நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் ஆராயப்படுவது தொடர்பாக உறுப்பு நாடுகள் மத்தியில் தொடர்ந்தும் இழுபறியான நிலையே காணப்படும். அதேசமயம் இலங்கைக்கு உதவி வழங்கும் பிரதான நாடான ஜப்பான் பாதுகாப்புச் சபையில் ஆராயப்பட வேண்டுமென்ற விருப்பத்தை வெளியிட்டிருக்கிறது.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூன் ஒரு மாத காலமாக மோதல்களை இடைநிறுத்துமாறு அழைப்பு விடுத்து வருகிறார்.
இலங்கை விவகாரம் மீண்டும் ஐ. நா. பாதுகாப்புச்சபையில் ஆராயப்பட வேண்டுமென சபையினர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களும் அமெரிக்கா, மெக்ஸிக்கோவின் பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் சீனா இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதற்கு இலங்கை அரசதரப்பு வரவேற்றுள்ளது.
அதேசமயம் துருக்கி உகண்டாவை உள்ளடக்கிய சபையின் 6 உறுப்பினர்களுடன் ஜப்பானும் எதிர்ப்பதாக அரச ஊடகம் தெரிவித்திருந்ததாக ஐ. நா. வின் இன்னர் சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் திங்கட்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஐ. நா. வுக்கான ஜப்பானியத் தூதுவர் யூகியே தகாகே சூ இது தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. இதுவா? ஜப்பானின் நிலைப்பாடு என்று கேட்டபோது “”இல்லை’ அது சரியானதென்று நான் நினைக்கவில்லை என்று தூதுவர் கூறியுள்ளார். பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் ஆராயப்படுவதை ஜப்பான் விரும்பவில்லை என்று வெளியான செய்தி தொடர்பாகவே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “நாங்கள் கருத்தொருமைப்பாடு ஏற்படும் என்று இப்போதும் எதிர்பார்த்துள்ளோம்’ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
அத்துடன் ஆஸ்திரியாவின் நிலைப்பாடும் அதிகளவில் தவறாகத் தெரிவிக்கப்பட்டிருந்ததாக இன்னர் சிற்றி பிரஸ் கூறுகிறது. விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டதாக பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் ஆராயப்பட வேண்டுமென ஆஸ்திரியா தெரிவித்ததாக கூறப்பட்டிருந்தது. ஆனால், ஐ. நா. விலுள்ள ஆஸ்திரிய தூதரகப் பேச்சாளர் வெரீனா நௌரட்னி இன்னர் சிற்றி பிரஸுக்கு இது தொடர்பாக விளக்கமளிக்கையில், “இலங்கையின் மனிதாபிமான நிலவரம் குறித்தே நாம் கவலையடைந்துள்ளோம். பாதுகாப்புச்சபை நிகழ்ச்சிநிரலில் இந்த விவகாரம் ஒரு அங்கமாக இடம்பெற வேண்டுமென நாம் விரும்புகிறோம்’ என்று கூறியுள்ளார்.
இலங்கை மோதல் தொடர்பாக பாதுகாப்புச்சபையில் ஆராய்வதை ஏன் சில நாடுகள் எதிர்க்கின்றன என்று இந்தோனேசியாவின் ஐ. நா. வுக்கான தூதுவர் மார்ட்டி நடாலிகவாவிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேட்டபோது, “”மனிதாபிமான விவகாரங்களுடனேயே எப்போதும் பாதுகாப்புசபைக் கூட்டம் ஆரம்பமாகிறது’ என்று கூறினார். அதாவது சிம்பாப்வே, மியான்மார் என்பனவற்றின் மனிதாபிமான நிலைவரம் பாதுகாப்புச்சபையின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்,
கடந்த 20 ஆம் திகதி ஐ. நா. வுக்கான அமெரிக்கத் தூதுவர் சூகான்ரைஸ் இன்னர் சிற்றி பிரஸுக்கு கூறுகையில்;
இலங்கை தொடர்பாக அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் மனிதாபிமான நிலைவரம் குறித்து முழு அளவிலான பிந்திய தகவல் பாதுகாப்புச்சபைக்கு தெரிவிக்கப்படுவதற்கு நாங்கள் ஆதரவளிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதேவேளை முன்னுரிமை கொடுக்க வேண்டிய பட்டியலை ஒவ்வொரு நாடுகளுமே கொண்டிருப்பதாகவும் அமெரிக்காவைப் பொறுத்தவரை இப்போது சூடானே அதற்கு முக்கியம் என்றும் இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மார்ச் 20 இல் சூடான் தொடர்பாக பாதுகாப்புச்சபையில் கூட்டம் இடம்பெறுவதற்கான அரசியல் முதலீட்டை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. ஆனால் இலங்கையின் மனிதாபிமான நிலைவரம் தொடர்பாக முழுமையான, பிந்திய தகவலைப் பாதுகாப்புச்சபையில் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் அமெரிக்கா எவ்வளவு தூரம் கடினமான முறையில் முயற்சிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட பிரிட்டன் விரும்புவதாக அந்நாட்டு அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் கூறியிருந்தார். ஆனால் அதனை சீனாவும் ரஷ்யாவும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முடக்கிவிட்டன. இப்போது மீண்டும் அவ்வாறு செய்யப்போவதாக அச்சுறுத்தியுள்ளன. ஆனால் சீனா, ரஷ்யா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியபோதும் சிம்பாப்வேக்கு எதிரான தடைகளை கொண்டுவரும் தீர்மான வரைபுக்கான ஆதரவை பிரிட்டன் பெற்றுக்கொண்டது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது என்றும் ஒவ்வொரு நாடுகளும் தத்தமக்கு முன்னுரிமையான விடயங்களைக் கொண்டிருப்பதாகவும் இன்னர் சிற்றி பிரஸ் கூறுகிறது.
இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்படுவதையிட்டு நாடுகள் குழப்பம் அடைந்திருக்கின்ற போதிலும் பகிரங்கமாக அவை யுத்த நிறுத்த அழைப்பை விடுப்பதில்லை என்றும் அவ்வாறு விடுத்தால் புலிகள் பொதுமக்களை கொல்வார்கள் என்றும் அதனால் யுத்த நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்த இலங்கை அரசு குற்றஞ்சாட்டுமென்றும் ஐ. நா. வின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இன்னர் சிற்றி பிரஸுக்குக் கூறியுள்ளார்.
ஐ. நா. பாதுகாப்புச்சபையில் இலங்கை விவகாரம் ஆராயப்படுமா என்பது பாதுகாப்புச் சபை உறுப்பினர்களின் ஆதரவிலேயே தங்கியிருக்கிறது. 9 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால் சபை அமர்வில் விடயத்தை ஆராயும் யோசனையை சமர்ப்பிக்க முடியும். இதற்கு சீனா, ரஷ்யாவின் வீட்டோ அதிகாரம் தேவை இல்லை. ஆனால், இந்த உறுப்பினர்களில் சிலர் ஜப்பானியத் தூதுவர் தகாசூ தெரிவித்துள்ளது போன்று “கருத்தொருமைப்பாட்டுக்காக காத்திருக்கின்றனர்’ அத்தகைய கருத்தொருமைப்பாடு சாத்தியமில்லாததாக தோன்றுகிறது. சீனாவாகிலும் விட்டுக் கொடுப்பை மேற்கொள்ளாவிடின் கருத்தொருமைப்பாடு சாத்தியமில்லை என்று இன்னர் சிற்றி பிரஸ் கூறுகிறது.