இலங்கை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அபிப்பிராயம் :நிரஞ்சன் டி சில்வா

இலங்கையுடனான நீண்டகால வலுவான நட்புறவு தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டை பாதிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழுவின் விஜயம் அமைந்துள்ளதாக தூதுக்குழுவின் உறுப்பினரும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருமான நிரஞ்சன் டி சில்வா குற்றஞ்சாட்டினார். நட்பு நாடு என்ற அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்தின் தவறுகளை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழு சுட்டிக்காட்டியதாக தெரிவித்த அவர் அதன் மூலம் விடுதலைப் புலிகளை வலுப்படுத்தும் நோக்கம் அதற்கு இல்லை எனவும் அவர் மேலும் கூறினார்.

ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகை என்பது நட்பு நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் பரிசே தவிர அது அந்நாடுகளின் உரிமை அல்ல என அவர் சுட்டிக்காட்டினார். ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழுவினர் அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பாக அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலும் கிழக்கு மாகாண முதலமைச்சரை தூதுக்குழு திட்டமிட்டப்படி சந்திக்காமை தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள், ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் தூதுக்குழுவின் உறுப்பினரும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருமான நிரஞ்சன் டி சில்வா நேற்று முற்பகல் கொழும்பு நிப்போன் ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினார். அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த நிரஞ்சன் டி சில்வா மேலும் கூறியதாவது: இலங்கை எமது நட்பு நாடு என்ற அடிப்படையிலேயே விஜயத்தின் போது எமது அவதானிப்புகள் தொடர்பாகவும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு தனது கருத்துக்களை தெரிவித்தது. இதன் மூலம் விடுதலைப் புலிகளின் கரங்களை பலப்படுத்தும் நோக்கம் எமக்கு இருக்கவில்லை. இது தொடர்பில் வெளியான குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவையாகும்.

எனினும், தெற்காசியா குறிப்பாக இலங்கையுடனான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழுவின் அண்மைய விஜயம் அமைந்தது. எனினும், இலங்கையுடனான நட்புறவு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை குறைக்கும் வகையில் தூதுக்குழுவின் விஜயம் அமைந்துள்ளதாக நான் கருதுகின்றேன்.

இலங்கை நிலைவரம் தொடர்பாக அறிக்கைகளை விடுவதற்கு நாம் அதிகம் கற்க வேண்டியுள்ளது. இலங்கையில் நல்லாட்சி, இலங்கையுடனான நட்புறவு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையிலேயே நாம் கருத்துக்களை தெரிவித்தோமோயன்றி பயங்கரவாதிகளின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில் நாம் எதனையும் தெரிவிக்கவில்லை. எனினும், எமது விஜயம் தொடர்பில் தோன்றிய முரண்பாடுகள் மனகசப்புகள் தொடர்பில் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை என்பது ஐரோப்பிய ஒன்றியம் தனது 12 நட்பு நாடுகளுக்கு ஆண்டுதோறும் வழங்கி வரும் தலா ஒரு பில்லியன் யூரோ பெறுமதியான பரிசாகும். அது நட்பு நாடுகளின் உரிமையல்ல.

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைக்கான தகைமைகளை ஆராயும் செயற்பாடுகள் அடுத்த சில வாரங்களில் ஆரம்பமாகி டிசம்பர் 15 ஆம் திகதி வரை நடைபெறும். அதன் பின்னரே சலுகையை வழங்குவது தொடர்பான இறுதி முடிவை ஒன்றியம் மேற்கொள்ளும். எனவே, இக்குறிப்பிட்ட காலத்தினுள் நல்லாட்சி உள்ளிட்ட தகைமைக்குத் தேவையான அம்சங்களில் இலங்கை அரசாங்கம் தனக்குள்ள அர்ப்பணிப்பை காண்பித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உடனான தனது நட்புறவை உறுதிப்படுத்துவதன் மூலம் இச்சலுகை தொடர்பில் சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொள்ளலாம்