இலங்கை சார்க் மாநாடு : பாகிஸ்தான் அதிர்ப்தி

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் மற்றும் 3ம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள 15ஆவது சார்க் தலைவர்கள் மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மாநாட்டின் பிரபுக்கள் பாதுகாப்பு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் எமது இணைய தளத்திற்கு தெரிவித்தார்.
சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்திய பிரதமருக்கு 3000 இந்திய படையினர் பாதுகாப்பு வழங்க உள்ளதாகவும், கடல் மற்றும் வான் பரப்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
பல நட்சத்திர விடுதிகளில் இந்திய படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் அரச தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து அந்நாட்டு திருப்தி அடையாவிட்டால், பாகிஸ்தான் அதிபர் மாநாட்டில் கலந்து கொள்வது சந்தேகமே என வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.