24.10.2008.
இலங்கையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் துரதிஸ்டவசமாக அந்த பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்துகின்றன. எது எப்படியிருந்தாலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவேண்டியது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என்று இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருக்கின்றோம் என இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில் மூன்று மூத்த அதிகாரிகள் சார்க் மாநாட்டிற்கு முன்னதாக திடீரென இலங்கை சென்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த மூன்று அதிகாரிகளும் இலங்கை அரசுடன் அவர்களது பாதுகாப்பு தேவைகள் குறித்து விவாதித்தார்கள். மற்றநாடுகளின் உதவியை நாடாத பட்சத்தில் இலங்கையில் பாதுகாப்பு தேவைகளை நிறைவேற்றுவதாகவும் தெரிவித்துள்ளனர். ஏனெனில் இலங்கை சர்வதேச நாடுகளின் ஆடுகளமாக பயன்படுத்தப்படும் சூழ்நிலை ஏற்படுவதை இந்தியா விரும்பவில்லை ஏனென்றால் அந்த நாடு எமது நாட்டிற்கு மிக அருகாமையில் உள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் பிராணப் முகர்ஜி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்தியா அரசு வழங்கிவரும் இராணுவ உதவிகள் குறித்து பாராளுமன்றத்தில் விளக்கமளித்ததுடன் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக்கட்சிகள் பிரதிநிதிகள் குழு அளித்த பரிந்துரைகளை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் முன்வரவேண்டுமென்று இந்தியா வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக இலங்கை ஜனாதிபதி அறிவித்ததன் பிறகு நிலைமை அங்கு மோசமடைந்ததாக சுட்டிக்காட்டிய பிரணாப் முகர்ஜி, பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்பதே இதற்கு சரியான வழியென்று மீண்டும் வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகுறித்து பேசும் போது, இலங்கையில் நிலவும் பிரச்சினையால் தமிழகத்திற்கு பெருமளவு அகதிகள் வரும் சூழ்நிலை ஏற்படுவதை இந்தியா விரும்பவில்லை. அதனால் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு,மருந்து தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை செயதுகொடுக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.
இந்தியாவிற்கு வருகைதரவிருக்கின்ற ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷவுடன் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவது தொடர்பிலும் கச்சைத்தீவு விவகாரம் குறித்தும் கலந்துரையாடப்படும் .