இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தனது 66 ஆவது ஆண்டினுள் காலடி வைக்கின்றது. இந்த 65 ஆண்டு வரலாற்றில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு செயற்பட்டது என்பதை பலரும் அறிய விரும்புவார்கள்.
பழம் பெரும் கட்சியான சமசமாஜக் கட்சியிலிருந்து தத்துவார்த்த முரண்பாட்டல் வெளியேற்றப்பட்டவர்களால் ஆரம்பிக்கப்பட்டது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி. முதுபெரும் சோசலிசவாதியான டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க, ஏ.வைத்திலிங்கம், உடகந்தவல சரணங்கர தேரோ, யசோதிஸ் போன்ற பலர் சமசமாஜக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அதேகாலகட்டத்தில் லண்டனில் உயர்கல்வி முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார்கள் பீட்டர் கெனமன், பொன்.கந்தையா போன்ற சோசலிசவாதிகள். இவர்கள் லண்டனில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்கள்.
சமசமாஜக் கட்சியிலிருந்து வெளியேறியவர்களும் இவர்களும் ஆரம்பத்தில் ஐக்கிய சோசலிசக் கட்சியை ஆரம்பித்து பின்னர் 1943 ஜூலை 3 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை ஆரம்பித்தார்கள். இக்கட்சியை ஆரம்பித்த முன்னோடிகளில் குறிப்பிடக்கூடியவர்கள் டாக்டர்.எஸ்.ஏ.விக்கிரமசிங்க. ஏ.வைத்திலிங்கம், பீட்டர் கெனமன், கே.ராமநாதன், பொன்.கந்தையா, உடகந்தவல சரணங்க தேரோ மற்றும் பலர். கட்சிக்கு பக்கபலமாகத் துணைபுரிந்தவர்கள், கேரளத்திலிருந்து வந்து குடியேறிய மலையாளத் தோழர்கள். இவர்களின் முயற்சியால் தொழிலாளர்கள் அணிதிரட்டப்பட்டார்கள். தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டன.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சோல்பரி கொமிசனுக்கு சாட்சியம் அளிப்பதற்காக தனது குறிப்பில் இலங்கையில் பல்லினமக்கள் வாழ்கின்றார்கள். பலமொழி பேசுகின்றவர்களும், பல மதத்தைப் பின்பற்றுகின்றவர்களும் வாழ்கின்றார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி சிறுபான்மையோர் நலம் காக்கப்பட வேண்டும் என்பதோடு சுயநிர்ணய உரிமை பற்றியும் குறிப்பிட்டிருந்தது.
1947 இல் தேர்தலைத் தொடர்ந்து பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன. முதலில் இந்திய வம்சாவளிப் பிரதிநிதிகளின் பிரதிநிதித்துவத்தை ஒழிக்க ஐக்கிய தேசியக் கட்சி சட்டம் இயற்றியது. இதற்கு அன்று அரசில் அங்கம் வகித்த பல தமிழர்கள் ஆதரித்தார்கள். வரலாற்றில் தமிழ் பிரதிநிதிகள் இழைத்த மாபெரும் தவறு. அதே நேரத்தில் இந்திய வம்சாவளியினரின் உரிமைக்காக கம்யூனிஸ்ட் கட்சியும் சமசமாஜக் கட்சியும் போராடியது. இந்தக் கொடிய சட்டத்திற்கு எதிராக வாக்களித்தது.
கம்யூனிஸ்ட் கட்சியும் பிரதேச சுயாட்சியும்
1954 இல் வட இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி இனப்பிரச்சினை சம்பந்தமாக பிரதேச சுயாட்சிக் கோரிக்கையை வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாலயத்தில் நிறைவேற்றியது. இந்த யோசனையை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தனது மாத்தறை மகாநாட்டில் கொள்கையாக ஏற்றுக் கொண்டது. மாநில சுயாட்சியின் அவசியத்தை இந்த நாட்டிற்கு அறிவித்த பெருமை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு உரியது.
சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்க்க கம்யூனிஸ்ட் கட்சி 1958 இல் ஏற்பட்ட பண்டா செல்வா ஒப்பந்தத்தை ஆதரித்தது. இதில் பல முன்னேற்றகரமான அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது. குறிப்பாக பிராந்திய நிர்வாகம், அதற்குரிய அதிகாரங்கள், காணிக்குடியேற்றம் போன்ற பல முக்கிய விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை ஜே.ஆர்.தலைமையிலான யூ.என்.பி. எதிர்த்தது. இதன் விளைவுதான் இனக்கலவரம்.
1965 இல் இதை நிறைவேற்ற சிறிமாவோ பண்டாரநாயக்கா சம்மதம் தெரிவித்து ஆட்சியில் பங்கேற்கும்படி தமிழரசுக் கட்சியைக் கேட்டது. முதலாளித்துவ சிந்தனையுள்ள தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் படுபிற்போக்கான யூ.என்.பி.யோடு இணைந்தது. தமிழர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் துரோகம் செய்தது.இதைப் பலமுறை கம்யூனிஸ்ட் தலைவர்கள் சுட்டிக்காட்டி வந்துள்ளார்கள்.
தமிழ்த் தலைவர்கள் பின்பற்றிய பிழையான அரசியல் பாதையே இந்த நாட்டில் இனவாதம் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தது. தமிழ்த் தலைவர்கள் தென் இலங்கையில் உள்ள முற்போக்கு சக்திகளுடன் சேர்ந்து செயற்பட்டால் இலகுவில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்று கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியது.
இந்திய இலங்கை உடன்பாடு
இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை அடக்க பல கொடிய வழிமுறைகளை யூ.என்.பி. கையாண்டது. இதன் விளைவில் ஒன்றுதான் 1983 இனக்கலவரம். அன்றைய அரசே இந்தக் கலவரத்தை முன்னின்று நடத்தியது. தான் தப்புவதற்காக பழியை இடதுசாரிகள் மீது சுமத்தி கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சிறையில் அடைத்தது.
இந்த நிலையில்தான் இந்தியத் தலையீடு முனைப்படைந்தது. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக உணவுப் பொட்டலம் போட்டதோடு நிற்காது ஒரு அரசியல் தீர்வையும் முன்வைத்தது. அதுதான் மாகாண ஆட்சிமுறை. இதைக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. இதை நிறைவேற்ற கட்சி தன்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்தது. இதை ஆதரித்ததற்காக பல தோழர்கள் ஜே.வி.பி.யினால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
1987 இல் உருவாக்கப்பட்ட இந்திய இலங்கை உடன்பாட்டை ஆதரித்ததோடு நில்லாது உடன் அமுல்படுத்தும்படி பிரசாரம் செய்து வருகின்றது. ஆரம்பக் கட்டமாக இந்த 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுதாக அமுல்படுத்தும் படி ஆட்சியினரைக் கம்யூனிஸ்ட் கட்சி திறந்த மனதோடு கேட்டு வருகின்றது.
அதிகாரப் பரவலாக்கலுக்காக கட்சி பலவழிகளிலும் செயல்பட்டு வருகின்றது. 66 ஆவது ஆண்டு ஆரம்பக்கட்டத்திலேயே கட்சி இதை அமுல்படுத்த பரந்த முன்னணியை உருவாக்கி போராடத் தயாராகின்றது.
வரலாற்றில் சில தவறுகளைக் கம்யூனிஸ்ட் கட்சி செய்திருக்கின்றது. பின்னர் இந்தத் தவறை உணர்ந்து மக்களிடம் மன்னிப்புக் கோரியிருக்கின்றது. இந்தத் தவறுகளுக்குக் காரணம் தந்திரோபாயமாக இருக்கலாம். ஆனால் தவறு தவறுதான். அதை உணர்ந்து மன்னிப்புக் கோருவதோடு நின்றுவிடாது வேறு நல்ல வழிகளைப் பின்பற்றிச் செயல்படுகின்றது.
தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் மாகாண அரசு செயல்பட வேண்டும். அதற்குரிய முழு அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். பரந்துபட்ட அதிகாரப் பரவலாக்கலே இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முடியும். இதற்காக சகல முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். அதற்காக கட்சி பாடுபடும்.
(கட்டுரையாளர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியற்குழு உறுப்பினர். )