இலங்கை இனப்படுகொலையின் சூத்திரதாரியும் உலக அரச பயங்கரவாதிகளில் ஒருவருமான கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவிற்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டு நியூயோர்க் நகரிற்கு சென்றுள்ளார். அங்கு ஐ.நா. பிரதிப் பொதுச்செயலர் ஜான் எலிசனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின் விபரம் குறித்து நேற்று ஐ.நா. பொதுச்செயலரின் பேச்சாளரிடம், இன்னர்சிற்றி பிரஸ் மின்னஞ்சல் மூலம் கேள்வி எழுப்பியிருந்தது.
அதற்கு, ஐ.நா. பிரதி பொதுச்செயலருக்கும் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்புத் தொடர்பான விபரங்கள் இல்லை என்றும், இது உறுப்பு நாடுகளுக்கு இடையிலான வழக்கமான கலந்துரையாடலின் ஒரு பகுதியே என்றும் ஐ.நா. பொதுச்செயலரின் பேச்சாளரினால் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
16ம் திகதி டிசம்பர் மாதம் ஜான் எலிசனுடனான சந்திப்பின் பின்புலம் குறித்துப் பல கேள்விகள் எழுகின்றன. பொதுவாக இவ்வாறான சந்திப்பின் விபரங்கள் பதிவேடுகளில் காணப்படும் இருப்பினும் இச் சந்திப்பு மறைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் போர்க்குற்றத்திற்காக ராஜபக்ச சகோதரர்களை அமரிக்காவும் ஐ.நா உம் தூக்கிலிடப்போவதாக தமிழ் அரசியல் தலைமைகள் அப்பாவித் தமிழர்களை ஏமாற்றிவரும் நிலையில் இச்சந்திப்பு இதற்கு முன்பதான நிகழ்வுகளின் தொடர்ச்சியா என்ற கேள்விகள் எழுகின்றன.
நவம்பர் 21 முதல் 23 வரை நடைபெற்ற அமரிக்க இராணுவத்தின் வருடாந்த மாநாட்டிற்கு இலங்கை இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க அழைக்கப்பட்டிருந்தார். நவம்பர் 24ம் திகதி கேணல் தயா ரத்னாயக்க நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்திற்குச் சென்று உயர்மட்ட உறுப்பினர்களைச் சந்தித்தார்.
குறிப்பாக ஐ.நா அமைதிகாக்கும் படையின் உயர் மட்ட உறுப்பினர்களை அவர் சந்தித்தார் என நியூயோர்க்கில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் செய்தி வெளியிட்டது. சந்திப்பின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இலங்கையில் இரண்டு பிரதான போர்க்குற்றவாளிகளான பாலித கோகண மற்றும் சவேந்திர சில்வா ஆகியோர் ஐ.நாவில் முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளமை தெரிந்ததே.
கோட்டாபய மற்றும் தயா ரத்னாயக்க ஆகியோரின் இரகசியச் சந்திப்புகளின் பின்னணியில் அமரிக்க அரசுடனும் ஐ.நா அமைதிகாக்கும் படையுடனும் புதிய இராணுவ ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமரிக்க இராணுவம் பகுதி பகுதியாக வெளியெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை இனப்படுகொலை இராணுவத்தை அங்கு வேலைக்கு அமர்த்துவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம் பெறுவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ‘யுத்தத் திறமை’ கொண்ட இலங்கை இராணுவத்தை ஆப்கானிஸ்தானில் போரிடுமாறு முன்னை நாள் அமரிக்க பிரதி ராஜங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் கோரிக்கை விடுத்த தகவல் விக்கிலீக்ஸ் கேபிள்களில் வெளியாகியிருந்தது.
ஆப்கானிஸ்தான் யுத்தத்திற்கு கொலைகார்களை வழங்க கோதாபய, ரொபேர் ஓ பிளேக் பேச்சு
அமெரிக்க ஓநாயின் ஈழ அக்கறை !
தொகுப்பு : ராம்