ஸ்வீடிஷ் அமைச்சருக்கு இலங்கை அரசு நுழைவு அனுமதியை மறுத்துள்ளது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதன் தலைமை பொறுப்பில் இருக்கும் செக் குடியரசின் வெளியுறவு அமைச்சர் கேரல் ஸ்வாரன்பர்க், ”இலங்கையின் இந்த முடிவானது மிகப் பெரிய தவறு” என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த நடவடிக்கை ஐரோப்பிய வட்டாரத்தில் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இலங்கை அரசுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதனிடையே;சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அதற்கேற்ப இலங்கை அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம் எனவும் ஸ்வீடனின் வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையிலுள்ள அனைத்து சமூகத்தினரும் தாம் இலங்கையர் என்கிற எண்ணம் ஏற்படும் வகையில் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அங்கு ஸ்திரத்தன்மை ஏற்படப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று வர்ணித்துள்ள கார்ள் பில்ட் அவர்கள், அவர்களை நசுக்கும் நடவடிக்கையை இலங்கை அரசு எடுத்துவரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பையும், மனிதாபிமான நிலைமைகளையும் கவனத்தில் எடுக்க வேண்டிய தருணம் இது என்றும் கூறியுள்ளார். அரசியல் தீர்வு ஒன்றும் முன்வைக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.