மார்ச் 3ஆம் தேதி தொடங்கவுள்ள ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தொடரில் இலங்கை சம்பந்தமாக ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில், அவர் கொடுத்துள்ள பரிந்துரைகள், எதேச்சதிகாரம் மிக்கவையாகவும், இலங்கையின் இறையாண்மையைப் பாதிப்பதாகவும், அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும் அமைந்திருப்பதாகக் கூறி நவி பிள்ளையின் கூற்றுக்களை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
இலங்கையில் யுத்த காலத்தில் நடந்ததாகத் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட சர்வதேச சட்ட விதி மீறல்கள் போன்றவை சுயாதீனமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை மூலமாக விசாரிக்கப்பட வேண்டும் என ஆணையாளர் நவி பரிந்துரைத்திருந்தார்.
சர்வதேசப் பொறிமுறை எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதை நவநீதம் பிள்ளை கூறவில்லை. இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அது தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் பொறிமுறைகளைப் போன்று அமைய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
தென்னாபிரிக்காவின் போர்க்குற்றப் பொறிமுறை முக்கியமான போர்க்குற்றவாளிகளைத் தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்கான வழிமுறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. தென்னாபிரிக்கா தோற்றுவித்த உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு நிறவெறி அரசின் கோரமான கொலையாளிகளைப் பாதுகாக்கவும், ஆயுதமேந்திய போராளிகள் பலரைத் தண்டிக்கவும் உதவியது. நிறவெறி அரசின் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கோரியதன் காரணமாகத் தண்டிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் கறுப்பின ஆபிரிக்கர்கள் கிளார்க்கிற்கு வழங்கப்பட்ட தண்டனையற்ற மன்னிப்பிற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
ஐரோப்பிய நாடுகளதும், அமெரிக்க அரசினதும் உதவியோடு நடத்தப்பட்ட இந்த விசாரணை பெரும் பணச்செலவில் உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது. முன்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவாரவிருந்து ஐரோப்பிய அடியாளாக மாறிய நெல்சன் மண்டேலா போர்க்குற்றவாளிகளை விசாரணை என்ற பெயரில் காப்பாற்றி உலகவங்கிக்கும் ஐ.எம்.எப் இற்கும் பல்தேசிய வியாபாரிகளுக்கும் நாட்டையும் மக்களின் தியாகங்களை விற்பனை செய்தார். இந்த நன்றிக்கடனுக்காக மண்டேலாவின் மரணச்சடங்கில் உலகின் ஒடுக்கும் நாடுகள் அனைத்தும் கலந்துகொண்டன. மண்டேலாவிம் போலி ஏகாதிபத்திய எதிர்ப்பு மரணச்சடங்கில் கிழிந்து தொங்கியது.
போர்க்குற்றவாளிகளைத் தண்டித்த நூரன்பேர்க் விசாரணைகளுக்கு மாறாக அவர்களைக் காப்பாற்றிய தென்னாபிரிக்க முறைமையும் சர்வதேசப் பொறிமுறைகளுள் ஒன்றாகவே பிரச்சாரம் செய்யப்பட்டது.
தமது எஜமானர்களான ஏகாதிபத்திய அரசுகளிடமிருந்து காப்பாற்றப்படுவோம் என இலங்கை அரசு தெரிந்துகொண்டும் தண்டிக்கப்படப் போகிறோம் என பிரச்சாரம் செய்து சிங்கள மக்களிடமிருந்து அனுதாப வாக்குகளைப் பெற்றுக்கொள்கிறது.
இதன் அடிப்படையிலேயே விசாரணையை எதிர்க்கிறது. மக்கள் மத்தியில் போராட்டங்கள் தோன்றாமல் ஐ.நாவையும் அமெரிக்காவையும் காட்டி இனச்சுத்திகரிப்பை நடத்தி முடிக்கவும் இது அவர்களுக்கு வழிசெய்கிறது.
ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கூற்றுக்களும் பரிந்துரைகளும் தவறான மற்றும் ஆதாரமற்ற தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டவை என்று இலங்கை அரசு வாதிட்டுள்ளது.
நவநீதம் பிள்ளை இலங்கைக்கு எதிராக கொண்டுள்ள மனப்பாங்கையும், பக்கச்சார்பையும் பிரதிபலிப்பதாக அவருடைய முடிவுகளும் பரிந்துரைகளும் அமைந்திருப்பதாக இலங்கை அரசு குற்றம்சாட்டுகிறது
சுயாதீனமான சர்வதேச விசாரணை வேண்டும் என்ற ஐநா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரை, இலங்கைக்கு எதிராக தொடர்ந்து அவர் முன்னெடுக்கும் முயற்சிகளையே எடுத்துக்காட்டுவதாகவும், இலங்கைக்கு எதிரான சர்வதேச ஆணையாளரின் செயல்திட்டத்தினால் சர்வதேச சமூகம் தவறாக வழிநடத்தப்பட்டுவிடக்கூடாது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் யுத்த காலத்து குற்றங்களுக்கான பொறுப்புகூறல் தொடர்பில் பல்வேறு பொறிமுறைகள் செயல்பட்டு வருவதாகவும், அவை சுயாதீனமாகவும் நம்பகத்தன்மையுடனும் செயல்படவில்லை என்று ஐநா மனித உரிமை ஆணையாளர் குற்றம்சாட்டுவது ஆதாரமற்றது என்றும் இலங்கை அரசு வாதிட்டுள்ளது.
இலங்கையில் உண்மை, நீதியையும் நிலைநாட்டுவது, பாதிப்புகளை நிவர்த்தி செய்வது, எதிர்காலத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பது போன்ற விஷயங்களில் ஐநாவின் விசேட பொறிமுறைகளுடன் இலங்கை அரசு நன்கு ஒத்துழைத்து வந்துள்ளதாக அரசாங்கத்தின் பதிலில் கூறப்பட்டுள்ளது.
சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் கொண்டுவர உள்நாட்டு அளவிலேயே பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு உயர்பாதுகாப்பு வலயங்களாக இருந்த பல இடங்கள் இப்போது மக்கள் குடியேற்றத்துக்கான இடங்களாக மாறிவிட்டதாகவும், சிவிலியன்களுடைய சொத்துக்கள் சிலவற்றில் இராணுவத்தினர் இருந்தாலும் அவையெல்லாம் கடந்த இருபது இருபத்தைந்து வருடங்களாக ஆட்புழக்கம் இல்லாமல் இருந்த இடங்கள் என்றும், சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு யுத்தம் முடிந்த பின்னர் இராணுவத்தின் கைகளில் இருந்து பொலிசாரிடம் கைமாற்றப்பட்டுள்ளது என்றும் தனது பதிலில் இலங்கை அரசு குறிப்பிட்டுள்ளது.
குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கான புதிய சட்டம் ஒன்றை கொண்டுவருவதற்கான வேலைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுதவிர முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து சமூகத்தில் இணைய வைப்பதிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக அது கூறுகிறது.
இலங்கையில் மதச் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் கூறுவது தவறு என்றும், இலங்கையில் மத சுதந்திரம் அரசியல் சாசன ரீதியாக உறுதிசெய்யப்பட்டுள்ளது எனவும், இந்த உரிமை மீறப்படுவதாக ஆதாரங்களுடன் கூடிய குற்றச்சாட்டுகள் வரும்போது அவை உரிய முறையில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசு நாஸி பாணியிலான தாக்குதல்களை முஸ்லிம் தமிழர்கள் மீது தனது துணைக்குழுக்கள் ஊடாகக் கட்டவிழ்த்துவிடும் அதே வேளை வடக்கிழக்கைச் சிங்கள பௌத்த மயமாக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது.