13 வது திருத்தச்சட்டம் என்ற இந்திய அரசால் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் மீது திணிக்கப்பட்ட அரசியல் சட்டமானது இலங்கையில் எல்லைக்குள் எவ்வித குறிப்பான மாற்றங்களையும் எடுத்துவரப் போவதில்லை. இப்பொதுள்ள இராணுவ ஆக்கிரமிப்பு, பௌத்த சிங்கள மயமாக்கல், திட்டமிட்ட வலிந்த குடியேற்றங்கள் என்பன நிறுத்தப்படுவதற்கான எவ்வித உறுதியான உத்தரவாதமும் இல்லை. வடக்குக் கிழக்கு இணைந்த பொதுவான நிலப்பரப்பு என்பது அதற்கான அங்க்கீகாரம் பெறப்படாத நிலையில் செல்லுபடியற்றது.
இந்த நிலையில் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கூட வழங்குவதற்கு இலங்கையின் எந்தப் பேரினவாதக் கட்சியும் தயார் நிலையில் இல்லை.
இன்று மற்றொரு பேரினவாதக் கட்சியும் இலங்கையின் எதிர்க்கட்சியுமான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் கட்சிக்கு எவ்வகையிலும் குறைவற்ர வகையில் பேரினவாதத்தை விதைக்கும் இலங்கையின் அரசியலிற்கு எதிரான உலகப் பொதுப்புத்தியை உருவாக்குதலும், ஜனநாயக இடைவெளியை உருவாக்குதலும், சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தைத் தொடர்வதும் தவிர்க்கவியலாத ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலாக மாற்றம் அடையும் என்பதை கரு ஜெயசூரியவின் வாக்குமூலம் மீண்டும் உறுதிசெய்கிறது.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபை நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும் என்று இன்று வலியுறுத்தப்படுகிறது.அவ்வாறு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால், அவை தவறாகப் பயன்படுத்தப்படக் கூடும் என்ற சந்தேகமும் தயக்கமும் நிலவுகிறது.மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால், வெளிச்சக்திகள் அதில் தலையிட்டு, ஊடுருவி தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். அதனால் எதிர் காலத்தில் கிளர்ச்சிகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதனாலேயே பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதை நாம் எதிர்க்கிறோம்.
இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமானால், இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது போன்ற அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளலாம்.அவசரகாலச் சட்டம், பயங்கரவாத தடுப்புச் சட்டம் போன்றவற்றைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுவதால் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சட்டங்களைத் தொடர்ந்து நடைமுறையில் வைத்திருப்பதால், எமது நாட்டைப் பயங்கரவாத நாடாகவே உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.இந்த நிலையை நீக்கி, உடனடியாக இந்தச் சட்டங்கள் நீக்கப்படவேண்டும் என்றும் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க. தற்போது மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுவதை எதிர்க்கின்ற போதும், 1987 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் அந்தக் கட்சியின் முன்னாள் தலைவரான ஜெ.ஆர்.ஜெவர்த்தனாவே கையெழுத்திட்டிருந்தார். அந்த ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தில் மாகாணங்களுக்குப் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.