பொதுமக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களின் மீது இதுவரை காலமும் நடத்தப்பட்ட கனரக ஆயுத தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் நேற்றைய தினம் விடுத்துள்ள அறிக்கை மிகவும் பாரதூரமானதென தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை காலமும் அரசாங்கப் படையினர் பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீது பலம் வாய்ந்த ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளமை இதன் மூலம் புலனாவதாக மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மைய யுத்த நடவடிக்கைகளின் போது கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை என அரசாங்கம் மறுப்பு தெரிவித்து வந்தது. எனினும் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் பொதுமக்கள் வாழும் இடங்கள் மீது கனரக ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கப் படையினரின் மிலேச்சத்தனமான இராணுவ தந்திரோபாயங்கள் இறுதியில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை இலங்கை தொடர்பான விவகாரங்களின் போது தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொள்ளும் நடவடிக்கையைக் கைவிட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அரசாங்கப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள போர் குற்றச் செயல்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை குழுவொன்று நிறுவப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மோதல் தவிர்ப்பு வலய அறிவிப்பு, கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை என பல்வேறு நியாயங்களை அரசாங்கம் உலக சமூகத்திற்கு முன்வைத்த போதிலும், செய்மதி மற்றும் புகைப்பட ஆதாரங்களின் மூலம் கனரக ஆயுதப் பயன்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக பொதுமக்கள் வாழும் இடங்கள் மீது அரசாங்கப் படையினர் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களை நடத்தி வருவதாக பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையில் நடைபெற்ற யுத்தம் காரணமாக சுமார் 6400 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 13000 பேர் காயமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களின் தரம் உயர்த்தப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததென மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.