இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் விசேட பிரதிநிதிகள் இருவரும் இலங்கையில் யுத்த நிறுத்தமொன்றை அமுல்படுத்துமாறு வலியுறுத்தவில்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.”போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது பற்றி இரு தரப்பிலிருந்தும் எதுவும் பேசப்படவில்லை’ என்றும் அவர் கூறியிருக்கிறார்
கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புக்கு வந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ் சங்கர் மேனன் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து தமிழ் நாட்டிலிருந்து மத்திய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுவரும் அழுத்தங்களைத் தெரியப்படுத்தியதாக கோதபாய கொழும்பு ஊடகமொன்றிடம் கூறினார்.
இலங்கை வந்த அவர்கள் இருவரையும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு நேரடியாகச் சென்று நிலைமைய அறிந்துகொள்ளுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்ததாகவும், எனினும், நேரம் போதாமையினால் அவர்கள் அங்கு செல்லவில்லையெனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கு அரசாங்கம் எடுத்திருக்கும் அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி, இந்தியத் தூதுவர்களுக்கு விளக்கமளித்ததாக அவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் மோதல்களை நிறுத்த வேண்டுமென இந்தியப் பிரதமர், இலங்கை ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட விசேட பிரதிநிதிகள் முன்வைத்ததாக இந்திய உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துத் தொடர்பாகவே கோதபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
அதேநேரம், இலங்கையில் நடைபெறும் மோதலானது நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை என்பதால் அமெரிக்காவோ, பிரித்தானியாவோ அதில் தலையிட முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார்.
எனினும், இலங்கையில் நடைபெறும் மோதல்கள் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென அமெரிக்கா காங்கிரஸ், வெள்ளைமாளிகை, இந்தியா, பிரித்தானிய, ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா. பாதுகாப்புச் சபை போன்றன கோரிக்கை விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
எம்.கே.நாராயணன்சிவ் சங்கர் மேனன் இருவரும் இந்தியாவின் இறையாண்மைக்கு பதில் சொல்லும் நாள் அருகில் உள்ளது.